அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை
2014இல் காசிக்கும் பிற இடங்களுக்கும் நாங்கள் குடும்பத்துடன் சென்று வந்ததைப் பற்றி அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை 7 டிசம்பர் 2014 நாளிட்ட தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் மேம்பட்ட வடிவினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தினமணி இதழுக்கு நன்றி.
காசி மற்றும் பிற தலங்களுக்குக் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தஞ்சையிலிருந்து ரயிலில்
புறப்பட்டு சென்னை வந்தோம். சென்னையிலிருந்து அலகாபாத்திற்கு எங்களை வழியனுப்ப மகன்,
மருமகள், பேரன் ஆகியோர் வந்தனர். அவர்கள் எங்களை ரயிலில் அமர வைத்துவிட்டு, வட மாநிலங்களில்
முன்பதிவு செய்திருந்தால்கூட நம் இருக்கையில் அவரவர் போக்கில் வந்து அமர்வார்கள் என்றுகூறி
எங்களை கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி சொல்லி வழியனுப்பினர். எங்கள்
அண்ணியின் உறவினர் துணையாக வந்தனர். அவர்கள் தொடர்ந்து காசிக்கு 17 ஆண்டுகளாக தம்பதிசகிதமாக
வருவதாகக் கூறினர். அவர்களுடன் செல்வதைப் புண்ணியமாகக் கருதி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
8.10.2014 விடியற்காலை அலகாபாத் வந்து நகரத்தார் சத்திரத்தில் தங்கினோம்.
உடைமைகளை அங்குவைத்துவிட்டு திரிவேணி சங்கமத்தில் நீராடச் சென்றோம். கங்கா, யமுனா மற்றும்
கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி சங்கமிக்கும் இடத்திற்குப் படகில் சென்று புனித நீராடிவிட்டுத்
திரும்பினோம். மூன்று ஆறுகளும் சேரும் அவ்விடத்திலிருந்து சூரிய உதயம் பார்த்தது கண்கொள்ளாக்
காட்சியாக இருந்தது. எங்களது புனிதப் பயணத்தின் துவக்கமாக இந்த சூரியக்குளியல் இருந்தது.
தொடர்ந்து நகரிலுள்ள மகேஸ்வரி சக்திபீடம் சென்றோம். அன்று சந்திர கிரகணமாக இருந்ததால்
சாமி தரிசனம் கிடைக்கவில்லை.
அங்கிருந்து நேரு இல்லமான ஆனந்த பவனம் சென்றோம். ரோஜா மற்றும் பலவகையான
பூச்செடிகளின் நடுவில் பவனம் மிகவும் அழகாக அமைந்திருந்தது. நேருவின் அறையில் புத்தக
அலமாரி அனைவரையும் ஈர்த்தது. அதைப் போல் இந்திரா காந்தியின் அறையிலும் புத்தகங்கள்,
புகைப்படங்கள், பேனா மற்றும் பரிசுப்பொருள்களைப் பார்த்தோம். இந்திரா காந்தி திருமணம்
நடைபெற்ற மேடைப்பகுதியைப் பார்த்தோம். அதற்கான கல்வெட்டுப்பதிவினைக் கண்டோம்.
நுழைவாயிலில்
இருந்த கல்வெட்டில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் 1927இல் கட்டப்பட்ட இந்த ஆனந்தபவனமானது
செங்கங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டதன்று, நமது நாட்டு விடுதலைப் போருடன்
தொடர்புடையது, மிக முக்கியமான முடிவுகள் இங்கிருந்து எடுக்கப்பட்டன, மிக முக்கியமான
வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடைபெற்றன என்ற குறிப்பினை கூடிய கல்வெட்டுப்பதிவினைக் கண்டோம்.
அலகாபாத்தை முழுமையாக ரசித்தபோதும் பொதுவாகப் பார்த்தபோது ஊர் சுத்தமின்றி இருந்தது
சற்று வேதனையாக இருந்தது.
