இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்
பெரிய கோயில் என்றாலே எனக்கு நினைவிற்கு வருவது திரு குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா அவர்கள் எழுதிய இராஜராஜேச்சரம் என்ற நூல் ஆகும். இந்நூலைப் படித்தால் கோயிலைப் பற்றி முழுமையாக அறியமுடியும். தஞ்சாவூர் பெரிய கோயிலின் குடமுழுக்கு 5 பிப்ரவரி 2020 நினைவாக இந்நூலில் படித்ததில் சிலவற்றைப் பகிர்கிறேன்.
சோழ
நாடு என்றும் சோழ மண்டலம் என்றும் அழைக்கப்பெற்ற ஒரு பரந்த நாட்டின் தலைநகரமாக விளங்கிய
ஊரே தஞ்சையாகும். தண்+செய் என்பதே தஞ்சையாயிற்று….ஏறத்தாழ கி.பி.850இல் விஜயாலய சோழன்
முத்தரைய மன்னன் ஒருவனை வென்று தஞ்சையைக் கைப்பற்றி சோழ நாட்டின் தலைநகரமாக ஆக்கினான்.
விஜயாலய சோழனில் தொடங்கி ஆதித்தன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன்,
ஆதித்த கரிகாலன், மதுராந்தக உத்தமசோழன், இராஜராஜன், இராஜேந்திரன் (இவனது ஆட்சியின்முதல்
10 ஆண்டுகள்) ஆகிய பெருமன்னர்கள் காலம் வரை 176 ஆண்டுகள் தஞ்சை சோழப் பேரரசின் தலைநகரமாக
விளங்கிற்று. (ப.15)
திருக்கோயில் அமைப்பு : திருமதிலோடு இணைந்த திருச்சுற்று மாளிகை நாற்புறமும்
சூழ்ந்து நிற்க நடுவே கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் இராஜராஜேஸ்வரம் என்னும் பெருங்கோயில்
திகழ, வடபுறம் ஸ்ரீவிமானத்திற்கருகே சண்டீசர் திருக்கோயில் எழில் செய்ய அமைந்ததே தஞ்சைக் கோயிலின் பண்டைய அமைப்பாகும்.
இவை தவிர வேறு கோயில்கள் எதுவும் பிரகாரத்தில் எழுப்பப்பெறவில்லை. (ப.37)
![]() |
கேரளாந்தகன் திருவாயில் |
கேரளாந்தகன் திருவாயில் : ராஜராஜேச்சரத்தின்
பிரதான நுழைவாயிலாகத் திகழும் திருக்கோபுரம் கேரளாந்தகன் திருவாயிலாகும். ஐந்து நிலைகளுடன் கம்பீரமாகத் திகழும் இந்தத் திருக்கோபுரத்திற்குத்
தனிச்சிறப்புகள் பல உண்டு. இராசராசன் காலம் வரை கோயில்களில் உயரமான கோபுரங்கள் எடுக்கும்
மரபு இல்லை….தமிழகத்தில் எழுந்த உயரமான முதற் கோபுரம் தஞ்சைக் கேரளாந்தகன் திருக்கோபுரமேயாகும்….கேரள
மன்னனை வென்று இவ்வாறு சிறப்புப் பெற்றமையால் இராசராசன் ‘கேரளாந்தகன்’ என சிறப்புப்பட்டம்
சூடிக்கொண்டான். (பக்.29-30)
![]() |
இராசராசன் திருவாயில் |
இராசராசன் திருவாயில் : “ஸ்ரீராஜராஜன் திருவாசலுக்கு வடக்கு ஈசானமூர்த்தி
ஆலயத்தளவுஞ் செல்ல கல்லில் வெட்டின……”எனத் தொடரும் கல்வெட்டொன்று இரண்டாம் கோபுரத்தை
‘ஸ்ரீராஜராஜன் திருவாசல்’ என்று குறிப்பிடுகின்றது. கேரளாந்தகன் திருவாசலைவிட சற்று
உயரம் குறைந்து மூன்று தளங்களுடன் இக்கோபுரம் கருங்கற் கட்டுமானமாய் அமைந்துள்ளது.
