Thursday, 17 November 2016

பழுவூர் உலா : மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

அண்மையில் பழுவூரிலுள்ள கோயில்களுக்குச் சென்றிருந்தோம். அவற்றில் மேலப்பழுவூர் கோயிலைப் பற்றி இந்திரன் விமோசனம் பெற்ற திருத்தலம் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இன்றைய தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் மேம்பட்ட வடிவினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தினமணி இதழுக்கு நன்றி. 
-------------------------------- 
மேலப்பழுவூர் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் ஆன இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.  

பழுவேட்டரையர்களின் தலைநகராக விளங்கிய இவ்வூர் மன்னு பெரும்பழுவூர் என்று அழைக்கப்படும் பெருமையை உடையது. சாபம் நீங்குவதற்காக இந்திரன் மதுரையில் தவம் செய்தபோது அசரீரி இந்த ஊருக்கு வரும்படி கூறியதால் இந்திரன் வந்து இத்தல இறைவனை வணங்கி சாப விமோட்சனம் பெற்றதாகக் கூறுகின்றனர். இத்தலம் ஜமதக்னி ரிஷி வழிபட்ட பெருமையுடையதென்றும், தாயைப் கொன்ற பரசுராமரின் பாவம் நீங்கிய வகையில் பரசுராமர் தீர்த்தம் பெற்ற தலமென்றும் கூறுகின்றனர்.


இக்கோயில் சாலையிலிருந்து கீழே பள்ளத்தில் இறங்கி செல்வது போன்ற நிலையில் உள்ளது. இறங்கி சென்றதும் மூன்று நிலைகளுடன் உள்ள ராஜ கோபுரம் உள்ளது. கோபுரத்தின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம் உள்ளது.  இந்த மண்டபத்தில் ஒரே கல்லால் ஆன நந்தியம்பெருமான் எழுந்தருளியுள்ளார். அருகே பலிபீடம் உள்ளது.

மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. மூலவராக கருவறையில் சுந்தரேஸ்வரர் லிங்க வடிவத்தில் உள்ளார். மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். வலது புறம் இருக்கும் துவாரபாலகருக்கு அருகே விநாயகர் உள்ளார்.  மூலவரான லிங்கத்திருமேனியைச் சுற்றி வரும் வகையில் சிறிய வழி அமைந்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலிலும், காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ளதைப் போன்று இக்கோயிலில் இந்த அமைப்பு உள்ளது.  
கோயிலின் திருச்சுற்றில் வலப்புறம் ஜமதக்னி ரிஷி, சூரியன்,  ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் சிற்பங்கள் உள்ளன. அகோரவீரபத்திரரும் நவகன்னியரான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரும் தனி சன்னதியில் உள்ளனர்.  அடுத்து தேவிகோட்டை கருமாரியம்மன் சன்னதி உள்ளது. அதற்கெதிராக சிங்கத் தூணின் பகுதி உள்ளது. அடுத்து கடன் நிவர்த்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி ஆகியோருக்கான தனித்தனி சன்னதிகள் உள்ளன. அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

கோயிலின் திருச்சுற்றில் இடப்புறம் நவக்கிரகங்கள் உள்ளன. அடுத்து விநாயகர், உமாமகேஸ்வரர், இரு நாகர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, பைரவர் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

9 செப்டம்பர் 2015 அன்று இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. ஜேஷ்டாதேவிக்கு தனி சன்னதியில் உள்ளதால் வளர் பிறை அஷ்டமிதிதியில் வழிபட குழந்தைப் பேறும், நிறைந்த செல்வமும் உண்டாகும் என்ற நம்பிக்கையும், கஜலட்சுமியும் மகாவிஷ்ணுவும் திருமணக்கோலத்தில் காட்சியளிப்பதால் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் காணப்படுகிறது.


இக்கோயிலுக்கு அருகே உள்ள கீழப்பழுவூரில் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஆலந்துறையார் கோயிலும், கீழையூரில் முற்காலச் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இரட்டைக்கோயிலும் உள்ளன. இந்த மூன்று கோயில்களுக்கும் ஒரே நாளில் சென்றோம். இவை இப்பகுதியில் காணவேண்டிய முக்கியமான திருத்தலங்களாகும்.


 கீழப்பழூர் ஆலந்துறையார் கோயில் 

கீழையூர் இரட்டைக் கோயில்கள் புகைப்படங்கள் : முனைவர் பா.ஜம்புலிங்கம்

தினமணி இதழில் இக்கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம். இந்திரன் விமோசனம் பெற்ற திருத்தலம், தினமணி, 18 நவம்பர் 2016

Friday, 2 September 2016

ஜாலம் காட்டும் ஜலகண்டேஸ்வரர் கோயில் : தினமணி

இன்றைய (2 செப்டம்பர் 2016) நாளிட்ட தினமணியில் வெளியான கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். எனது கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழுக்கு நன்றி.
வேலூர் என்றால் நமக்கு கோட்டையும் அதன் மதில்களும் நினைவுக்கு வரும். முன்பொரு முறை சுற்றுலா சென்றபோது கோட்டையின் மதிலை மட்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இரவு அதிக நேரமாகிவிட்டதால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அண்மையில் கோட்டையின் உள்ளே உள்ள கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெருமை இக்கோட்டைக்குள்ளது. இக்கோட்டைக்குள் கோயில் அமைந்துள்ளது. அகழியின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. தெற்குப் புறத்தில் தண்ணீர் காணப்படவில்லை.   
கோட்டையின் மதில்களும் அகழியும் பார்க்க அழகாக உள்ளன. வேலூர் கோட்டையைப் போல இக்கோயில் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்டதாகவும், விஜயநகர கட்டிடப்பாணியின் இறுதி வடிவில் அமைந்துள்ளதாகவும் அங்குள்ள கல்வெட்டுக் குறிப்பின் மூலமாக அறியமுடிந்தது. 

