Friday, 6 May 2016

குருக்கத்தி மாசி பெரியசாமி : தினமணி

இன்றைய (6.5.2016) தினமணி, வெள்ளிமணியில் வந்துள்ள எனது கட்டுரையின் விரிவான வடிவம், அதிகமான புகைப்படங்களுடன். (நன்றி : தினமணி)


அமைவிடம்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோயில் கிராமத்தில் குருக்கத்தி என்னும் ஊரில் மாசி பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. வெள்ளக்கோயில்-கரூர் சாலையில் 3 கிமீ தொலைவிலும்,  கரூர்-வெள்ளக்கோயில் சாலையில் 40 கிமீ தொலைவிலும் இக்கோயில் உள்ளது. 

வரலாறு
கொல்லிமலையிலுள்ள மாசி பெரியண்ணசாமியை பல இனத்தவர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவ்வாறாக மலையேறி செல்ல இயலாத நிலையில்  நாடார் இனத்தைச் சேர்ந்த குல பங்காளிகள் சிலர் ஒன்றுசேர்ந்து கொல்லிமலையிலிருந்து பிடிமண்ணை எடுத்துவந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு குருக்கத்தியில் வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டில் பெரியசாமி பல இடங்களில் வழிபடப்படுகிறார். குருக்கத்தியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதப் பௌர்ணமியில் விழா நடத்தி வருகின்றார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகச்சிறிய கோயிலாக சுற்றுச்சுவர் எதுவுமின்றி இக்கோயில் இருந்தது. திருப்பணி நடைபெற்று 8.2.2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயிலின் வாசலைக் கடந்து உள்ளே செல்லும்போது முன் மண்டபத்தில் வேல், சூலாயுதம், அரிவாள், ஈட்டி போன்றவை காணப்படுகின்றன. அருகில் வேப்ப மரம் உள்ளது. கருவறையில் மாசி பெரியசாமி சிங்கத்தின்மீது அமர்ந்த நிலையில் உள்ளார். கருவறைக்கு முன்பாக இருபுறமும் வாயிற்காவலர்கள் உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், காமாட்சி சன்னதிகள் உள்ளன. பெரியசாமியின் தங்கையாக காமாட்சியைக் கூறுகின்றனர். பெரியசாமிக்கு பூசை நடந்தபின்னர், விநாயகருக்கும், காமாட்சிக்கும் பூசை செய்கின்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் இக்கோயிலில் பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்துகின்றனர். இந்த ஆண்டு இவ்விழா மாசி மாதம் மூன்று நாள்கள் சிறப்பாக நடைபெற்றன. 
கோயில் நுழைவாயில்

வேப்ப மரத்தடியில் வேல், சூலாயுதம், அரிவாள், ஈட்டி 

பெரியசாமியின் புகழ் பாடுதல்

பச்சைப்பந்தல்
மண் பிடி எனப்படும் பதுவு

பொங்கல் இடுதல்
  
சந்தனக்காப்பு அலங்காரத்தில் மாசி பெரியசாமி
புடவைக்காரியம்மன் பூசை
முதல் நாள் காலையில் கொடுமுடியில் காவிரியாற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துவருகின்றார்கள். அதில் நாணலையும், வேப்பந்தழையையும் வைத்து குருக்கத்திக்குக் கொண்டுவருகின்றார்கள்.  மதியம் முதல் பூசை என்ற நிலையில் புடவைக்காரியம்மனை நினைத்து பூசை செய்கின்றனர். அந்த அம்மனுக்கு உருவம் எதுவும் இல்லாத நிலையில் மனதில் நினைத்து அவ்வாறு செய்கின்றனர். அம்மனுக்கு செம்மறியாட்டினை பலியிட்டு, மாமன் மச்சான் முறையிலுள்ளோர் சமைத்து உண்கின்றனர். பங்காளிகள் இந்த விருந்தில் கலந்துகொள்ளும் மரபு இல்லை என்று கூறினர். 