(ப.32)
![]() |
விநாயகர் கோயில் |
![]() |
சுப்பிரமணியர் திருக்கோயில் |
சுப்பிரமணியர் திருக்கோயில் : திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் விசயநகரப்
பேரரசு காலத்தில் எடுக்கப்பெற்ற சுப்பிரமணியர் ஆலயம் உள்ளது…கல்வெட்டின் எழுத்தமைதி,
சிற்பங்களின் தன்மை, கட்டுமான நுட்பங்கள் மற்ற கூறுகள் அனைத்தையும் இவ்வாலயம் செவ்வப்ப
நாயக்கரால் எழுப்பப்பெற்றிருக்கலாம் என்றே கருதலாம். (பக்.51-52)
![]() |
அம்மன் கோயில் |
அம்மன் கோயில் : தற்போது தஞ்சைப் பெரிய கோயிலின் நந்திமண்டபத்திற்கு
வடபுறம் காணப்பெறும் அம்மன் கோயிலின் கருவறையின் மேற்குப்புறச் சுவரில் கல்வெட்டு ஒன்று
உள்ளது….அதன் எழுத்தமைதி கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று அறிஞர்கள் உறுதி
செய்துள்ளனர். இதன் அடிப்படையில் இக்கல்வெட்டு பாண்டிய மன்னன் ஒருவனது கல்வெட்டு என்று
கருத முடிகிறது. மன்னனது பெயர் குறிக்கப்பெறாமல் அவனது ஆணையாக மட்டும் இச்சாசனம் இருப்பினும்,
இவனே தற்போதுள்ள அம்மன் ஆலயத்தை எழுப்பித்தவன் என்பதையும் அறியமுடிகிறது…. தஞ்சைப்
பெருங்கோயிலுக்கு பாண்டிய மன்னன் ஒருவன் அளித்த ஒரு கொடையே இந்த அம்மன் ஆலயமாகும்.
(பக்.46-47)
கற்பனைச் செய்திகள்
தஞ்சை
பெரிய கோயிலைப் பற்றிய உண்மைக்குப் புறம்பான பல கற்பனைச் செய்திகள் கடந்த சில நூற்றாண்டுக்
காலமாக மக்களிடம் ஆழமாக நிலவி வருகின்றன. (பக்.477-479)
(1)
கருவறைக்கு மேலாக உள்ள ஸ்ரீவிமானத்தை கோபுரம் என குறிப்பிட்டு அதன் நிழல் ஒருபோதும்
கீழே சாயாது என்பர்….இக்கோயில் ஸ்ரீவிமானத்தின் கலசம், சிகரம், கீர்த்தி முகம், இடபங்கள்,
நெடிதுயர்ந்த கட்டுமானங்கள் ஆகிய அனைத்து நிழலும் எல்லாக்காலங்களிலும் தெளிவாக விழும்
என்பதுதான் உண்மை.
(2)
ஸ்ரீவிமானத்தின் மேலுள்ள பந்து போன்ற சிகரக்கல் ஒரே கல் என்றும், அது 80 டன் எடையுடையது
என்றும் கூறுவர்….இதுவும் உண்மைக்குப் புறம்பானது. ஸ்ரீவிமானத்தின்மேல் உள்ள சிகரம்
பல கற்களை இணைத்து உருவாக்கப் பெற்றதாகும்.
(3)
ஸ்ரீவிமானத்தின் உச்சியை மூடும் கற்களை பிரமரந்திரகல் எனக் குறிப்பிடுவர். தஞ்சைக்
கோயிலின் உச்சியில் உள்ள சிகரம் பிரமரந்திர கல்லின்மேல் உள்ளதாகவும் அது அழகி என்ற
கிழவி வைத்திருந்த கல் என்றும் அதன் நிழலில்தான் ஈசன் இருப்பேன் என்று இராசராசனின்
கனவில் கூறவே அவ்வாறே அக்கல் அங்கு ஏற்றப்பட்டதாகக் கூறுவர். இப்புனைந்துரை 1800 கால
கட்டத்திலேயே நிலவியது என்பதற்கு கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எழுதிய பெருவுடையார்
பாலையில் ஒரு பாடல் குறிப்பு உள்ளது.
(4)
தஞ்சைப் பெருவுடையார் முன்பு திகழும் ஒரே கல்லால் ஆன நந்தி இராசராசன் உருவாக்கிய நந்தி
என்றும்…நந்தி வளர்கிறது என்றும்…நந்தி தலைமீது ஒரு ஆணியை அடித்துக் கட்டுப்படுத்தினர்
என்றும் கூறுவர். இக்கூறுகள் அனைத்தும் கற்பனைக் கதைகளே ஆகும். மாமன்னன் இக்கோயிலுக்கு
வடித்த நந்தி தற்போது வராகி கோயிலின் அருகே திருச்சுற்று மாளிகையில் உள்ளது. தற்போது
காணப்பெறும் பெரிய நந்தி தஞ்சையை ஆட்சி செய்த நாயக்க அரசர்கள் காலத்தில் உருவாக்கப்பெற்றதாகும்.
புகைப்படங்கள் உதவி : உடன் வந்த என் கணவர் முனைவர் பா.ஜம்புலிங்கம்
விரிவான தகவல்கள் நன்று.
ReplyDeleteஅருமையானப் பதிவு
ReplyDeleteநன்றி