தெற்கு நோக்கியுள்ள ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தின் வாயிலில் மரத்தாலான பெரிய கதவுகள் உள்ளன. அதை இரும்பால் ஆன தாமரை மலர்கள் அலங்கரிக்கின்றன. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோயிலின் வலப்புறம் குளம் உள்ளது. இடப்புறம் கல்யாண மண்டபம் உள்ளது. இம்மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளது. அதில் அழகிய தூண்கள் காணப்படுகின்றன. இம்மண்டபத்தின் மேற்கூரையிலுள்ள சிற்பங்களையும், கொடுங்கையையும் பார்க்கும்போது நமக்கு ஆவுடையார் கோயில் சிற்பங்கள் நினைவுக்கு வருகின்றன. மற்ற இரண்டு மண்டபங்களைவிட இந்த மண்டபத்தில்தான் அதிகமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. மண்டபத்தின் வெளித்தூண்களில் இரண்டு ஆள் உயரத்திற்கான யாழி, குதிரை மீதமர்ந்த வீரர்களின் சிலைகள் அமைந்துள்ளதைப் பார்ப்பதற்கு இயற்கையாக இருக்கிறது. மற்ற தூண்களில் விநாயகர், நடராஜர், விஷ்ணு, மகிஷாசுரமர்த்தினி, நரசிம்மர், வில்லுடன் இராமர், ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன. கண்ணப்பர், மார்க்கண்டேயர் கதைகளைச் சிற்பங்களாகக் காண முடிந்தது. மண்டபத்தின் மத்தியில் அழகான மேடையொன்று ஆமையின் முதுகில் இருப்பதுபோல வடிக்கப்பட்டுள்ளது. அந்த மேடைக்கருகில் உள்ள தூண்களில் சாளரம் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ளன. மண்டபத்தின் கூரையில் மூன்று சுற்றுகளாக கிளிகள் தேங்காயை கொத்த அமர்ந்திருப்பது போல அழகாக அமைந்துள்ளது. அந்த தேங்காய் மட்டும் சுழலும் என்று அங்கிருந்தோர் கூறினர். 
அந்த மண்டபத்திலிருந்து வெளிச்சுற்றில் சுற்றிவரும்போது வசந்த மண்டபம், யாக சாலை, மடப்பள்ளி ஆகியவை உள்ளன. இவற்றுக்கிடையே மூன்று மண்டபங்கள் காணப்படுகின்றன. குளத்தின் அருகேயுள்ள இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் வலம்புரி விநாயகர் கம்பீரமாக இருக்கிறார். அடுத்து செல்வ விநாயகர் சன்னதி, வெங்கடேசப்பெருமாள் சன்னதி, வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. வெங்கடேசப் பெருமாள் திருப்பதியில் உள்ளவாறு இங்கு காணப்படுகிறார். இச்சன்னதிகளை அடுத்து அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள அம்மன் அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறார்.  அம்மனை தரிசித்துவிட்டு மூலவரைப் பார்க்கச் செல்வது போன்ற அமைப்பில் கோயில் உள்ளது. அம்மன் சன்னதியில் விநாயகர், மாதேஸ்வரி, வைஷ்ணவி, துர்க்கை, பிராஹி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். கருவறையின் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர். அம்மன் சன்னதி எதிரே நவசக்தி ஜோதி உள்ளது. ஜோதியின் அருகே 1981இல் கார்த்திகை மாதத்தில் குருஜி சுந்தரராம்சுவாமி ஏற்றிய தீபம் என்ற குறிப்பு காணப்படுகிறது. திருச்சுற்றில் வரும்போது கிணறு உள்ளது. அருகே நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. அடுத்து, கால பைரவர், சனீஸ்வரர் உள்ளனர். 
அதனை அடுத்து மூலவர் சன்னதி உள்ளது. கொடி மரமும், பலிபீடமும் உள்ளன. அடுத்து நந்திதேவர் உள்ளார்.  அருகே ஆதிசங்கரர் உள்ளார். நந்தி தேவரை அடுத்து மூலவர் சன்னதியின் முன் மண்டபம் உள்ளது. அருகே நடராஜர் சன்னதி காணப்படுகிறது. இங்குள்ள மூலவர் முன்பு ஸ்வரகண்டேஸ்வரர் என்றழைக்கப்பட்டதாகவும் காலப்போக்கில் ஜலகண்டேஸ்வரர் என்றழைக்கப்படுவதாகவும் கூறினர். மூலவர் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.  

மூலவரை வணங்கிவிட்டு வரும்போது கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். அருகே 63 நாயன்மார்கள் வரிசையாக உள்ளனர். நடராஜர், சிவகாமி, அப்பர், சுந்தரர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், பிரம்மா, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர் ஆகியோர் உள்ளனர்.        

