அமராவதி அத்தை

எங்கள் அப்பாவினுடைய தாய்மாமாவின் மருமகள் அமராவதி அத்தை. அவர் குறிச்சித்தெருவில் எங்கள் வீட்டில்  குடியிருந்தார்கள். நாங்கள் சிறுபிள்ளைகளாக இருந்தபொமுது எங்களுக்குத் தலை பின்னிவிடுவது, ஆற்றில் எங்களைக்  குளிப்பாட்டும் பொழுது  இறுக்கமாகப் பிடிக்கச் சொல்லி தலையை தண்ணீரில் முக்கி அலசிவிடுவது, சினிமாவுக்கு போகும்போது எங்களைத் தூக்கிக்கொள்வது, தலைமுடியை சிலுப்பாமல் மறுநாள் வரை அப்படியே இருக்குமாறு அழுத்திப்பின்னுவது என்று அவர்கள் எங்கள்மீது செலுத்திய அன்பானது இன்றும் நினைவில் நிற்கிறது.  

கடைக்கு மாமா சென்றபின்  வீட்டிலேயே அத்தை சவ்வு மிட்டாய்  போடுவார்கள். அது ருசியாக இருக்கும்.  பள்ளிக்குச் செல்லும்போது மிட்டாய் வாங்க அம்மாவிடம் ஐந்து பைசா வாங்கிக்கொண்டுபோவோம். மாமா இருந்தால் எங்களுக்கு ஐந்து பைசாவுக்கு ஆறு மிட்டாய் தருவார். ஆனால் அத்தையோ ஐந்து பைசாவுக்கு ஐந்து மிட்டாய்தான் தருவார்கள். கரெக்டாக இருப்பார்கள். நாங்கள் அவர்கள் கொடுப்பதை வாங்கிவருவோம். என்னதான் வீட்டிலே தீனி தின்றாலும் அத்தை மிட்டாயை விடமாட்டீர்களே என்று அம்மா கூறுவார்கள். அவர்களுக்கு எங்கள்மீது அதிகம் பாசம் உண்டு. 

எங்கள் வீட்டிலிருந்து டபீர்குளம் ரோட்டில் வாடகைக்கு குடிமாறினார்கள். அங்கிருந்த பத்மா என்ற பிள்ளையை வளர்த்தார்கள். எங்கள் வீட்டிற்கு வரும்போது எப்பொழுதாவது பத்மாவை தூக்கிக்கொண்டு வருவார்கள். அடுத்து, அங்கிருந்து விசிறிக்காரத்தெருவில் ஒத்திக்கு குடி மாறினார்கள். அப்போது மாமா உடல்நிலை சரியில்லாமல் இருந்து, இறந்தார். பின்னர்  ஆட்டுமந்தைத்தெருவிற்குக் குடிவந்துவிட்டார்கள்.  

என் திருமணத்திற்குப் பிறகு நாங்கள் ஆட்டுமந்தைத்தெருவில் அத்தை குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் குடிவந்தோம். சிறு வயதில் எங்களை வளர்த்த அத்தை அருகில் இருந்தது எனக்கு தைரியமாக இருந்தது. நான் குடியிருந்த வீட்டிலிருந்து அம்மா வீட்டிற்குத் தனியாகச் செல்லப் பயந்து இரண்டு முறை அத்தையைத் துணைக்கு அழைத்துக்கொண்டு சென்றிருப்பேன். பிறகு என் கணவர் அத்தைக்குச் சிரமம் தராதே என்று கூறி, என்னைத் தனியாகச் செல்ல கற்றுக்கொள்ளக் கூறியதும் நான் தனியாக செல்ல ஆரம்பித்தேன். 

