அண்ணன் செல்வராஜ் (50ஆம் ஆண்டு நினைவு நாள்)

பெரும்பாலான வணிகர்கள் ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். இது வழக்கமாக செய்வார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவும் அண்ணன்களும் புதுக்கணக்கு போடுவதற்காகக் கடைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். அன்று என் செல்வராஜ் அண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திவிட்டார். அண்ணனை செல்லமாக ராசாப்பயல் என்று வீட்டில் அழைப்பார்கள்.

எங்கள் வீட்டார் அனைவருக்கும் ஏப்ரல் மாதம் என்றாலே அண்ணனின் நினைவுகள் அனைவருடைய மனதிற்கும் வந்துவிடும். இறந்த அண்ணனுக்காக அப்போது அப்பா ஆசைப்பட்டு சமாதி கட்டினார். அம்மா, அப்பாவின் மறைவிற்குப் பிறகு செல்வராஜ் அண்ணனுக்கு அண்ணன்களும், தம்பியும் சாமி கும்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பெண் பிள்ளைகளான நாங்களும் அதில் கலந்துகொள்வோம். 

எங்கள் பெற்றோரின் (திரு. திருவண்ணாமலை நாடார்-திருமதி தில்லையம்மாள்) மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள் எல்லாம் நினைப்பதைவிட பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் என அனைவரும் ஏப்ரல் மாதம் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அண்ணனை நினைத்துக்கொண்டு பேச ஆரம்பித்து விடுவார்கள். சாமி கும்பிடும்போது அவர்கள் அனைவரும்  அண்ணனின் போட்டோவைப் பார்த்ததையும், அவரவர் அம்மா, அப்பா சொல்லுவதை நினைவில் வைத்தும் பேசுவார்கள். வெளியூரில் இருந்தாலும் அண்ணனின் நினைவு நாளை எண்ணி சாமி கும்பிட செல்கிறீர்களா என ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வார்கள்.  அண்ணன் (2 ஏப்ரல் 1973), அப்பா (22 ஏப்ரல் 1998), அம்மா (31 டிசம்பர் 2017) இறந்த நாள் நினைவாக மூவருக்கும் அண்ணன் இறந்த நாளான ஏப்ரல் 2ஆம் தேதி  சாமி கும்பிடுவார்கள். 

ஆரஞ்சு மிட்டாய், தோடு மிட்டாய், நெய் மிட்டாய், பலாப்பழம், மைசூர்பாகு, இடியாப்பம், வெண்பொங்கல், பால், பாலாடை போன்றவை அண்ணனுக்குப் பிடித்தவை  என்று அம்மாவும், பெரிய அக்காவும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அண்ணன் எங்களைவிட்டுச் சென்று 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்களைவிட்டுச் சென்றாலும் அவருடைய அன்பும் பாசமும் என்றும் மறவாமல் அனைவர் மனதிலும் உள்ளன.  

Comments

  1. நெகிழ்வான விடயம் மனம் சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  2. மறக்க இயலா நினைவுகள்

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்