வாழ்த்துக்கள், செல்வராணி சரவணன்

இன்று  (2.8.2023) சென்னை வானொலி நிலைய விவித்பாரதி   எப்.எம்.இல் (Vividh Bharati தமிழ் FM 102.3) சென்னை பேஷன் இன்ஸ்டிடியூட்டின் உரிமையாளர் திருமதி. ச. செல்வராணி சரவணன் சிறப்பாக உரையாடினார். அவருடைய 15 வருட அனுபவத்தைப் பகிர்ந்த விதம் சிறப்பாக இருந்தது. 


அவர் என் அண்ணனின் (திரு.தி.ராமமூர்த்தி-திருமதி.ரா.கண்மணி) மூத்த மகள் செல்வராணி. அவர் சிறுவயதிலேயே சுறுசுறுப்புடன் இருப்பார். கைத்தொழில் கற்றுக்கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருபவர். உல்லன் நூலில் அவர் பின்னுவது மிக அழகாகவும், ஒன்று போலவும் காணப்படும்.

திருமணத்திற்குப் பிறகு, சென்னையில் குடியேறிய அவர் சிறுவயதில் தான் கற்றுக்கொண்ட கலையைத் தொடர ஆரம்பித்தார். அவரது  தையற்கலை இன்று பலருக்குப் பயன்படுகிறது. அவர் புரியும்படி சொல்லிக்கொடுப்பதில் வல்லவர்.  நான் அவரிடம்தான் உல்லனில் நிலத்திரையையும், அதில் தொங்குகின்ற பொம்மையையும், கண்ணடியாலான டியூபில் ஒரு கூடை பின்னவும்  கற்றுக்கொண்டேன். 

வீட்டில் ராணி என்று அழைப்போம். அவரது கணவர் செல்வா என அழைப்பார்.  அவருடைய அம்மாவின் ஊக்கமும், கணவரின் உந்துதலும், அவருடைய விடாமுயற்சிக்குத் துணையாக அமைந்தன.  இன்று ஒரு இன்ஸ்டியூட்டிற்கு ஒரு தலைவியாகச் செயல்பட்டுக்கொண்டு, மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறார். 

அண்மையில் நான் சென்னை சென்ற போது அவர் நடத்துகின்ற சென்னை பேஷன் இன்ஸ்டிடியூட்டிற்குச் சென்றேன். அதைப்பார்த்தபோது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பெண்களுக்கு மட்டுமே அதனை நடத்துவதாகக் கூறினார். 

ரேடியோவில் அவருடைய பேச்சு கோர்வையாக இருந்தது. வாசகர்களின் கேள்விக்குத் தெளிவாக பதில் கூறினார். 

என் அண்ணனின் ஆளுமைத் திறனை ராணியிடம் நான் காண்கிறேன். ஒரு நிறுவனத்தை நடத்துவதென்பது சாதாரண விஷயம் கிடையாது. புத்திசாலித்தனத்தோடும், நிதானத்தோடும் அவர் நிறுவனத்தை நடத்திவருவது பெருமையாக உள்ளது. 

எனக்கு சிறு வயதிலிருந்து ரேடியோ கேட்பது மிகவும் பிடிக்கும். இன்னும் நான் ரேடியோ கேட்கிறேன். திருச்சி, மெட்ராஸ், இலங்கை வானொலி என்று கேட்டுவந்த நான், இன்று சென்னை வானொலி நிலைய விவித்பாரதியில் அண்ணன் மகள் பேசியதைக் கேட்டதும் அளவுகடந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர் மென்மேலும் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்கிறேன். 


Comments

  1. உங்கள் அண்ணன் மகளுக்கு எமது வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்