பொங்கல் வைத்தல் தொடங்கி எறிகாவல் பூசை
இரண்டாம் நாள் மாலை அனைத்து குடும்பத்தவரும் வரிசையாக கல் வைத்து அடுப்பு அமைத்து புது மண் பானையில் பொங்கல் பொங்குகின்றனர். சுமார் 30 குடும்பத்தினர் அவ்வாறாக பொங்கல் வைக்கும் காட்சியைக் கண்டோம். பின்னர் அப்பொங்கலை கோயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பச்சைப் பந்தலில் வைத்துவிடுகின்றனர். அந்தப் பந்தலுக்கு முன்பாக கரும்பாலான பந்தல்களை பூமாலை போட்டு வைத்துள்ளனர். பந்தலுக்கு முன்பாக சதுர வாக்கில் நான்கு புறமும் சுற்றி மண்ணைப் பிடியாகப் பிடித்து வைக்கின்றனர். இந்த மண் பிடியை பதுவு என்கின்றனர். அங்கு நடக்கும் பூசையை பச்சைப்பூசை என்று கூறுகின்றார்கள். அதைத்தொடர்நது பெரியசாமி முன்பாக கோயிலில் இருக்கும் கரகம், வேல், சூலாயுதம், அரிவாள், ஈட்டி போன்றவற்றை சாலையோரம் உள்ள கிணற்றடிக்கு எடுத்துச் செல்கின்றார்கள். அனைத்தையும் கழுவி, மஞ்சள் நீராட்டி, மலர் மாலை அணிவித்து விபூதி, குங்குமம் வைத்து வணங்குகிறார்கள். பின்னர் அங்கிருந்து மேளதாளத்துடன் உடுக்கடித்துக்கொண்டு கோயிலை சுற்றி வலம் வருகிறார்கள். அவ்வாறு வலம் வரும்போது பலருக்கு அருள் வந்துவிடுகிறது. அருள் வந்த நிலையில் உள்ளோர் எதுவும் பேசுவதில்லை. அனைவரும் தாளத்திற்கேற்ப ஆடிக்கொண்டே சன்னதிக்கு வருகின்றார்கள். அவ்வாறு வரும்போது பார்க்கும் அனைவரும் தன்னை மறந்து இறை சக்தியைப் பெறுவதைக் காணமுடியும். சாமியை வரவழைப்பதற்காக உடுக்கடித்து பாட்டு பாடுகின்றார்கள். 

இரவு பூசை நடக்கும்போது பூசாரி வாயை துணியால் கட்டிக்கொண்டு பூசை செய்கின்றார். பெரியசாமி சக்தி வாய்ந்த தெய்வமென்றும் அதனால் அவ்வாறு செய்வதாகவும் கூறினர். முதலில் பங்காளிகள் பொதுவாக ஒரு ஆட்டினையும், தொடர்ந்து தத்தம் வேண்டுதல்படியும் பலியிடுகின்றனர். சேவல், ஆடு, பன்றி என்ற வகையில் இந்த பலி அமைகின்றது.  படைக்க வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொங்கல் பானையிலிருந்தும் ஒவ்வொரு கவளத்தினை எடுத்து அதில் ரத்தத்தைக் கலந்து மண் சட்டியில் வைத்து வானத்தை நோக்கி வீசுகின்றனர். அவ்வாறு எறியும்போது பெண்களையும், குழந்தைகளையும் அவ்விடத்தைவிட்டு அகலும்படிக் கூறுகின்றார்கள். விளக்குகளை அணைத்துவிடுகின்றனர். மேலே அவ்வாறு வீசப்படுவது கீழே வருவதில்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள். பின்னர் அவரவர்கள் படையலுக்கு வைத்திருந்த பொங்கல் பானையுடன் அர்ச்சனை செய்யப்பட்ட தட்டினை இரவு நடுநிசிக்கு மேல் தருகின்றார்கள். 