9.10.2014 காலை கயா வந்தடைந்தோம். காலையில் விஷ்ணுதத் கோயில் சென்றோம்.
அங்கு ஒரு நபருக்கு ரூ.270 வீதம் எங்கள் குழுவில் பலர் இறந்தவர்களுக்குத் திதி கொடுத்தனர்.
திதி கொடுக்கும் முன்பாக நதியில் நீராடிவிட்டு, அப்புனித நீரை கோயில் மண்டபத்திற்க எடுத்துவரக் கூறி அங்கு அனைவரையும் வரிசையாக அமரவைத்து அந்நிகழ்ச்சியைச் செய்தனர். பூசைப் பொருளாக துணி, பூ, பழம், கோதுமை மாவில் உருட்டப்பட்ட உருண்டைகள் , தர்ப்பைப்புல் ஆகியவை இருந்தன. மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இவ்வாறு பூசை செய்தவர்கள் இறந்த முன்னோர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தத்தமக்குப் பிடித்த காய், பழம், இலை ஒவ்வொன்றிலும் ஒன்றை விட்டுவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அனைவரும் தொடர்ந்து மங்களகௌரி கோயிலுக்கும் சக்திபீடத்திற்கும் சென்றோம்.
திதி கொடுக்கும் முன்பாக நதியில் நீராடிவிட்டு, அப்புனித நீரை கோயில் மண்டபத்திற்க எடுத்துவரக் கூறி அங்கு அனைவரையும் வரிசையாக அமரவைத்து அந்நிகழ்ச்சியைச் செய்தனர். பூசைப் பொருளாக துணி, பூ, பழம், கோதுமை மாவில் உருட்டப்பட்ட உருண்டைகள் , தர்ப்பைப்புல் ஆகியவை இருந்தன. மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இவ்வாறு பூசை செய்தவர்கள் இறந்த முன்னோர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தத்தமக்குப் பிடித்த காய், பழம், இலை ஒவ்வொன்றிலும் ஒன்றை விட்டுவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அனைவரும் தொடர்ந்து மங்களகௌரி கோயிலுக்கும் சக்திபீடத்திற்கும் சென்றோம்.
மதியம் புத்தகயா சென்றோம். அங்கிருந்த புத்தர் கோயிலான மகாபோதி கோயில்
சென்றோம். அழகான புத்தரைப் பார்த்தோம். கோயில் வளாகத்தில் புத்தர் ஞானம் பெற்றதாகக்
கூறப்படும் புகழ் பெற்ற போதி மரத்தினைப் பார்த்தோம். மரத்தின் அருகில் யாரும் செல்லாமல்
இருப்பதற்காக மரத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு சுவர் இருந்தது. பிக்குகளும், பிக்குணிகளும்
அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடன் பேச எனக்கு ஆசையாக இருந்தது. ஆனால் நேரமில்லை.
போதி மரத்தருகே புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
கோயிலைச் சுற்றியும் காணப்பட்ட அமைதியான
சூழல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து தாய்லாந்து புத்தர் கோயிலைப் பார்த்தோம்.
அதற்குப் பின்னர் அமர்ந்த நிலையில் பார்க்க கம்பீரமாக இருந்த புத்தர் சிலையைப் பார்த்தோம்.
ஆனாலும் முகத்தில் ஒரு சோகக் களையினைக் கண்டோம். புத்தர் சிலை என்றால் புன்சிரிப்புடன்
இருக்கும். ஆனால் இச்சிலையில் அந்த சிரிப்பு காணப்படவில்லை. சிலை வடிவமைப்பாளரின் மனதில்
தோன்றியது அவ்வாறே அமைந்துவிட்டதோ என எண்ணத்தோன்றியது.
10.10.2014 காலை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த காசி மண்ணில் காலடி வைத்தோம்.