கருவறையும், உண்ணாழியும் அதனுடன் ஒருமித்த மகாமண்டபமும் கூடியது. மகாமண்டபத்து வடபுறம் நடராஜருக்குரிய சிறிய சன்னதி அறையின் அடித்தளத்தில் நிலவறையொன்றுண்டு. வெளிப்பிரகாரத்தில்  வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர் சன்னதிகள் அமைந்துள்ளன.

கோட்டைக்குள் அருங்காட்சியகம் உள்ளது. அதில் நாணயங்கள், தபால் தலைகள், பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் உடல்கள், முதுமக்கள் தாழி, சிலைகள் உள்ளன. பள்ளி மாணவர்கள் கூட்டம்கூட்டமாக அருங்காட்சியகத்திற்கு வந்து போவதைக் காணமுடிந்தது.  

நீண்ட கால ஆயுளுக்கும், தடை பட்ட திருமணம் இனிதே நிறைவேறவும், கண்ணேறு விலக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.  இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டையில் உள்ள கோயிலைக் காண்போம். இறையருளைப் பெறுவோம்.  

தினமணில் இக்கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் வாசிக்க அன்போடு அழைக்கிறேன்.
http://epaper.dinamani.com/920649/Vellimani/02092016#page/4/1

Saturday, 18 June 2016

மாங்கனித்திருவிழா

மாங்கனித் திருவிழாவைப் பார்க்க வெகு நாட்களாகவே ஆசை. எங்கள் அண்ணி, அக்கா மருமகள் இருவரும் பிறந்த ஊர்  காரைக்கால். வருடாவருடம் போகலாம் என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால் எங்களால் போக முடியாமல் ஆகிவிடும்.  இரண்டாண்டுகளுக்கு முன் எனது அந்த ஆவல் நிறைவேறியது. இதற்கு முன்பு நான் காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் மாங்கனித் திருவிழாவிற்காக 2014இல் சென்றேன். இன்று (19 சூன் 2016) காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் நாங்கள் சென்ற அந்நாள் நினைவிற்கு வந்தது. அம்மையார் தரிசனம்

தஞ்சையிலிருந்து காலை புறப்படும் ரயிலில் புறப்பட்டு நானும் குடும்பத்தினரும் காரைக்கால் சென்றோம். ரயிலைவிட்டு இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் காரைக்கால் அம்மன் கோயிலுக்குச் சென்றோம். அனைவருக்கும் தந்தையான சிவபெருமானால் அம்மா என்று அழைக்கப்பட்ட புகழ் பெற்றவர் புனிதவதியார்  காரைக்கால் அம்மையார் போகும் வழியெல்லாம் ஒரே கூட்டம். காணும் இடமெல்லாம் விழாக்கோலம். கோயிலின் முகப்பில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. முதலில் கோயிலுக்குச் சென்றோம். கோயிலின் வாயிலில் யானை அனைவரையும் வரவேற்கும் வகையில் நின்றுகொண்டிருந்தது. கோயிலில் அம்மனை தரிசித்துவிட்டு, சிவன் சன்னதிக்குச் சென்றோம். அம்மன் சன்னதியின் சுற்றில் காரைக்கால் அம்மையாரின் வரலாறு அற்புதமான வண்ணப்படங்களுடன் விளக்கத்துடன் வரையப்பட்டிருந்தது.  அதைப் பார்த்தால் கதை தெரியாதவர்களுக்கும் எளிமையாகப் புரிந்துவிடும்.


பிச்சாண்டவர் வீதியுலா
மாங்கனித்திருவிழா நாளன்று சிவபெருமான், பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையார் வீட்டுக்கு உணவு சாப்பிட செல்வதை விளக்கும் வகையில் மாங்கனியுடன் பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்வது மிகவும் முக்கியமான நிகழ்வாகும். கோயிலுக்கு வெளியே வந்த நாங்கள் எதிர்த்திசையில் பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் கிளம்ப ஆயத்தமாக இருந்ததைப் பார்த்தோம்.  சப்பரம் கன்னடியர் வீதியில் முக்கத்தில் நின்று மெல்ல நகர ஆரம்பித்தது. சற்று நேரத்திற்கெல்லாம் மக்கள் திரண்டனர். சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் போது காவல் துறையினர்  மிகவும் அமைதியாக இருக்க கூட்டத்தைக் கேட்டுக்கொண்டனர். சாமிக்கு அர்ச்சனை செய்வதற்கு தாம்பூலத்தில் இரண்டு மாங்கனிகள்,  இரண்டு வாழைப்பழங்கள், வஸ்திரம் உள்ளிட்ட பல மங்கலப்பொருட்களை அர்ச்சனை செய்யத் தருகிறார்கள். அதைப்பார்க்கும் போது நமக்கு புனிதவதியாரின் கதை நினைவுக்கு வந்தது.  

