Wednesday, 13 January 2016

வேதாரண்யம் மறைக்காட்டீஸ்வரர் கோயில்

2013 புத்தாண்டை முன்னிட்டு மந்த்ராலயம் மற்றும் ஹம்பிக்கு குடும்பத்துடன் சென்றுவந்த அனுபவம் தினமணியில் கட்டுரையாக வெளிவந்தது. அக்கட்டுரையைப் பார்த்ததும் தொடர்ந்து கோயில்களுக்குச் செல்லும்போது பெற்ற அனுபவங்களை  எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவ்வகையில் அவ்வப்போது சென்ற இடங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அவ்வகையில் எங்களது வட இந்தியப்பயணம், உவரிக்கோயில், நல்லிக்கோயில் போன்ற இடங்களுக்குச் சென்ற அனுபவங்கள் கட்டுரைகளாக வெளிவந்தன. இவை தவிர வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் வெளியானது. இக்கட்டுரைகளை தனியாக வலைப்பூ தொடங்கி அவற்றில் பதிய விரும்பி 2016 மகாமக ஆண்டில் (பிப்ரவரி 13-22 மகாமக நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில்) எழுத ஆரம்பிக்கிறேன்.

வலைப்பூவில் முதல் பதிவாக நாங்கள் வேதாரண்யம் கோயிலுக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் வேதாரண்யத்திலுள்ள கோயில்களுக்கு  நானும் என் கணவரும் சென்றோம். வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு சித்திரவேலு எங்களை வேதாரண்யம், அகத்தியான்பள்ளி, கோடியக்கரை, ஆகிய இடங்களிலுள்ள கோயில்களுக்கு அழைத்துச் சென்றார். 
கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கருகே எனது கணவர் திரு ஜம்புலிங்கம்,
எங்களை அழைத்துச்சென்ற திரு சித்திரவேலு
முதலில் நாங்கள் சென்றது வேதாரண்யம் மறைக்காட்டீஸ்வரர் கோயில். வேதங்கள் வழிபட்டது,  திருமுறைகளில் இடம் பெற்றது, சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று,  ஞானசம்பந்தரும், அப்பரும் வேதங்களால் அடைக்கப்பட்ட கதவு திறக்கவும் அடைக்கவும் பாடப்பட்ட சிறப்புடையது உள்ளிட்ட பல சிறப்புகளைக் கொண்டது வேதாரண்யம் மறைக்காட்டீஸ்வரர் கோயிலாகும். 1300 ஆண்டுகளுக்கு முந்தைய இக்கோயிலில் ராமர் வந்து வழிபட்ட தோஷம் நீங்கியதாக தல வரலாறு கூறுகிறது. 


இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கி கண்ணைக்கவரும் வகையில் உள்ளது. கீழக் கோபுர வாசலில் இலக்கு அறிவித்த விநாயகர் உள்ளார். கோபுர வாயிலின் வழியே உள்ளே வரும்போது பைரவர் குளம், வீதிவிடங்கர் சன்னதி, காட்சி கொடுத்தவர் சன்னதி, இராமநாதர் சன்னதி ஆகியவை உள்ளன. காட்சி கொடுத்தவர் சன்னதியின் முன்புறம் சுழலும் கற்தூண்கள் உள்ளன. அதைச் சுற்றும்போது நமக்கு வியப்பாக உள்ளது. மூலவரான லிங்கத் திருமேனிக்குப் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றனர். 


மூலவர் சன்னதியின் கருவறையின் வெளிப்புறத் திருச்சுற்றில் 63 நாயன்மார்கள் உள்ளனர். அழகான ஓவியங்கள் இங்கு காணப்படுகின்றன. 
இக்கோயிலில் உள்ள இறைவன் மறைக்காட்டீஸ்வரர் என்றும், வேதாரண்யேஸ்வரர் என்றும், இறைவி வீணவாதவிதூஷனி என்றும் யாழைப் பழித்த மொழியம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தின் மரம் வன்னியாகும்.  உள் பிரகாரத்தில் சுழலும் கல் தூண்கள் இரண்டு உள்ளன. அவற்றைச் சுற்றலாம். 

 மேலக்கோபுர வாசலின் வலப்புறம் வீரகத்தி விநாயகர், குமரன் சன்னதி, சேர, சோழ பாண்டிய லிங்கங்கள்  கருவறைக்குப் பின்புறம்  அமைந்துள்ளது. மேலக்குமரன் சன்னதி குகை வடிவில் அமைந்துள்ளது. அருகே புன்னை மரத்தடியில் நசிகேது, சுவேதகேது அமைந்துள்ளன. 

அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன் மண்டபத்தில் மேல் புறம் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து தல விநாயகர், காட்சி கொடுத்த நாயனார், ஆறுமுகர், ஜுரதேவர், சனி பகவான், வீணை இல்லாத சரஸ்வதி, அன்னபூரணி, துர்க்கை, சோழீஸ்வர லிங்கம் ஆகிய சன்னதிகளைக் காணலாம். அதற்கடுத்து பள்ளியறை, பைரவர், சூரிய சந்திரர்கள் சன்னதிகள் உள்ளன.

வேதாரண்யம் விளக்கழகு என்பது பழமொழி. நேரில் கோயிலுக்குச் செல்லும்போது கோயிலின் சன்னதியில் இப்பழமொழியினை நேரில் கண்டு உணரலாம். 

வேதாரண்யம் கோயில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் புண்ணியமாகும். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த திருவருட்செல்வர் திரைப்படத்தில் கோயிலின் மூடிய கதவைத் திறக்கப் பாடிய பாடல் நினைவிற்கு வரும். அப்பர், ஞானசம்பந்தர் பாடிய அத்தலத்தில் நின்றபோது நமக்கு அளவில்லா மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைத்தது.