கங்கையில் நாங்கள் இருவரும், எங்கள் குழுவினருடன் புனித நீராடினோம். காலையில் முதலில்
ஆதிசங்கரர் நிறுவிய, காஞ்சி பெரியவர் வந்துசென்ற கோயிலான காமகோடீஸ்வரர் கோயிலுக்குச்
சென்றோம். பின்னர் கேதாரநாதர் கோயிலுக்குச் சென்றோம். இக்கோயிலின் பின்புறம்
கங்கை ஓடுவதைப் பார்க்க அழகாக இருந்தது. அடுத்தபடியாக காசி விசுவநாதர் கோயிலுக்கு நுழைவாயிலின்
வழியாகச் சென்றோம். குறுகிய சந்துகளைக் கடந்து கோயிலுக்குச் செல்லவேண்டியிருந்தது.
கூட்டம் அதிகமாக இருந்தது. பலத்த பாதுகாப்பு இடப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் சோதனையிடப்பட்டே
அனுப்பப்பட்டோம். பேனா, கேமரா, செல்பேசி என எதையும் வைத்துக்கொள்ள அனுமதியில்லை. வரிசையில்
செல்லும்போது முதலில் சாட்சி விநாயகர் சந்நதிக்குச் சென்றோம். வரிசையில் சென்றபின்
பின்னர் வலப்புறத்தில் அமைந்துள்ள அன்னபூரணி அம்மன் கோயிலுக்குச் சென்றோம். தங்க
அன்னபூரணியைக் கண்குளிரக் கண்டோம். அவர் அருகில் வெள்ளியால் ஆன சிவனை பிச்சாண்டவர்
கோலத்தில் கண்டோம். அன்னபூரணி சிவனுக்கு அன்னம் இடுவதாக வரலாறு கூறினர். வரிசையில்
தொடர்ந்து சென்று காசி விசுவநாதர் கோயிலை அடைந்தோம். கோயிலுக்குள் போகும்போது பக்தர்கள்
பூ, பால், நீர் போன்ற ஏதாவது ஒன்றைக் கொண்டு செல்வதைக் காணமுடிந்தது. அதை வைத்து அவர்களே
லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். சிறிய அளவிலான லிங்கத்தைக் கண்டோம்.
இதைப் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது. நம்மூர் கோயில்களில் கருவறைக்குள் பக்தர்களை
அனுமதிப்பதில்லை. இங்கு அவரவர் செய்வதால் இறைவனையே நேரில் சென்று அடைந்தது போன்ற ஓர்
பேரின்பத்தை பக்தர்கள் மனதார அடைகிறார்கள். இருந்தாலும் இவ்வாறாக செய்யப்படுவதால் கோயிலில்
எங்கு பார்த்தாலும் தண்ணீர், பூ, அபிஷேகப் பொருள்கள் போன்றவை சிதறிக் கோயில்
முழுவதும் தண்ணீர்மயமாகக் காணப்படுகிறது. வயதில் மூத்தவர்கள் நடக்க அதிகம் சிரமப்படுகிறார்கள்.
கோயிலின் விமான அமைப்பு பூரி ஜகந்நாதர் கோயிலை நினைவூட்டியது. தங்கக்கவச விமானத்தின்
அழகை ரசித்துவிட்டுத் திரும்பினோம். பின்னர் காசி விசாலாட்சி கோயிலுக்குச்சென்றோம்.
கோயிலுக்குச செல்லும்போது பெரிய அம்மனாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் சிறிய அம்மனாக
இருந்தது. கோயிலின் முகப்பு தமிழ்நாட்டுக் கோயிலின் அமைப்பை ஒத்திருந்தது.
