கடைசிப் பக்கம் : கண்ணதாசன்

அண்மையில் கண்ணதாசனின் பல நூல்களைப் படித்தேன். அதில் கடைசிப்பக்கம் நூலிலிருந்து எனக்குப் பிடித்தவற்றைப் பகிர்கிறேன்.


1.காதலைக் காவியத்திற்கு விட்டுவிடுங்கள்; உங்கள் திருமணத்தைப் பெற்றோரிடம் ஒப்படையுங்கள்; பிறகு உங்கள் எதிர்காலத்தைப் பாருங்கள்.

2.நாம் செய்யாத ஒன்றுக்காக நாம் தண்டிக்கப்படுவோமாயின், அதன் பெயரே ஊழ்வினை.

3.செய்வினை திருத்தப்படலாம்; ஊழ்வினையைத்  திருத்தமுடியாது.

4.சந்நியாசி அளந்து வாழ்கிறான்; சம்சாரி அளவுக்கு மீறி வாழ்கிறான்.

5.நம்பிக்கை வைத்து ஒருவனைப் பின் தொடரும்போது நீ அவசரக்காரனாக இருந்தால் அதுவரையில் பட்ட கஷ்டம் வீணாகிவிடும்.

6.குழந்தையின் நம்பிக்கையைத் தாய் சிதைத்துவிட்டால், குழந்தை கொடியவனாக மாறிவிடக் கூடும்.

7.படுக்கையில் இருக்கும் நோயாளிக்குப் பிரார்த்தனையைத் தவிர வேறு பயனுள்ள கருவி எது?

8.நல்ல சந்தர்ப்பங்களை எதிர்ப்பார்த்து, வரும் சோதனைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்.

9.பிறரை வரவேற்றுக் கருணைக் காட்டுவதே கோவில். ஆகவே, இந்துவின் குடும்பம் ஒரு கோவில்.

10.ஆடை அணிவதில் கூட  இனி அடக்கம் வேண்டியிருக்கும்.

11."நாம் சொத்து சேர்க்காமல் விட்டு விட்டோமே" என்று நான் வருந்தியதுண்டு இப்போதோ, நல்ல வேளை, நாம் சேர்க்காலிருந்தோமே" என்று மகிழ்ச்சியடைகிறேன்.

12.தர்மோபதேசம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஒடிவிட்டன.  

கண்ணதாசனின் நூல்களை இப்போது தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய பள்ளிக்கால நினைவுகள் வந்துவிட்டன. சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் முதன்முதலாக கண்ணதாசனின் புத்தகங்களை என்னுடைய பெரிய அக்கா வீட்டில் (திருமதி.க.வாசுமதி- கனகராஜ்) மச்சான் வாங்கிப் படிப்பதை நான் பார்த்துள்ளேன். அதில் அட்டைப்படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே வைத்துவிடுவேன். படித்தது இல்லை. எங்கள் மச்சான் கண்ணதாசனின் வாசகர். கண்ணதாசனின் போட்டோவை அவர்களுடைய வீட்டில் பார்த்துள்ளேன். அதைப் பார்த்து அவர்தான் கண்ணதாசன் என்று தெரிந்துகொண்டேன்.  திருமணத்திற்குப்பிறகு மாமியார் வீட்டில் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் பத்து பகுதிகளைப் பார்த்தேன். என் கொழுந்தனார்  புத்தகப்பிரியர். அவர் ஒரு அலமாரி நிறைய புத்தகங்கள் வைத்திருப்பார். அவற்றில் சில புத்தகங்களைப் படித்திருக்கிறேன். படிக்கும் பழக்கம் தொடர்கிறது.

கடைசிப் பக்கம், கண்ணதாசன், பதிப்பாசிரியர்: காந்தி கண்ணதாசன்,  கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, 600 017, முப்பத்து மூன்றாம் பதிப்பு, ஜனவரி 2012,   ரூ.50

Comments

அதிக வாசிப்பு

திருநாலூர் மயானம்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்