விருந்து           
இரண்டாம் நாள் இரவு பலியிடப்பட்டதை மூன்றாம் நாள் காலையில் சமைத்து விருந்தாகப் படைக்கின்றார்கள். பன்றிக்கறியை மட்டும் தனியாக சமைத்து விருப்பமுள்ளவர்கள் மட்டும் உண்கின்றார்கள். ஒரு பெண்மணி பன்றிக்கறியை மிகவும் ஈடுபாட்டோடு ருசித்து உண்பதைக் காணமுடிந்தது. விழாவிற்கு வந்திருந்த உறவினர்களும், பங்காளிகளும் நன்கொடை கொடுக்கின்றனர். அதைத் தவிர அன்னதானத்திற்கு அரிசி, மளிகைப்பொருள்களையும், இதர பொருள்களையும் தருகின்றனர். காலை ஆரம்பிக்கும் விருந்தானது தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. விழா நிகழ்வாக வந்திருந்தோருக்கு மாசி பெரியசாமி கோயில் பிரசாதமாக  விபூதி, குங்குமம், வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுத்து மகிழ்கின்றனர். உறவினர்களும், நண்பர்களும் ஒன்றுசேரும் இனிய நாளாக இந்த இறை வழிபாட்டு நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. இந்த விழா தற்போது 2016இல் நடைபெற்ற நிலையில் அடுத்து மூன்றாண்டுகள் கழித்து 2019இல் நடைபெறும் என்று கூறி அவ்விழாவிற்கு வர அன்போடு கேட்டுக்கொண்டார்கள்.   
----------------------------------------------------------------------
தினமணியில் கட்டுரையை பின்வரும் இணைப்பில் வாசிக்க அன்போடு அழைக்கிறேன்.
குருக்கத்தி மாசி பெரியசாமி 
----------------------------------------------------------------------


8 comments:

 1. வாழ்த்துகள் எமது தொடரட்டும் மென்மேலும்....

  ReplyDelete
 2. எனக்கு என்ன கருத்து சொல்வது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு குலத்தவருக்கு ஒவ்வொரு தனிக் கடவுள் எல்லாமே நம்பிக்கை குறித்தது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வாழ்த்துகள். நாட்டுப்புறவியல் ஆய்வுக்கு அரிய செய்தியாக இது உதவும். பாராட்டுகள்.

  ReplyDelete
 4. பத்திரிக்கையில் கட்டுரை வெளியானமைக்கு வாழ்த்துக்கள் அம்மா!

  ReplyDelete
 5. அறியாத செய்தியை "மிக அருமையான எழுத்து நடையில்" பகிர்ந்தற்கு பாராட்டுக்கள். இந்த எழுத்து திறமையை வைத்து மேலும் பல சமுக செய்திகளை, வாழ்க்கை அனுபவங்களை பதிவாக எழுதி வெளியிடலாமே.....

  ReplyDelete
 6. Mr.S.V.venugopalan(thro'email: sv.venu@gmail.com)
  யெப்பா அலறவைக்கும் சாமியைப் பற்றி நேர்த்தியாக ஒரு தொகுப்பு. வாழ்த்துக்கள்...
  நாட்டார் சாமிகளில் ஒன்றாகவே இருக்க வேண்டும் மாசி பெரியசாமியும். தேடித் பார்த்தால் கிடைக்கக் கூடும் முழுக் கதையும்... வழிவழியாக பல தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கும் சாமிகளில் ஒன்று என்றே நினைக்கிறேன்.
  எஸ் வி வி

  ReplyDelete
 7. தங்களின் குருக்கத்தி மாசி பெரியசாமி கோயில் பற்றிய கட்டுரையைப் படித்தேன். எனது குலதெய்வம் பெரியாண்டவர், பெரியம்மா சுவாமி. எனது தந்தையின் தந்தை பெயர் ‘குருக்கிட்டசாமி’ நாடஇந்தப் பெயருக்கும் குருக்கத்தி பெரியசாமி என்ற பெயருக்கும் சம்பந்தம் இருப்பதுபோல் தெரிகின்றது. ஆனால் குருக்கத்தியில் கோயில் ஆரம்பித்து 30 வருடங்கள் ஆகின்றது என எழுதியுள்ளீர்கள். எங்கள் குலதெய்வ வழிபாட்டிலும் சீலைக்காரியம்மனுக்கு பூஜைகள் செய்கின்றோம். 30 ஆண்டுகளாக அல்லது 300 ஆண்டுகளா என்பதே எனக்கு சந்தேகம். எனக்கு தாங்கள் பதில் தரவிரும்பினால் எனது மெயில் mbcrajesh@gmail.com; எனது பெயர் ராஜேஷ்குமார் (மின்னஞ்சல் மூலமாக)

  ReplyDelete
  Replies
  1. (திரு ராஜேஷ்குமாருக்கு அனுப்பிய மறுமொழி)
   வணக்கம். இது எங்கள் தங்கைவீட்டு குல தெய்வமாகும். குருக்கத்தியில் 30 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டது. நாங்கள் அங்கு சென்ற பயணத்தின் போது திரட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டது. நன்றி. ஜ.பாக்கியவதி

   Delete