மாம்பழப் பிரார்த்தனை


கம்பீரமான யானை முன்வர தொடர்ந்து தேவாரம் ஓதிக்கொண்டு ஓதுவார்கள் வந்தனர்.  யானை, சங்கு, மேளம், குழல், சென்டை மேளம், தாளம் என பலவகைப்பட்ட மேள வாத்தியங்களுடன் இனிமையான இசையில் பிச்சாண்டவர் உலா வந்தது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பெண்கள் குழல் போன்ற வாத்தியத்தை வாயில் வைத்து மூச்சை அடக்கி ஊதுவதை ஆச்சர்யத்துடன் பார்த்தோம்.  அழகான பதாகைகள் வரிசையாக பிடித்துவரப்பட்டன. சப்பரம் நகர நகர, கூட்டமும் சப்பரத்துடன் நகர்ந்து சென்றது. பவழக்கால் சப்பரம் நகர நகர சப்பரத்திற்குப் பின் பக்தர்கள் மாம்பழங்களை வீசி தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டனர். உயரமான கட்டிடங்களில் இருந்து மாம்பழங்களை வீசுவதையும், கீழே உள்ளவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிடிப்பதையும் காணமுடிந்தது. அவ்வாறே கீழிருந்தும் மாம்பழங்களை வீசிக் கொண்டிருந்தனர். மாங்கனிகளை வீசுவதற்கு முன்பு காவல் துறையினர் அமைதியாகவும், யார் மேலேயும் வீசாமலும் பார்த்து வீசவும் என்று ஒலிபெருக்கியில் சொல்லிக்கொண்ட இருந்தனர்.  காவல் துறையினர் பொதுமக்களை மிகவும் அன்போடு வழிகாட்டி போகச் சொல்கிறார்கள். காரைக்கால் அரசு நன்றாக வழிநடத்தி மக்களை எந்தவிதமான சங்கடங்களும் ஆகாமல் பார்த்துக்கொண்டார்கள். 
சிவ தாண்டவம்
55 வயது மதிக்கத்தக்க ஒரு பக்தர் சிவன் தாண்டவம் ஆடுவது போல் தன்னை மறந்து ஆடிப்பாடி மகிழ்ந்தார். அவரைக் கூட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்தார்கள். ஒரு வெளிநாட்டவர் சுவாமியின் பின்னால் வெகுநேரமாக வந்துகொண்டேயிருந்தார். அந்த பக்தனை அவர் புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்களும்தான். வீதிகளில் நீர்மோர், தண்ணீர், பிரசாதம் போன்றவைகள் போகும் மக்களுக்குத் தந்தார்கள். களைப்பு தீர அவ்வப்போது அவற்றை நாங்கள் வாங்கிக்கொண்டோம். மாங்கனிகளை வீசும்போது எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அதனைப் பிடித்தார்கள்.  அன்பின் மிகுதியால் பலர் சாக்கு மூட்டைகளிலும், கூடைகளிலும், பைகளிலும் அதிக எண்ணிக்கையிலான மாம்பழங்களை வைத்துக்கொண்டு வீசிக்கொண்டே வந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது சற்றே சிரமமாகக் காணப்பட்டது. காவல் துறையினர் எந்த இடையூறும் இல்லாமல் கவனித்துக் கொண்டார்கள்.  காரைக்கால் அரசு நல்ல முறையில் செய்திருந்தது. 

பிற விழாக்கள்
காரைக்காலுக்கு இது ஒரு சிறப்பு அம்சமாகும். இதுபோல் தமிழ்நாட்டில் கோயில்களின் சிறப்புகள் விதம்விதமாக உள்ளன. தஞ்சாவூரில் முத்துப்பல்லக்கு, திருவையாற்றில் சப்தஸ்தானப்பல்லக்கு, குடந்தையில் மாசிமகம், வலங்கைமானில் பாடைத்திருவிழா, மன்னார்குடியில் வெண்ணைத்தாழி, திருவாரூரில் தேர், கரூரில் தலையில் தேங்காய் உடைக்கும் விழா, திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம், புதுக்கோட்டை மாரியம்மன் திருவிழா, மதுரையில் சித்திரைத் திருவிழா இன்னும் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் பெரும்பாலான திருவிழாக்களில் நான் குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளேன். சிலவற்றை இன்னும் தொடர்ந்து பார்க்க இறைவன்  அருள்வான் என்ற பரிபூர்ண நம்பிக்கையுடன் காரைக்காலில் இருந்து கிளம்பினோம் நிறைவான மனத்துடன்.   

புகைப்படங்கள் எடுக்க உதவி : 
கணவர் முனைவர் பா.ஜம்புலிங்கம், அண்ணி திருமதி கண்மணி இராமமூர்த்தி

Friday, 6 May 2016

குருக்கத்தி மாசி பெரியசாமி : தினமணி

இன்றைய (6.5.2016) தினமணி, வெள்ளிமணியில் வந்துள்ள எனது கட்டுரையின் விரிவான வடிவம், அதிகமான புகைப்படங்களுடன். (நன்றி : தினமணி)


அமைவிடம்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோயில் கிராமத்தில் குருக்கத்தி என்னும் ஊரில் மாசி பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. வெள்ளக்கோயில்-கரூர் சாலையில் 3 கிமீ தொலைவிலும்,  கரூர்-வெள்ளக்கோயில் சாலையில் 40 கிமீ தொலைவிலும் இக்கோயில் உள்ளது. 