மாலை கங்கையாற்றில் படகிலிருந்தபடியே 64 கங்கைக்கரைகளில் மன்மந்திர்
காட், அகில்பாய் காட், முன்ஷி காட், நாரதர் காட், மணிகர்ணீஸ்வரர் காட், அரிச்சந்திரா
காட் உள்ளிட்ட சில கரைகளைப் பார்த்தோம். இவற்றில் மணிகர்ணீஸ்வரர் காட்
மற்றும் அரிச்சந்திரா காட் என்ற இரு இடங்களிலும் சடலங்கள் எரியூட்டப்படுவதைக் கண்டோம்.
சடலங்கள் எரியும்போது எவ்வித துர்நாற்றமும் வீசாது என்று கூறினர். அதை நேரிலும் உணர்ந்தோம்.
சடலங்கள் எரியூட்டப்படுவதைக் கண்டபோது அனைவருக்கும் மனதில் ஒருவித நெகிழ்ச்சி ஏற்பட்டது.
நாரதர் காட்டில் எவரும் குளிக்கமாட்டார்கள் என்று கூறினர். படகுப் பயணத்தில் அனைவரும்
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
இருட்ட ஆரம்பிக்கவே கங்கா ஆர்த்தி பார்க்கத் தயாரானோம்.
ஏழு ஆடவர்கள் அழகாகத் தம்மை அலங்கரித்து ஏழுவிதமான ஆரத்திகளைச் செய்தார்கள். இதனை உள்ளூர்,
வெளியூர், வெளிநாட்டவர் என அனைவரும் ஆர்வத்தோடு பார்த்தனர். படகிலிருந்து குறிப்பிட்ட
தொகையினைக் கொடுத்து ஆரத்தியைப் பார்த்தனர். முடிந்தவுடன் பூ விளக்கு தீபம் ஏற்றுவதைக்
காணமுடிந்தது. காசியில் மட்டும் கங்கை வடக்கு நோக்கி இருப்பதாகக் கூறினர்.
பின்னர் கடைத்தெருவிற்குச் சென்றபோது அதிகமான எண்ணிக்கையில் வளையல் கடைகளைக் கண்டோம்.
குழந்தைகளுக்கு பஞ்சகட்சம், மிடி, டாப்ஸ், சுடிதார், காட்டன், பேன்சி, பனாரஸ் பட்டு
சேலைகள், கைப்பைகள் ஆகியவற்றை அவரவரர் விருப்பத்திற்கு ஏற்றவாறு வாங்கினோம்.
அடுத்த இரு நாள்கள் காசியிலுள்ள பிற முக்கியமான கோயில்களுக்குச் சென்றோம்.
கால பைரவர் கோயிலில் விதம் விதமாக கயிறு மந்திரித்துத் தந்தனர். கோயிலின் வாயிலின்
பைரவரை நினைவூட்டும் வகையில் அதிக எண்ணிக்கையில் நாய்களைக் காணமுடிந்தது. சங்கட்மோட்சன்
எனப்படும் அனுமார் கோயில் சென்றோம். சங்கட் மோட்சன் என்றால் சங்கடத்தைப் போக்குபவன்
என்று பொருள். (இக்கோயிலைப் பற்றி தினமணி 31.10.2014 வெள்ளி மணியில் செய்தி வெளியாகியிருந்தது).
தொடர்ந்து துளசிமானச மந்திர், திரிதேவ் (பிர்லா) மந்திர், துர்கா மந்திர், சோளியம்மன்
மந்திர் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். சோளியம்மன் கோயிலில் சோளியை வைத்து அர்ச்சனை
செய்தனர். காசிப் பயண நிறைவாக இந்தியாவின் புகழ் பெற்ற காசி இந்து பல்கலைக்கழகம் சென்றோம்.
ஆட்டோவில் சென்றுகொண்டே அப்பல்கலைக்கழகத்தின் பல துறைகளைக் கண்டோம். பல்கலைக் கழக வளாகத்தில்
இருந்த காசிவிசுவநாதர் கோயிலுக்குச் சென்று அவரை வணங்கினோம்.
