சிவகங்கைப்பூங்கா

நேற்றைய நாளிதழில் வெளியான (நான்கு ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சிவகங்கை பூங்கா, தினமணி, 2 ஏப்ரல் 2023, பக்கம் 3) கட்டுரையைப் படித்ததும்  50 ஆண்டுகளுக்கு முன் நான் முதன் முறையாகவும், பின்னர் அவ்வப்போது சென்றதும் நினைவிற்கு வந்தது. 

அச்செய்தி மூலமாக தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அருகிலுள்ள இந்தப் பூங்கா, மாமன்னன் ராஜராஜசோழனால் உருவாக்கப்பட்ட சிவகங்கைக்குளத்தைச் சுற்றி பொதுமக்களுக்கான பூங்கா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1871-72ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதை அறிந்தேன்.

பூங்காவில்  பா. தமிழழகன்


தஞ்சாவூரில் உள்ள முதன்மையான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான சிவகங்கைப்பூங்கா தஞ்சாவூரில் இருப்பவர்களுக்கு ஒரு அழகிய பொழுதுபோக்கான இடமாகும்.  வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் தஞ்சைப் பெருவுடையார் கோயில், அரண்மனை மற்றும் இப்பூங்காவிற்கு அழைத்துச் செல்வோம். சுற்றுலாவிற்கு வருபவர்களும் இங்கு வந்துசெல்வதைப் பார்த்துள்ளேன். 

பூங்காவில் நெட்லிங்க மரங்கள், ஆல மரங்கள், வேப்ப மரங்கள் என பலவகையான மரங்கள், பறவைகள், விலங்குகளைப் பார்க்கலாம். குறிப்பாக அங்குள்ள புனுகுப்பூனையை வருபவர்கள் அனைவரும் அதிசயமாகப் பார்ப்பார்கள். பூங்காவின் உள்ளே புல் தரை பார்க்க அழகாக இருக்கும். குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சருக்குமரம், கிளிக்கூண்டு போன்றவையும் இருக்கும். அருகே அழகான நீர்வீழ்ச்சி, அதன் நமடுப்பகுதியில் தாமரைப்பூ,  அதைச்சுற்றி  இரண்டு  மீன்கள், கைகளில் பானையுடன் தண்ணீர் ஊற்றும் பெண்கள் போன்ற  அழகான சிலைகள் காட்சியளிக்கும். சிறுவர்களுக்கான ரயில் பூங்காவைச் சுற்றி வரும். பூங்காவிற்கு செல்ல ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டணமில்லை. மற்ற நாட்களில் நுழைவுக்கட்டணம் செலுத்திச் செல்லலாம்.  

பூங்காவில் உள்ள சிவகங்கைக்குளத்தின் நடுவில் ஒரு சிறிய கோயில் இருக்கும். குளத்தைக் கடந்து செல்ல வின்ச் என்ற ரோப் கார் இருக்கும். தொங்கிக்கொண்டிருக்கும் இரும்புக்கம்பியில் அந்த சிறிய கார் போய்வரும். நாங்கள் அதை தொங்கு பாலம் என்போம். வின்ச் காரில் நான்கு பேர் செல்லலாம். சிறு வயதில் பூங்காவிற்கு செல்லும்போது நான் அதில் ஏறமாட்டேன். கீழே குளம் இருப்பதால் எனக்கு பயமாக இருக்கும். குளக்கரையிலிருந்து வின்ச் காரில் ஏற்றிய ஆட்களை குளத்தின் நடுவில் உள்ள கோயிலில் இறக்கிவிடுவார்கள். அடுத்த ஆட்கள் வரும் வரை நாம் நடுவில் உள்ள கோயிலில் காத்திருப்போம். 

அம்மா, அண்ணிகள், சகோதரிகளுடன் ஒரு முறை கட்டிச்சோறு கட்டிக்கொண்டு சென்றது இன்னும் நினைவில் உள்ளது.  மகன்களுடன் சில முறை சென்றுள்ளேன். நான் பூங்காவிற்கு சென்று 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 

சிவகங்கைப்பூங்காவில் 2000வாக்கில் எங்கள் மகன்கள் பாரத், சிவகுரு

நான்கு வருடங்களுக்கு முன்பு மூத்த பேரன் அழைத்தான். இரு பேரன்களையும் அங்கு அழைத்துச்செல்லும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம். என்னைப் போல பலரும் பூங்காவினை புதுப்பொலிவில் காண காத்துள்ளார்கள்.

Comments

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்