வரலாறு
கொல்லிமலையிலுள்ள மாசி பெரியண்ணசாமியை பல இனத்தவர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவ்வாறாக மலையேறி செல்ல இயலாத நிலையில்  நாடார் இனத்தைச் சேர்ந்த குல பங்காளிகள் சிலர் ஒன்றுசேர்ந்து கொல்லிமலையிலிருந்து பிடிமண்ணை எடுத்துவந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு குருக்கத்தியில் வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டில் பெரியசாமி பல இடங்களில் வழிபடப்படுகிறார். குருக்கத்தியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதப் பௌர்ணமியில் விழா நடத்தி வருகின்றார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகச்சிறிய கோயிலாக சுற்றுச்சுவர் எதுவுமின்றி இக்கோயில் இருந்தது. திருப்பணி நடைபெற்று 8.2.2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயிலின் வாசலைக் கடந்து உள்ளே செல்லும்போது முன் மண்டபத்தில் வேல், சூலாயுதம், அரிவாள், ஈட்டி போன்றவை காணப்படுகின்றன. அருகில் வேப்ப மரம் உள்ளது. கருவறையில் மாசி பெரியசாமி சிங்கத்தின்மீது அமர்ந்த நிலையில் உள்ளார். கருவறைக்கு முன்பாக இருபுறமும் வாயிற்காவலர்கள் உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், காமாட்சி சன்னதிகள் உள்ளன. பெரியசாமியின் தங்கையாக காமாட்சியைக் கூறுகின்றனர். பெரியசாமிக்கு பூசை நடந்தபின்னர், விநாயகருக்கும், காமாட்சிக்கும் பூசை செய்கின்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் இக்கோயிலில் பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்துகின்றனர். இந்த ஆண்டு இவ்விழா மாசி மாதம் மூன்று நாள்கள் சிறப்பாக நடைபெற்றன. 
கோயில் நுழைவாயில்

வேப்ப மரத்தடியில் வேல், சூலாயுதம், அரிவாள், ஈட்டி 

பெரியசாமியின் புகழ் பாடுதல்

பச்சைப்பந்தல்
மண் பிடி எனப்படும் பதுவு

பொங்கல் இடுதல்
  
சந்தனக்காப்பு அலங்காரத்தில் மாசி பெரியசாமி
புடவைக்காரியம்மன் பூசை
முதல் நாள் காலையில் கொடுமுடியில் காவிரியாற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துவருகின்றார்கள். அதில் நாணலையும், வேப்பந்தழையையும் வைத்து குருக்கத்திக்குக் கொண்டுவருகின்றார்கள்.  மதியம் முதல் பூசை என்ற நிலையில் புடவைக்காரியம்மனை நினைத்து பூசை செய்கின்றனர். அந்த அம்மனுக்கு உருவம் எதுவும் இல்லாத நிலையில் மனதில் நினைத்து அவ்வாறு செய்கின்றனர். அம்மனுக்கு செம்மறியாட்டினை பலியிட்டு, மாமன் மச்சான் முறையிலுள்ளோர் சமைத்து உண்கின்றனர். பங்காளிகள் இந்த விருந்தில் கலந்துகொள்ளும் மரபு இல்லை என்று கூறினர். 

பொங்கல் வைத்தல் தொடங்கி எறிகாவல் பூசை
இரண்டாம் நாள் மாலை அனைத்து குடும்பத்தவரும் வரிசையாக கல் வைத்து அடுப்பு அமைத்து புது மண் பானையில் பொங்கல் பொங்குகின்றனர். சுமார் 30 குடும்பத்தினர் அவ்வாறாக பொங்கல் வைக்கும் காட்சியைக் கண்டோம். பின்னர் அப்பொங்கலை கோயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பச்சைப் பந்தலில் வைத்துவிடுகின்றனர். அந்தப் பந்தலுக்கு முன்பாக கரும்பாலான பந்தல்களை பூமாலை போட்டு வைத்துள்ளனர். பந்தலுக்கு முன்பாக சதுர வாக்கில் நான்கு புறமும் சுற்றி மண்ணைப் பிடியாகப் பிடித்து வைக்கின்றனர். இந்த மண் பிடியை பதுவு என்கின்றனர். அங்கு நடக்கும் பூசையை பச்சைப்பூசை என்று கூறுகின்றார்கள். அதைத்தொடர்நது பெரியசாமி முன்பாக கோயிலில் இருக்கும் கரகம், வேல், சூலாயுதம், அரிவாள், ஈட்டி போன்றவற்றை சாலையோரம் உள்ள கிணற்றடிக்கு எடுத்துச் செல்கின்றார்கள். அனைத்தையும் கழுவி, மஞ்சள் நீராட்டி, மலர் மாலை அணிவித்து விபூதி, குங்குமம் வைத்து வணங்குகிறார்கள். பின்னர் அங்கிருந்து மேளதாளத்துடன் உடுக்கடித்துக்கொண்டு கோயிலை சுற்றி வலம் வருகிறார்கள். அவ்வாறு வலம் வரும்போது பலருக்கு அருள் வந்துவிடுகிறது. அருள் வந்த நிலையில் உள்ளோர் எதுவும் பேசுவதில்லை. அனைவரும் தாளத்திற்கேற்ப ஆடிக்கொண்டே சன்னதிக்கு வருகின்றார்கள். அவ்வாறு வரும்போது பார்க்கும் அனைவரும் தன்னை மறந்து இறை சக்தியைப் பெறுவதைக் காணமுடியும். சாமியை வரவழைப்பதற்காக உடுக்கடித்து பாட்டு பாடுகின்றார்கள். 