மிர்சாபூர்
13.10.2014 அன்று மிர்சாபூரிலுள்ள முதல் சக்தி பீடம் என அழைக்கப்படும்
பிந்திவாசினி கோயில் சென்றோம். அம்மனின் பல் விழுந்த வகையில் அவ்விடம் முக்கியத்துவம்
பெற்றதாகக் கூறினர். மதியம் சீதாமடி சென்றோம்.
வால்மீகி ஆசிரமத்தில் லவகுசா
வளரும்போது, ராமர் அனுப்பிய அசுவமேத யாகக் குதிரை அங்கு வந்ததாகவும், அது ராமருக்குரியது
எனத் தெரியாமல் லவகுசா அதனைக் கட்டிவைத்ததாகவும், அதனைவிடுவிக்க ராமர் வந்தததாகவும்,
அப்போது ராமருக்கும் லவகுசாவிற்கும் இடையே சண்டை நடந்ததாகவும், அப்போது சீதை வெளியே
வந்து ராமரிடம் பிள்ளைகளைப் பற்றி கூறிவிட்டு, பிள்ளைகளை ராமரிடம் ஒப்படைத்துவிட்டு
பூமிக்குள் சென்றதாகவும் கூறினர். சீதை முன்னர் பூமியிலிருந்து தோன்றியவள் என்றும்
கூறினர். இந்த இடமே சீதாமடி எனப்பட்டது. ரம்மியமான சூழலில் சுவற்றில் சீதையின்
சிற்பத்தைக் காணமுடிந்தது.
ஹரித்வார்
14.10.2014 அன்று புறப்பட்டு 15.10.2014 அன்று ஹரித்வார் வந்தடைந்தோம்.
அங்கு காயத்ரி யாகசாலை, ஆனந்தமாயி ஆசிரமம், சீதளமாதா கோயில், சிவசக்தி பீடம், லட்சுமிநாராயணா
கோயில், தட்சேஸ்வர மகாதேவ் கோயில், தட்சண் யாககுண்டம், வைஷ்ணவதேவி எனப்படும்
மாதாலால் தேவி கோயில், பூமாநிகேதன் கோயில், படிக லிங்கம், ருட்திராட்ச மரம், மரண பயம்
நீக்குபவர் எனப்படும் மிருத்துஞ்சேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம்.
ஒரு நாள் முழுவதும் பல கோயில்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றோம். 

வைஷ்ணவதேவி எனப்படும்
மாதாலால் தேவி கோயில் மற்றும் பூமாநிகேதன் கோயில் இருந்த இடத்தில் ஒரே தெருவில் அதிக
எண்ணிக்கையிலான கோயில்களைக் காணமுடிந்தது.
ரிஷிகேஷ்
16.10.2014 அன்று ரிஷிகேஷுக்கு சென்றோம். ராவணனைக் கொன்ற தோஷம் நீங்கிய லட்சுமண் கோயில், லட்சுமணன் ஜுலா எனப்படும் பெரிய தொங்கு பாலம், பத்ரிநாத் கோயில், பெரிய லிங்க பானத்தைக் கொண்ட அகிலேஸ்வர் கோயில், துர்கா கோயில், திரயம்பகேஸ்வரர் கோயில், ராமன் ஜுலா எனப்படும் மற்றொரு பெரிய தொங்கு பாலம், பத்ரி நாராயணன் என்கிற சத்ருகனன் கோயில் கோயிலுக்குச் சென்றோம். அனைத்துக் கோயில்களையும் பார்த்துவிட்டு ஹரித்வார் திரும்பினோம். சற்றே ஓய்வெடுத்தபின்னர் மறு நாள் காலை அங்கிருந்து புறப்பட்டு 42 மணி நேர பயணத்திற்குப் பின் சென்னை வந்தடைந்தோம். வட இந்தியப் பயணத்தின்போது மறக்கமுடியாத மற்றொன்று ரோப் கார் பயணம். வித்தியாசமான அனுபவம்.
