அமர்நாத் யாத்திரை

என் சகோதரிகளின் குடும்பத்தார் ஜூலை 2023இல் அமர்நாத் செல்லத் திட்டமிட்டிருந்தபோது, அதற்கு முன்னர் நான் நாளிதழில் படித்த செய்தி நினைவிற்கு வந்தது. 

"தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத்தில்  3,880 மீட்டர் உயரத்தில் ஆண்டுதோறும் இயற்கையாக பனிலிங்கம் உருவாகிறது. இந்த லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். 62 நாள்களுக்கு நீடிக்கவுள்ள  அமர்நாத் யாத்திரை காஷ்மீரில் சனிக்கிழமை (1.7.2023) முறைப்படி தொடங்குகிறது. 48 கி,மீ நீளம் நுன்வான்/பஹல்காம் பாதையிலும் கந்தர்மால்  மாவட்டத்தில் உள்ள 14 கி.மீ. நீளம் பால்டால் பாதையிலும் யாத்திரை நடைபெற உள்ளது." (நன்றி : தினமணி,  1.7.2023)

சுற்றுலா செல்வது யாவருக்கும் பிடித்த ஒன்று. தமிழ்நாட்டில் எண்ணிலடங்கா கோயில்கள் இருக்கின்றன. நான் தமிழ்நாட்டிற்கு வெளியில் முதலில் சென்றது மந்த்ராலயம். அடுத்து காசி, மைசூர், பேலூர், ஹலேபேட், சோம்நாத்பூர் போன்ற இடங்களுக்குச் சென்றுள்ளேன். 

இந்த வருடம் என் சகோதரிகளின் குடும்பத்தார் பஞ்சாபில் பொற்கோயில், வாகா பார்டர், ஜாலியன்வாலாபாக் நினைவுச்சின்னம், அமர்நாத் பனி லிங்கம்,  ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவதேவிக்கோயில் ஆகிய இடங்களுக்கு செல்லவுள்ளதாகக் கூறி, என்னையும் அழைத்தனர். காஷ்மீர் பார்க்க எனக்கு விருப்பம், அமர்நாத் செல்வதென்றால் எனக்கு யோசனையாக இருக்கிறது என்றேன். என் உடல் நிலை, சாப்பாடு, குதிரை/டோலியில் செல்லல் போன்றவற்றை எல்லாம் யோசித்துவிட்டு வரவில்லையெனக் கூறிவிட்டேன். அவர்கள் ஆறு பேர் சென்றார்கள். அவர்களிடம், அனைவரும் பார்த்துவிட்டு வாருங்கள், நான் வீட்டிலிருந்தே  பனிலிங்கத்தைத் தரிசித்துக்கொள்கிறேன்,  என்றேன். 

ஜூலை 2023இல் பொன்மதி அக்கா-மச்சான், நவமணி அக்கா, தங்கை செல்வமணி, தங்கை தமிழ்ச்செல்வி, மாமா பேத்தி தங்கமணி ஆகியோர் நலமாக  யாத்திரையினை நிறைவு செய்து திரும்பினார்கள். அவர்கள் சென்று வந்த அனுபவத்தை ஆவலோடு கேட்டேன். அப்போது நானும் உடன் சென்று பார்த்தது போல் இருந்தது. அவர்கள் அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

முன்பு  பெரியவர்கள் காசி போவதற்கு அதிகம் யோசிப்பார்கள் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செல்வார்கள். இன்று அப்படியில்லை, பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் செல்கிறார்கள். இன்று சுற்றுலா அழைத்துச் செல்ல தனியார் சுற்றுலா நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து அமர்நாந் பனிலிங்கம் பார்ப்பதற்கு அதிகமாக  செல்கிறார்கள். 40 வருடங்களுக்கு முன்னர், எங்கள் பெரியம்மா திருமதி பொன்னம்மாள் அவர்கள் அமர்நாத்தும், கைலாசமும் சென்று வந்து அம்மாவிடம் கூறியது என் நினைவில் உள்ளது. அவர்கள், அம்மா வீட்டிற்கு வந்தால்  கோயில்களுக்குச் சென்றதைப் பற்றி அதிகமாகப் பேசுவார்கள். ஒரு சமயம் அவர்கள், "கண்ணுக்கு சிவன் தாண்டவம் ஆடியது அப்படியே தத்ரூபமாகத் தெரியுது" என்று அம்மாவிடம் கூறினார்கள். அதைக் கேட்டு நான் வியந்தேன். அவர் கூறும் சுவாமி கதைகளை ஆவலுடன் கேட்போம். 

பெரியம்மாவின் சென்ற இடத்திற்கு இப்போது என் அக்காக்கள், தங்கைகள் சென்று, பார்த்துவிட்டு வந்தது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. முன்பு யாரோ ஒருவர் சென்று வந்து கதை செல்வார்கள். இப்போது பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கில் செல்கிறார்கள். ஆன்லைனில் பதிவு செய்தும் செல்கிறார்கள். 