இரவு பூசை நடக்கும்போது பூசாரி வாயை துணியால் கட்டிக்கொண்டு பூசை செய்கின்றார். பெரியசாமி சக்தி வாய்ந்த தெய்வமென்றும் அதனால் அவ்வாறு செய்வதாகவும் கூறினர். முதலில் பங்காளிகள் பொதுவாக ஒரு ஆட்டினையும், தொடர்ந்து தத்தம் வேண்டுதல்படியும் பலியிடுகின்றனர். சேவல், ஆடு, பன்றி என்ற வகையில் இந்த பலி அமைகின்றது.  படைக்க வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொங்கல் பானையிலிருந்தும் ஒவ்வொரு கவளத்தினை எடுத்து அதில் ரத்தத்தைக் கலந்து மண் சட்டியில் வைத்து வானத்தை நோக்கி வீசுகின்றனர். அவ்வாறு எறியும்போது பெண்களையும், குழந்தைகளையும் அவ்விடத்தைவிட்டு அகலும்படிக் கூறுகின்றார்கள். விளக்குகளை அணைத்துவிடுகின்றனர். மேலே அவ்வாறு வீசப்படுவது கீழே வருவதில்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள். பின்னர் அவரவர்கள் படையலுக்கு வைத்திருந்த பொங்கல் பானையுடன் அர்ச்சனை செய்யப்பட்ட தட்டினை இரவு நடுநிசிக்கு மேல் தருகின்றார்கள். 

விருந்து           
இரண்டாம் நாள் இரவு பலியிடப்பட்டதை மூன்றாம் நாள் காலையில் சமைத்து விருந்தாகப் படைக்கின்றார்கள். பன்றிக்கறியை மட்டும் தனியாக சமைத்து விருப்பமுள்ளவர்கள் மட்டும் உண்கின்றார்கள். ஒரு பெண்மணி பன்றிக்கறியை மிகவும் ஈடுபாட்டோடு ருசித்து உண்பதைக் காணமுடிந்தது. விழாவிற்கு வந்திருந்த உறவினர்களும், பங்காளிகளும் நன்கொடை கொடுக்கின்றனர். அதைத் தவிர அன்னதானத்திற்கு அரிசி, மளிகைப்பொருள்களையும், இதர பொருள்களையும் தருகின்றனர். காலை ஆரம்பிக்கும் விருந்தானது தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. விழா நிகழ்வாக வந்திருந்தோருக்கு மாசி பெரியசாமி கோயில் பிரசாதமாக  விபூதி, குங்குமம், வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுத்து மகிழ்கின்றனர். உறவினர்களும், நண்பர்களும் ஒன்றுசேரும் இனிய நாளாக இந்த இறை வழிபாட்டு நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. இந்த விழா தற்போது 2016இல் நடைபெற்ற நிலையில் அடுத்து மூன்றாண்டுகள் கழித்து 2019இல் நடைபெறும் என்று கூறி அவ்விழாவிற்கு வர அன்போடு கேட்டுக்கொண்டார்கள்.   
----------------------------------------------------------------------
தினமணியில் கட்டுரையை பின்வரும் இணைப்பில் வாசிக்க அன்போடு அழைக்கிறேன்.
குருக்கத்தி மாசி பெரியசாமி 
----------------------------------------------------------------------


Saturday, 19 March 2016

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

அந்நாளில் தட்டச்சும் சுருக்கெழுத்தும்
தற்போது எட்டாம் வகுப்புக்குமேல் படித்துவிட்டு உயர் நிலைப்பள்ளி போனதும் படிக்க நேரம் இல்லை என்று சொல்கிறார்கள். 1970க்கு முன்பு எட்டாம் வகுப்பு முடித்திருந்தால் ஆசிரியர் வேலை, வங்கிகளில் வேலை வாய்ப்புக்கும் இந்த தட்டச்சு உதவியாக இருந்தது. இன்று மாணவ மாணவிகள் ஒரு பட்டம் வாங்கியவுடன் வேறு எதுவும் வேண்டாம் என்று இருக்கிறார்கள். படிப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. அன்று தட்டச்சு, சுருக்கெழுத்து தெரிந்தால் தான் வேலை வாய்ப்புகள் அமையும். இப்போதும் அதன் முக்கியத்துவத்தை நாம் சற்றுச் சிந்திப்போம். 

தட்டச்சுப்பொறியின் பயன்பாடு
கணினியின் வரவால் தட்டச்சுப் பொறிகள் விலைக்கு விற்கப்பட்டு, பயன்பாடு இல்லாமல் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஆங்காங்கு இருக்கும் ஒரு சில தட்டச்சுப்பொறிகள் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்ற தட்டச்சு சுருக்கெழுத்து நிலையங்களில் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசுத்தேர்வு எழுத மட்டும் இவை பயன்படுத்தப்படுகின்றன. நாளடைவில் இதுவும் குறைந்துவிடும் நிலை எழ வாய்ப்புள்ளது. 

கணினி மூலம் தட்டச்சு
கணினியின் மூலமாக கணினி விசைப்பலகையில் தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளலாம். அவ்வாறு கற்கும்போது ஆங்கில மற்றும் தமிழ் தட்டச்சுப்பொறிகளில் காணப்படுகின்ற பயிற்சிப்பாடங்களை முறையாக தினமும் தட்டச்சு செய்யலாம். ஒரு விரல் தட்டச்சு நிலை மாறி முறையான வேகத் தட்டச்சு செய்ய இது உதவும்.

