உதிரமாடன்குடியிருப்பு செம்புக்குத்தி அய்யனார் கோயில்






        தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உதிரமாடன்குடியிருப்பில் உள்ள சாஸ்தா செண்பக கூத்தய்யன் கோயிலின் குடமுமுக்கு 12 செப்டம்பர் 2022, ஆவணி 27ஆம் நாளன்று சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவிற்கு குடும்பத்தாருடன் சென்றோம்.







குடமுழுக்கு நாளில் மூலவர்


கோயிலின் பின்புறம் வலது பக்கத்தில் மகாதேவர் சன்னதி

கோயிலின் எதிரில் உள்ள  சன்னதி

இக்கோயில் இப்போது கருவறை, முன் மண்டபம், விமானம் ஆகியவற்றோடு உள்ளது. செண்பக கூத்தய்யன் என்று அழைக்கப்படும் செம்புகுத்தி அய்யனார் கருவறையில் அமர்ந்த நிலையில் பூர்ண புஷ்கலையுடன் உள்ளார்.  கருவறையின் முன்பாக வலது புறத்தில் பிரம்ம சக்தியம்மன் உள்ளார். மூலவருக்கு எதிராக முன் மண்டபத்தில் பலிபீடம், அதற்கு கீழ் யானை, குதிரை, நாய் ஆகியவை உள்ளன. கருவறையின் மேல் அழகிய விமானம் உள்ளது.

முன்மண்டபத்தின் முன்பாக வலது புறத்தில் சுடலைமாடன், பேச்சியம்மன், இசக்கியம்மன், தளவாய்மாடன், மாடத்தி ஆகியோரும் இடது புறத்தில் முண்டனும் உள்ளனர். மூலவர் சன்னதியின் வெளியில் வலப்புறத்தில் மகாகணபதி சன்னதி உள்ளது. இவ்விரு சன்னதிகளுக்கும் பின்புறத்தில் சற்று தூரத்தில் குரு, மகாதேவர், மகாதேவி ஆகியோரைக் கொண்ட தனிச் சன்னதியில் மகாதேவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். அவருக்கு முன்பாக நந்தி உள்ளது.

குடமுழுக்கிற்கு முதல் நாள் அனைவரும் மதிய உணவினை கோயிலில் உண்டோம். மாலையில் யாகசாலை தொடங்கியது. மேளக்காரர்கள் நன்றாக  வாசித்தார்கள். இரவு உணவும் அனைவருக்கும் கோயில் வாளகத்திலேயே நடைப்பெற்றது. தங்குவதற்கு போதிய வசதியில்லாததால் அனைவரும் வெளியில் தங்கினோம். மறுநாள் குடமுழுக்கு நாளன்று காலையில் பூஜைகள் நடந்தன. நான்காம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. அலங்கார தீபாராதனைக்குப் பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதற்கு முன்பு 95 வருடத்திற்கு முன்பாக குடமுழுக்கு நடந்ததாக உள்ளூரில் கூறினர்.  

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள், குறிப்பாக நாடார் இனத்தவர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர். தாம் வேண்டுவதை நிறைவேற்றும் தெய்வமாக பக்தர்கள் செம்புக்குத்தி அய்யனாரை நினைத்து வழிபடுகின்றனர்.

         வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் ஆகிய நாள்களில் சிறப்புப்பூஜையும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜையும் நடைபெறுகின்றன. முடிகாணிக்கை, காது குத்துவது, பொங்கல்வைப்பது என்று வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இந்தக் கோயிலுக்கு ஆரம்பங்காலங்களில் பலியிடுதல் இருந்தது என்றும், தற்போது அவரவர் வேண்டுதல்களுக்கு ஏற்ப சன்னதியின் வெளியில் சற்று தூரத்தில் பலியிடுதல் செய்வதாகக் கூறுகிறார்கள். மண்டல பூஜை 48 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற்றது. வேண்டுவதைத் தரும் அய்யனாரை வழிபட்டு அவருடைய அருளைப் பெறுவோம்.

நினைவுகள்

இக்கோயில்  அப்பா வீட்டின் குலதெய்வமாகும். நான் பல வருடங்களுக்கு முன்பு இங்கு  சென்றபொழுது முட்கள் நிறைந்த காடாக இருந்தது. இறைவன் சன்னதி சிறிய ஓட்டுக் கொட்டகையில் இருந்தது. ஒரே திடலாக இருக்கும். அப்போதெல்லாம் கூட்டு வண்டிக்கட்டிக்கொண்டு செல்வார்களாம். நான் சிறுவயதில் அப்பா, அம்மா, சின்ன பாட்டைய்யா, சகோதரர்கள், சகோதரிகளுடன் திருச்செந்தூருக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து கோயிலுக்கு ஜீப்பில் சென்றது இன்னும் நினைவில் உள்ளது. கோயில் உள்ள இடத்திற்கு நடந்து போவது சிரமமாக இருந்தது. நம்முடைய கால்கள் மண்ணுக்குள் சிறிது புதைந்துபோகும். முள்ளும் அதிகமாக இருக்கும். 

பின்னர் அப்பா, பெரியப்பா. அண்ணன்கள் திருமணப்பத்திரிக்கை வைப்பதற்காகவும், அண்ணன் பிள்ளைகளுக்கு முடிகாணிக்கை செலுத்தவும், காது குத்தவும், தொடர்ந்து பொங்கலிடவும் செல்லும்போது நானும் உடன் சென்றுள்ளேன். இப்போது பல மாறுதல்களுடன் கோயிலைக் கண்டேன். 

ஒளிப்படங்கள் உதவி:

கணவர் முனைவர் பா.ஜம்புலிங்கம்,

தம்பி மனைவி திருமதி விஜி சேகர்


Comments

  1. நானும் தரிசித்துக் கொண்டேன் நன்றி - கில்லர்ஜி

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

திருநாலூர் மயானம்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்