கன்னியாகுமரியின் முதல் நாள் பயணத்தை (10.3.2026) முடித்துக்கொண்டு மறுநாள் காலை சூரிய உதயம் பார்ப்பதற்காக தங்கும் விடுதியிலிருந்து கிளம்பினோம்.
11.3.2026 காலை சூரியன் உதிப்பதை பார்த்தோம். அங்கு, படகில் செல்வதற்கு வரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக்கொண்டு விவேகானந்தர்பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைக் கண்டோம். விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையை கண்ணாடிப்பாலம் வழியாகச் சென்று பார்த்தோம்.
பின்னர் கன்னியாகுமரியிலிருந்து ஒரு வாடகை டாக்ஸியில் நாகர்கோயில் சென்றோம். முதலில் அங்குள்ள நாகநாதர் சுவாமி கோயிலில் மூலவராக உள்ள ஐந்து தலைநாகரைத் தரிசித்தோம். அக்கோயிலைச் பிரகாரத்தைச் சுற்றியும் நாகங்கள் அதிக அளவில் இருந்தன.
இக்கோயிலில் வேண்டிக்கொண்டு பால், குங்குமம், மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு பக்தர்கள் அரச மரத்தைச் சுற்றியுள்ள நாகர் சிலைகளின் மேல் ஊற்றுகிறார்கள், இங்கு மஞ்சளைப் பிரசாதமாகத் தருகிறார்கள். இவ்வூரில் உள்ளவர்களை நாகம் தீண்டி யாரும் மரணம் அடைந்தது கிடையாது, அப்படியே தீண்டினாலும் பிழைத்துக்கொள்வார்கள் என அங்கு கூறினர்.
திருவல்லம் பராசுராமர் கோயிலில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களிலும், மாதந்திர அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் பிதுர் தர்ப்பணம் கொடுக்க பெருமளவில் கூடுவதாகவும், அந்த நாட்களில் கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருக்கும் என்றும் அங்கு போய் பாருங்கள் என டிரைவர் கூறினார். பின்னர் அங்கு அழைத்துச் சென்றார். தம் முன்னோர்களுக்காகத் தர்ப்பணம் கொடுக்கவும், திருமணத் தடைகள் நீங்குவதற்கும் இங்கு வேண்டிக்கொண்டு பலர் வருவதாக கோயிலில் கூறினர்.

அடுத்து, தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள சுசீந்திரம் சென்றோம். அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க அவன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் என்று கூறினர். சுசீ என்றால் தூய்மை என்றும், இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என்றும் அழைக்கின்றனர். இக் கோயிலின் அமைப்பைப் பார்ப்பதற்கு சில இடங்கள் ராமேஸ்வரம் போல் இருந்தது. பிரகாரத்தில் உள்ள சிற்பங்களைப் பார்த்தபோது ஆவுடையார் கோயிலில் உள்ள சிற்பங்கள் நினைவிற்கு வந்தன. இங்கு அதிகமாக பாவை விளக்கு சிற்பங்கள் காணப்பட்டன. குளத்தில் உள்ள மண்டபம் அழகாகவும் இருந்தது.


அங்கிருந்து திருப்பதி கோயிலைப் போன்ற வெங்கேடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். அங்கு ராமாயணம் படக்காட்சிகளாகச் சுருக்கமாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இக்கோயிலில் மாதம் ஒரு முறை திருப்பதியிலிருந்து லட்டு பிரசாதமாக வரும் என்று கூறினர்.
வரும் வழியில் மெழுகு சிலை மியூசியம் சென்றோம். அது சுமாராகத்தான் இருந்தது. மியூசியத்தைப் பார்ப்பதற்குக் கட்டணமாக ஆளுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்த அளவிற்கு உள்ளே சிலைகள் இல்லை. அதைப்பார்த்துவிட்டு வந்து விட்டோம்.
அனைத்து இடங்களையும் பார்த்தபின்னர் கன்னியாகுமரிக்குத் திரும்பினோம். நிறைவாக, அங்குள்ள குகநாதீஸ்வரர் கோயிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு தங்கும் விடுதி வந்துசேர்ந்தோம்.
Comments
Post a Comment