பெற்றோர் பங்களிப்பு
இப்போது ஆறாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தட்டச்சு தேர்வுக்குச் (Pre-Junior) செல்லலாம். வரும் காலங்களில் தட்டச்சு என்னவென்று கேட்பார்கள். நம் வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஊக்கப்படுத்தலாம். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்ப்பதை உடனே வாங்கித்தருகிறார்கள். வண்டி, லேப்டாப், இணையதளம், வீடியோ கேமரா போன்ற சாதனங்களுடன் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.  ஆனால் அவர்களுடைய கல்வித்தேவைகளையோ, தொழில்நுட்பத் தகுதிகளை மேம்படுத்தவோ உரிய காலகட்டத்தில் முயற்சி எடுக்கவேண்டும். பொருள் வாங்கித்தந்து குழந்தைகளின் போக்கிற்கு விட்டுவிட்டு பின்னர் பலர் வருத்தப்படுகிறார்கள். ஒரு வரையறை வைத்துக்கொண்டு குழந்தைகளை வளர்க்கவேண்டும்.  தட்டச்சில் ஒரு தேர்வாவது தேர்ச்சி பெற்றால் கணிப்பொறியை எளிதாகப் பயன்படுத்த முடியும். வேகமாகவும் நாம் நினைப்பதை தட்டச்சிட உதவியாக இருக்கும். அவ்வாறே குழந்தைகளுக்கு சுருக்கெழுத்து என்றால் என்ன என்பதைச் சொல்லி அவர்களுக்கு சுருக்கெழுத்துப் பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தலாம். தொடர்ந்து சுருக்கெழுத்து எழுதும்போது அதிக எண்ணிக்கையிலான புதிய வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள முடியும். தட்டச்சைப் போலவே சுருக்கெழுத்திலும் குறைந்தபட்ச அளவிலான தேர்வு எழுதலாம். கணினிப் பயன்பாடு தெரிந்த மாணவர்கள் கணினி மூலமாகத் தட்டச்சு அறிவினை மேம்படுத்திக்கொள்ளலாம்.

ஆசிரியர்கள் அறிவுரை
பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர் மாணவிகளுக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தின் ஆர்வத்தை ஊக்குவிக்கவேண்டும். இவ்வாறான வகையில் வகுப்பில் கூறப்படும்போது 10 மாணவர்களில் ஒருவருக்காவது ஆர்வம் வரும்.  கல்வி நிறுவனங்களில் தட்டச்சு, சுருக்கெழுத்தினை விருப்பப்பாடமாகக் கொண்டுவந்து மாணவர்களுக்கு அதனைக் கற்றுக்கொள்ளும் சூழலை உண்டாக்கித்தரலாம்.

வேலைக்கு விண்ணப்பம்

தட்டச்சு தெரிந்தால் வேலை வேண்டி விண்ணப்பம் அனுப்பும்போது மனுவில் அதையும் ஒரு தகுதியாகக் காண்பிக்கலாம். தன்விவரக்குறிப்பில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தகுதிகள் இடம் பெறும் அளவு மாணவர்கள் தம்மை மேம்படுததிக்கொள்ள வேண்டும். 

பணியிடத்தில் பயன்பாடு
தட்டச்சு கற்றுக்கொண்டால் வேலைப் பார்க்கும் போது பிழையில்லாமலும் கவனமாகவும் வேலை செய்யலாம். வங்கிகளில், அலுவலகங்களில், மென்பொருள் அலுவலகங்களில், கடைகளில், அங்காடிகளில், வங்கிகளில், மருத்துவமனைகளில் வேலை பார்க்கும்போது நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களை உடனுக்குடன் காக்க வைக்காமலிருக்கவும்  தட்டச்சுப் பயன்பாடு உதவியாக இருக்கும்.  ஒரு விரலால் தட்டச்சு செய்து வேலை செய்வது போன்றவை குறையலாம். கணினிப் பயன்பாட்டில் தட்டச்சு அறிவைப் பயன்படுத்தும்போது வேகம் இன்னும் அதிகமாக இருக்கும். தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எளிதாகக் கையாளும் வாய்ப்பினைப் பயன்படுத்தலாம். 

பிற மொழிகள், கலைகள் கற்றல்
இன்றைய மாணவ மாணவிகளுக்கு, பள்ளிப் பாடம், கல்லூரி பாடம் படிப்பது போல் தட்டச்சும் சுருக்கெழுத்தும் தேவையானவை. பிற மொழிகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்றவற்றையும், ஓவியம், நாட்டியம், பாடல் போன்ற கலைகளைக் கற்றுக்கொள்ளவும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதைக் காணமுடிகிறது. அவர்கள் தட்டச்சுச் சுருக்கெழுத்தைக் கற்றுக்கொள்ளவும் ஊக்கப்படுத்தலாம்.
என் மகன்கள் சொல்லிக்கொடுத்து தமிழ்த்தட்டச்சினை கணினிப்பலகையில் அடிப்படை நிலையில் கற்றேன். தற்போது என்னால் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். தட்டச்சு, சுருக்கெழுத்து முறைப்படி கற்பதால் பல புதிய சொற்களை அறிந்துகொள்ளலாம். வேகத்தை அதிகப்படுத்தலாம். அந்த உத்தியை கணினி வழியாக கடைபிடிக்கும்போது நேரத்தை சேமிக்கலாம். இந்நிலையில் இதன் முக்கியத்துவத்தை உணரமுடியும். 