பெரிய மகன் பாரத் நான் அங்கு வந்த போது ஒன்பது மாதக் குழந்தை. எனக்கு தலைக்கு ஊற்றத் தெரியாது அத்தையிடம் கூறி தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டச் சொல்வேன். ஒரு முறை குடல் ஏற்றம் ஆகிவிட்டது. அத்தை தான் தட்டிவிட்டு  கைமருந்தைக் கொடுத்தார்கள். குடல் ஏற்றத்தைச் சரிசெய்யும் பழக்கத்தை எங்கள் அம்மாவிடம் கற்றுக்கொண்டதாகக் கூறினார்கள்.

காய்கறி வாங்கும்போது  பார்த்து வாங்குவதற்கு அத்தை சொல்லிக் கொடுத்தார்கள். அத்தைக்கு கத்தரிக்காய் மிகவும் பிடிக்கும். இப்போதுகூட கத்திரிக்காய் வாங்கும்போது  அவர்கள் நினைவு தான் வரும். மாமாவுக்கு சாமி கும்பிடும்போது செய்கின்ற இனிப்பு உளுந்து வடை  தனித்துவமாக இருக்கும்.

ஆட்டுமந்தைத்தெருவில் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்களின் மகள் கனியையும், கனியின் தம்பி கதிரவனையும் பாசமோடு வளர்த்தார்கள். அவர்கள் வீட்டில் அத்தையை வீட்டில்  ஒருவராகப் பாவிப்பார்கள்.  அவர்களுடன் ஊட்டிக்குச் சென்றுவந்ததாகக் கூறுவார்கள்.

வீட்டு வாடகை அதிகம் இருப்பதால் கயத்துக்காரத் தெருவில் குடிமாறினார்கள். அங்கு பக்கத்தில் பெரிய அக்கா வீடு இருந்ததால் அத்தை அங்கு சென்று பேசிவிட்டு வருவதாகச் சொல்வார்கள். அங்கு ரம்யா என்ற குழந்தையை வளர்த்தார்கள்.

குடியிருக்கும் இடத்திலெல்லாம் அருகில் உள்ள குழந்தைகளை தம் குழந்தைகளைப் போல பாவிப்பார்கள். எந்த வீட்டிற்குக் குடிசென்றாலும் அவர்களுக்கு ஏதாவது குழந்தைகள் அமைந்துவிடும். வளர்த்த குழந்தைகளை தன் சொந்தக் குழந்தைகளாகவே கவனித்துக்கொள்வார்கள்.  

அத்தை அனைவரிடமும் எளிதில் பழகக்கூடியவர். எங்கள் அம்மா, அப்பாவை ரொம்ப பிடிக்கும் என்பார்கள். அத்தையின் குரல்  சத்தமாகவும். கண்டிப்பாகவும் அதேசமயம் பாசத்தோடும் இருக்கும்,  அவர்கள் கழுவிவைக்கும் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும். அவர்கள் சமையல் செய்வதையும், வீட்டை சுத்தமாக வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். சிக்கனமாக இருப்பார்கள். அனாவசிய செலவுகள் செய்யமாட்டார்கள். 

அவர்களை நாங்கள் அத்தை என்று வாய்விட்டு சொல்லி அழைத்தபோதும், அவர்கள் உரிமையோடு என்னை பெயர் சொல்லி அழைக்கும்போதும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். 

இப்போதும்கூட நேரிலோ, போனிலோ அக்காவின் பிள்ளைகள் சித்தி என்றும், அண்ணன், தம்பி பிள்ளைகள் அத்தை என்றும் அழைக்கும் போது மிகவும் பாசமாகத் தோன்றும். பெரியம்மா, பெரியப்பா உறவு முறையைவிட அத்தை, சித்தி உறவுமுறைக்கு ஈர்ப்பு அதிகம் இருப்பதை உணர்வேன். 

2014வாக்கில் அத்தை இறைவனிடம் சென்றுவிட்டார்கள். என்றாவது அத்தை போட்ட  மிட்டாயின் ஞாபகம் வந்தால்  போட்டு தின்பேன்.

Comments

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்