Friday, 2 September 2016

ஜாலம் காட்டும் ஜலகண்டேஸ்வரர் கோயில் : தினமணி

இன்றைய (2 செப்டம்பர் 2016) நாளிட்ட தினமணியில் வெளியான கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். எனது கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழுக்கு நன்றி.
வேலூர் என்றால் நமக்கு கோட்டையும் அதன் மதில்களும் நினைவுக்கு வரும். முன்பொரு முறை சுற்றுலா சென்றபோது கோட்டையின் மதிலை மட்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இரவு அதிக நேரமாகிவிட்டதால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அண்மையில் கோட்டையின் உள்ளே உள்ள கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெருமை இக்கோட்டைக்குள்ளது. இக்கோட்டைக்குள் கோயில் அமைந்துள்ளது. அகழியின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. தெற்குப் புறத்தில் தண்ணீர் காணப்படவில்லை.   
கோட்டையின் மதில்களும் அகழியும் பார்க்க அழகாக உள்ளன. வேலூர் கோட்டையைப் போல இக்கோயில் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்டதாகவும், விஜயநகர கட்டிடப்பாணியின் இறுதி வடிவில் அமைந்துள்ளதாகவும் அங்குள்ள கல்வெட்டுக் குறிப்பின் மூலமாக அறியமுடிந்தது. 

தெற்கு நோக்கியுள்ள ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தின் வாயிலில் மரத்தாலான பெரிய கதவுகள் உள்ளன. அதை இரும்பால் ஆன தாமரை மலர்கள் அலங்கரிக்கின்றன. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோயிலின் வலப்புறம் குளம் உள்ளது. இடப்புறம் கல்யாண மண்டபம் உள்ளது. இம்மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளது. அதில் அழகிய தூண்கள் காணப்படுகின்றன. இம்மண்டபத்தின் மேற்கூரையிலுள்ள சிற்பங்களையும், கொடுங்கையையும் பார்க்கும்போது நமக்கு ஆவுடையார் கோயில் சிற்பங்கள் நினைவுக்கு வருகின்றன. மற்ற இரண்டு மண்டபங்களைவிட இந்த மண்டபத்தில்தான் அதிகமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. மண்டபத்தின் வெளித்தூண்களில் இரண்டு ஆள் உயரத்திற்கான யாழி, குதிரை மீதமர்ந்த வீரர்களின் சிலைகள் அமைந்துள்ளதைப் பார்ப்பதற்கு இயற்கையாக இருக்கிறது. மற்ற தூண்களில் விநாயகர், நடராஜர், விஷ்ணு, மகிஷாசுரமர்த்தினி, நரசிம்மர், வில்லுடன் இராமர், ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன. கண்ணப்பர், மார்க்கண்டேயர் கதைகளைச் சிற்பங்களாகக் காண முடிந்தது. மண்டபத்தின் மத்தியில் அழகான மேடையொன்று ஆமையின் முதுகில் இருப்பதுபோல வடிக்கப்பட்டுள்ளது. அந்த மேடைக்கருகில் உள்ள தூண்களில் சாளரம் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ளன. மண்டபத்தின் கூரையில் மூன்று சுற்றுகளாக கிளிகள் தேங்காயை கொத்த அமர்ந்திருப்பது போல அழகாக அமைந்துள்ளது. அந்த தேங்காய் மட்டும் சுழலும் என்று அங்கிருந்தோர் கூறினர். 
அந்த மண்டபத்திலிருந்து வெளிச்சுற்றில் சுற்றிவரும்போது வசந்த மண்டபம், யாக சாலை, மடப்பள்ளி ஆகியவை உள்ளன. இவற்றுக்கிடையே மூன்று மண்டபங்கள் காணப்படுகின்றன. குளத்தின் அருகேயுள்ள இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் வலம்புரி விநாயகர் கம்பீரமாக இருக்கிறார். அடுத்து செல்வ விநாயகர் சன்னதி, வெங்கடேசப்பெருமாள் சன்னதி, வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. வெங்கடேசப் பெருமாள் திருப்பதியில் உள்ளவாறு இங்கு காணப்படுகிறார். இச்சன்னதிகளை அடுத்து அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள அம்மன் அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறார்.  அம்மனை தரிசித்துவிட்டு மூலவரைப் பார்க்கச் செல்வது போன்ற அமைப்பில் கோயில் உள்ளது. அம்மன் சன்னதியில் விநாயகர், மாதேஸ்வரி, வைஷ்ணவி, துர்க்கை, பிராஹி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். கருவறையின் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர். அம்மன் சன்னதி எதிரே நவசக்தி ஜோதி உள்ளது. ஜோதியின் அருகே 1981இல் கார்த்திகை மாதத்தில் குருஜி சுந்தரராம்சுவாமி ஏற்றிய தீபம் என்ற குறிப்பு காணப்படுகிறது. திருச்சுற்றில் வரும்போது கிணறு உள்ளது. அருகே நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. அடுத்து, கால பைரவர், சனீஸ்வரர் உள்ளனர். 
அதனை அடுத்து மூலவர் சன்னதி உள்ளது. கொடி மரமும், பலிபீடமும் உள்ளன. அடுத்து நந்திதேவர் உள்ளார்.  அருகே ஆதிசங்கரர் உள்ளார். நந்தி தேவரை அடுத்து மூலவர் சன்னதியின் முன் மண்டபம் உள்ளது. அருகே நடராஜர் சன்னதி காணப்படுகிறது. இங்குள்ள மூலவர் முன்பு ஸ்வரகண்டேஸ்வரர் என்றழைக்கப்பட்டதாகவும் காலப்போக்கில் ஜலகண்டேஸ்வரர் என்றழைக்கப்படுவதாகவும் கூறினர். மூலவர் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.  

மூலவரை வணங்கிவிட்டு வரும்போது கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். அருகே 63 நாயன்மார்கள் வரிசையாக உள்ளனர். நடராஜர், சிவகாமி, அப்பர், சுந்தரர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், பிரம்மா, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர் ஆகியோர் உள்ளனர்.        

கருவறையும், உண்ணாழியும் அதனுடன் ஒருமித்த மகாமண்டபமும் கூடியது. மகாமண்டபத்து வடபுறம் நடராஜருக்குரிய சிறிய சன்னதி அறையின் அடித்தளத்தில் நிலவறையொன்றுண்டு. வெளிப்பிரகாரத்தில்  வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர் சன்னதிகள் அமைந்துள்ளன.

கோட்டைக்குள் அருங்காட்சியகம் உள்ளது. அதில் நாணயங்கள், தபால் தலைகள், பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் உடல்கள், முதுமக்கள் தாழி, சிலைகள் உள்ளன. பள்ளி மாணவர்கள் கூட்டம்கூட்டமாக அருங்காட்சியகத்திற்கு வந்து போவதைக் காணமுடிந்தது.  

நீண்ட கால ஆயுளுக்கும், தடை பட்ட திருமணம் இனிதே நிறைவேறவும், கண்ணேறு விலக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.  இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டையில் உள்ள கோயிலைக் காண்போம். இறையருளைப் பெறுவோம்.  

தினமணில் இக்கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் வாசிக்க அன்போடு அழைக்கிறேன்.
http://epaper.dinamani.com/920649/Vellimani/02092016#page/4/1