அவர்களின் அனுபவம். சென்ற வழியில் பனிபடர்ந்த இடங்கள், மலைகள், மேகங்கள், மரங்கள் இருந்ததைக் கூறினர். மலைகள் மீது அருவியிலிருந்து தண்ணீர் கொட்டும் காட்சி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்ததாகவும், மலைகளில் சூரிய வெளிச்சம் படுவது தங்கக் கலரில் இருந்ததாகவும், ஒவ்வொரு மலையும் கலராகவும் சற்று வித்தியாசமாகவும் இருந்ததாகவும் கூறினர். இயற்கைச்சூழலை ரசித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் சென்றதையும், பனிலிங்கத்தை தரிசித்ததையும்  மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள். பனிலிங்கத்தைப் பார்க்கச் செல்வதற்கு மலைமேல் ஏறும்போது கடினமாக இருந்தபோதிலும்  பனிலிங்கத்தை பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் கடினம் தெரியவில்லை என்றனர். சிலர் டோலியிலும், சிலர் குதிரையிலும் சென்றார்களாம். செல்லும் வழியில் அன்னதானம் நடைபெற்றதாகவும், டீயும் ரஸ்க்கும் இலவசமாகத் தந்ததாகவும் கூறினர். பனி லிங்கமானது பௌர்ணமியன்று பெரியதாகவும், அமாவாசையன்று  சற்று சிறியதாகவும்  இருக்குமாம். தனியாக ஒரு பனி லிங்கமும் (சிவன்), அருகில் மற்றொரு லிங்கமும் (சிவன், பார்வதியுடன்) இருப்பதாகக் கூறினர். குகையில் புறாவுக்கு சிவன் சாகாவரம் கொடுத்ததாகவும், அவற்றைப் பார்த்தால் நல்லது என்று கதைகள் சொல்லப்படுவதாகவும் கூறினர். அவர்கள் அங்கு இரு புறாக்களைக் கண்டதாகக் கூறினார்கள்.

மலையின் அடிவாரத்தில் உள்ள சிறிய கடைகளில் பனிலிங்கப் போட்டோ,  சிவன் டாலர், மணி, வளையல், ருத்ராட்ச மாலை விற்கப்பட்டதாகவும், பலர் ஆர்வத்துடன் வாங்கியதாகவும் கூறினர். சுவாமியை தரிசிக்க வந்தோரில் சிலர் தாம் வேண்டிக்கொண்டு, பிற பக்தர்களுக்கு வெள்ளியாலான சிறிய டாலரையும், கல்கண்டையும் தந்தார்களாம். செல்லும் பக்தர்களுக்கு இளம் வயதுக் குழந்தைகள், நெற்றியில் சூல வடிவில் குங்குமப்பொட்டை நெற்றியில் அச்சாக வைத்தார்களாம். கோயிலில் அர்ச்சனை, குங்குமம், விபூதி போன்றவை கிடையாதாம். 

அங்கு நம் இந்திய ராணுவ வீரர்கள் பனி, மழை, வெயில் எனப் பாராமல் நம் மக்களை கோயிலுக்கு செல்ல பாதுகாப்பாக அனுப்புவதாகவும், கேட்கும் கேள்விகளுக்கு நிதானமாகவும் பொறுமையாகவும் பதில் சொல்லி உதவியதாகவும் கூறினர்.     

நம் நாட்டில் இதுபோன்று இடங்கள் உள்ளதை நேரில்  பார்த்தபோது வியப்பாக இருந்தது என்றார்கள். எங்கு பார்த்தாலும் மலைகள், அதன் அடிவாரங்கள், குகைகள், நீர்வீழ்ச்சிகள் என்ற வகையில் பார்க்கும் இடங்கள் எல்லாம் தண்ணீரும், பனியும், பனிக்கட்டிகளும் இருந்ததாகவும், பனிலிங்கத்தை புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லையென்றும் கூறினர். பஞ்சாப் பொற்கோயில், ஜாலியன் வாலாபாக் நினைவிடம், வாகா பார்டர் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, நிறைவாக அமர்நாத் சென்றதாகவும், நேரமில்லாததால் வைஷ்ணதேவி கோயிலுக்குச் செல்லவில்லை என்றும் கூறினர்.

அவர்கள் அனுப்பியிருந்த போட்டோக்களைப் பார்த்தபோது நானும் அவர்களுடன் சென்றது போல் இருந்தது. 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார். சிவனுக்கு மனக்கோயில் கட்டியதைப்போல நான் தஞ்சாவூரில் இருந்துகொண்டு பனிலிங்கத்தை தரிசித்தேன். 















புகைப்படங்கள் நன்றி: சு.பொன்மதி, தி. தமிழ்ச்செல்வி

Comments

  1. படங்கள் அழகு...

    விளக்கங்கள் அருமை...

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்