Wednesday, 13 January 2016

வேதாரண்யம் மறைக்காட்டீஸ்வரர் கோயில்

2013 புத்தாண்டை முன்னிட்டு மந்த்ராலயம் மற்றும் ஹம்பிக்கு குடும்பத்துடன் சென்றுவந்த அனுபவம் தினமணியில் கட்டுரையாக வெளிவந்தது. அக்கட்டுரையைப் பார்த்ததும் தொடர்ந்து கோயில்களுக்குச் செல்லும்போது பெற்ற அனுபவங்களை  எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவ்வகையில் அவ்வப்போது சென்ற இடங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அவ்வகையில் எங்களது வட இந்தியப்பயணம், உவரிக்கோயில், நல்லிக்கோயில் போன்ற இடங்களுக்குச் சென்ற அனுபவங்கள் கட்டுரைகளாக வெளிவந்தன. இவை தவிர வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் வெளியானது. இக்கட்டுரைகளை தனியாக வலைப்பூ தொடங்கி அவற்றில் பதிய விரும்பி 2016 மகாமக ஆண்டில் (பிப்ரவரி 13-22 மகாமக நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில்) எழுத ஆரம்பிக்கிறேன்.

வலைப்பூவில் முதல் பதிவாக நாங்கள் வேதாரண்யம் கோயிலுக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் வேதாரண்யத்திலுள்ள கோயில்களுக்கு  நானும் என் கணவரும் சென்றோம். வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு சித்திரவேலு எங்களை வேதாரண்யம், அகத்தியான்பள்ளி, கோடியக்கரை, ஆகிய இடங்களிலுள்ள கோயில்களுக்கு அழைத்துச் சென்றார். 
கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கருகே எனது கணவர் திரு ஜம்புலிங்கம்,
எங்களை அழைத்துச்சென்ற திரு சித்திரவேலு
முதலில் நாங்கள் சென்றது வேதாரண்யம் மறைக்காட்டீஸ்வரர் கோயில். வேதங்கள் வழிபட்டது,  திருமுறைகளில் இடம் பெற்றது, சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று,  ஞானசம்பந்தரும், அப்பரும் வேதங்களால் அடைக்கப்பட்ட கதவு திறக்கவும் அடைக்கவும் பாடப்பட்ட சிறப்புடையது உள்ளிட்ட பல சிறப்புகளைக் கொண்டது வேதாரண்யம் மறைக்காட்டீஸ்வரர் கோயிலாகும். 1300 ஆண்டுகளுக்கு முந்தைய இக்கோயிலில் ராமர் வந்து வழிபட்ட தோஷம் நீங்கியதாக தல வரலாறு கூறுகிறது. 


இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கி கண்ணைக்கவரும் வகையில் உள்ளது. கீழக் கோபுர வாசலில் இலக்கு அறிவித்த விநாயகர் உள்ளார். கோபுர வாயிலின் வழியே உள்ளே வரும்போது பைரவர் குளம், வீதிவிடங்கர் சன்னதி, காட்சி கொடுத்தவர் சன்னதி, இராமநாதர் சன்னதி ஆகியவை உள்ளன. காட்சி கொடுத்தவர் சன்னதியின் முன்புறம் சுழலும் கற்தூண்கள் உள்ளன. அதைச் சுற்றும்போது நமக்கு வியப்பாக உள்ளது. மூலவரான லிங்கத் திருமேனிக்குப் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றனர். 


மூலவர் சன்னதியின் கருவறையின் வெளிப்புறத் திருச்சுற்றில் 63 நாயன்மார்கள் உள்ளனர். அழகான ஓவியங்கள் இங்கு காணப்படுகின்றன. 
இக்கோயிலில் உள்ள இறைவன் மறைக்காட்டீஸ்வரர் என்றும், வேதாரண்யேஸ்வரர் என்றும், இறைவி வீணவாதவிதூஷனி என்றும் யாழைப் பழித்த மொழியம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தின் மரம் வன்னியாகும்.  உள் பிரகாரத்தில் சுழலும் கல் தூண்கள் இரண்டு உள்ளன. அவற்றைச் சுற்றலாம். 

 மேலக்கோபுர வாசலின் வலப்புறம் வீரகத்தி விநாயகர், குமரன் சன்னதி, சேர, சோழ பாண்டிய லிங்கங்கள்  கருவறைக்குப் பின்புறம்  அமைந்துள்ளது. மேலக்குமரன் சன்னதி குகை வடிவில் அமைந்துள்ளது. அருகே புன்னை மரத்தடியில் நசிகேது, சுவேதகேது அமைந்துள்ளன. 

அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன் மண்டபத்தில் மேல் புறம் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து தல விநாயகர், காட்சி கொடுத்த நாயனார், ஆறுமுகர், ஜுரதேவர், சனி பகவான், வீணை இல்லாத சரஸ்வதி, அன்னபூரணி, துர்க்கை, சோழீஸ்வர லிங்கம் ஆகிய சன்னதிகளைக் காணலாம். அதற்கடுத்து பள்ளியறை, பைரவர், சூரிய சந்திரர்கள் சன்னதிகள் உள்ளன.

வேதாரண்யம் விளக்கழகு என்பது பழமொழி. நேரில் கோயிலுக்குச் செல்லும்போது கோயிலின் சன்னதியில் இப்பழமொழியினை நேரில் கண்டு உணரலாம். 

வேதாரண்யம் கோயில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் புண்ணியமாகும். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த திருவருட்செல்வர் திரைப்படத்தில் கோயிலின் மூடிய கதவைத் திறக்கப் பாடிய பாடல் நினைவிற்கு வரும். அப்பர், ஞானசம்பந்தர் பாடிய அத்தலத்தில் நின்றபோது நமக்கு அளவில்லா மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைத்தது.