எனது அண்ணன் மகள் குடும்பத்துடன்
எங்களைக் காணவந்து அனைவரும் சிற்றுண்டி வருந்து தந்தார். அவர்கள் வந்தது எங்களுக்கு
மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டு தஞ்சை வந்தடைந்தோம்.
இவ்வளவு கோயில்களைப் பார்த்த எங்களுக்கு நம்மூர்க்
கோயில்களைப் பார்த்ததுபோன்ற உணர்வு இல்லை. இங்கே எல்லா சுவாமிகளும் மார்பிளில்
இருக்கின்றன. ஏதோ பொருட்காட்சிக்குச் சென்றுவந்ததுபோன்ற உணர்வு இருந்தது. நந்தி, லிங்கம்
ஒழுங்கின்றி பக்கம் மாறி பல இடங்களில் இருந்தன. விபூதியோ, குங்குமமோ தரப்படவில்லை.
அர்ச்சகர்கள் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தனர். காசியிலும் பிற இடங்களிலும் ஜிலேபி
சூடாகப் போட்டுத் தருவது அப்பகுதியின் சிறப்பாக இருந்தது. இரு நாள்கள்கூட தாங்காது
என்று கூறினர். அடுப்பிலிருந்து அவ்வப்போது போட்டு எடுத்து சாப்பிடும்போது மிகவும்
ருசியாக இருந்தது. இங்கு கடுகு எண்ணெயில் சமையல் செய்கிறார்கள். நாங்கள் தங்கியிருந்த
பகுதிகளில் சத்திரத்தில் தமிழக உணவு வகைகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. ரயிலில் வரும்போதுதான்
சாப்பாட்டுக்குச் சிறிது சிரமப்பட்டோம். பயணத்தின்போது பல மாநிலத்தைச் சார்ந்த மக்களைக்
காண முடிந்தது. அவர்கள் பேசும் பல வகையான மொழியைக் கேட்க முடிந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமே
புரிந்துகொள்ளமுடிந்தது. மக்களின் வித்தியாசமான பழக்க வழக்கங்களையும், ஆடை அணியும்
முறைகளையும் காணமுடிந்தது. காசியில் தினமணி வாங்கிப் படிக்கும் கிடைத்தது. தமிழ் செய்தித்தாளைப்
பார்க்க எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்தி தெரியாதது எங்களுக்குச் சற்றுச் சிரமமாக
இருந்தபோதிலும் அரைகுறை ஆங்கிலத்திலும் கை ஜாடையிலும் பேரம் பேசி பொருள்களை வாங்கினோம்.
ஒட்டுமொத்தத்தில் எங்களது இந்த அனுபவம் வாழ்நாளில் மறக்கமுடியாததாக அமைந்தது.
நன்றி : எங்களை அழைத்துச் சென்ற திரு செல்வமணி, புகைப்படம் எடுத்து உதவிய அண்ணி திருமதி கண்மணி இராமமூர்த்தி
நன்றி : எங்களை அழைத்துச் சென்ற திரு செல்வமணி, புகைப்படம் எடுத்து உதவிய அண்ணி திருமதி கண்மணி இராமமூர்த்தி
நேரில் சென்றுவந்த உணர்வு
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ஒரு குடும்பமே எழுத்துப் பணியில் ஈடுபடுவது
மகிழ்வினைத் தருகின்றது
அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை அம்மா...
ReplyDeleteஅருமையான ஆன்மீகப் பயணம் பற்றிய குறிப்புகளும் தங்கள் அனுபவமும் அருமை.
ReplyDeleteஅருமை
ReplyDeleteரிஷிகேஷ் ஏற்கனவே சென்றிருந்தாலும் மீண்டும் பார்த்த நிறைவு ஏற்பட்டது. சிறப்பான கட்டுரை
ReplyDelete