அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி : 9ஆம் வகுப்பு

எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள் முடிந்தவுடன்  டி.சி. வாங்குவதற்காக நான் என் தோழிகளுடன் பள்ளிக்குச் சென்றேன். தலைமையாசிரியரிடம் டி.சி.யை பெற்றபின் எந்தப் பள்ளியில் சேரலாம் என முடிவு செய்து வீட்டிற்கு வந்துவிட்டோம். தோழிகளுடன் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசினர்  மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேரப்போகிறோம் என அம்மாவிடம் கூறினேன். நடந்து செல்வதற்குக் கஷ்டமாக இருக்குமே என்று அம்மா சொன்னபோது மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு செல்வோம் என்றேன்.

பள்ளியின் நுழைவாயில்

டி.சி. வாங்கிய ஒரு வாரத்திற்குள் ஜெயலெட்சுமி, சுபா, ஜாக்குலின், அனுசியா, தமிழ்ச்செல்வி ஆகிய தோழிகளுடன் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் (1978-79)  சேர்ந்தேன். சிலருடைய பெயர் நினைவில் இல்லை. முதலில் நடந்து செல்வதற்குச் சிரமமாக இருந்தது. பிறகு பழகிக்கொண்டேன். ஒன்பதாம் வகுப்பறையில்  அமர்வதற்கு இருவர் அமரும் வகையில் மேஜையுடன்கூடிய இருக்கை இருந்தது. அதில் புத்தகங்களையும், நோட்டுகளையும்  வைத்து பூட்டிவைத்துக் கொள்ளலாம். இது எனக்குப் புதிதாக இருந்தது. ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி, மாலை நான்கரை மணிக்குள் வீட்டுக்குத் திரும்புவோம்.


முன்பு தலைமையாசிரியை அலுவலகம் இருந்த கட்டிடம்


இறை வணக்கம் முடிந்தவுடன் அனைவரையும்  நிற்கவைத்து அன்றைய நாளிதழ்களின் தலைப்புச்செய்திகளை வாசிக்கச் சொல்வார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ஆளுக்கொரு நாள் படிக்கவேண்டும். நான் ஒருமுறை வாசித்தேன்.   அதுவே பதட்டமாக இருந்தது. வகுப்புத்தோழி சாந்தி சத்தமாக வாசிப்பார்.  வகுப்பு லீடர் சித்ரா உயரமாக இருப்பார். அவர் வருகைப்பதிவேட்டை ஆசிரியரிடம் கொடுப்பார். ஆசிரியர், வருகை தந்துள்ள மாணவிகளின் பெயர்களைக் கூறி அழைத்து, பதிவேட்டில் குறிப்பார். ஆசிரியர்கள் அறை எங்கள் வகுப்பு பக்கத்திலேயே இருக்கும். வகுப்பில் சத்தம் போடாமல் இருப்போம்.  


நான் படித்த ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவின் வாயில்


ஆசிரியர்கள் பாடம் நடத்துவது எனக்கு வித்யாசமாக இருந்தது. அப்போதுதான் பெரிய கரும்பலகையைப் பார்த்தேன். ஆங்கில ஆசிரியை (லீலாவதி) வகுப்பு ஆசிரியையாக இருந்தார். தமிழ் ஆசிரியை (மணிமேகலை) பாடம் நடத்துவது புரியும் படியாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆதலால் அவரை எனக்குப்  பிடிக்கும். அறிவியல் ஆசிரியை (காஞ்சனா) மெதுவாகப் பேசுவார். கணக்கு ஆசிரியை (விஜயலட்சுமி) வேகமாகக் கரும்பலகையில் கணக்குப் போடுவார். கணக்கு பாடம் நடத்தும்போது எப்போது வகுப்பு முடியும் என நினைப்பேன். அதில்  குறைந்த மதிப்பெண் எடுப்பேன். எனக்கு பிடிக்கவும் பிடிக்காது அப்போது டியூசன் வைத்து படிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை  

நாங்கள் படித்த வகுப்பறை வராண்டா


ஒரு நாளைக்கு ஏழு வகுப்புகள்  இருக்கும். படிக்கும் பாடங்களுடன், வாரம் ஒரு நாள் விளையாட்டு, ஓவியம், பாட்டு, தோட்டக்கலை போன்ற வகுப்புகள் இருக்கும்.  காய்கள், கீரை வகைகளை பள்ளியின் மைதானத்தில் பயிரிடுவோம். அறிவியல் கண்காட்சி நடக்கும். ஒரு முறை பள்ளியில் சினிமா அழைத்துச் சென்றார்கள்.வாரத்தில் இரண்டு நாள் யூனிபார்ம் உண்டு.


1978இல் எடுக்கப்பட்ட புகைப்படம், அமர்ந்துள்ளோர் வரிசையில் நான் இடமிருந்து முதலாவதாக உள்ளேன் 

1978இல்போட்டோ எடுப்பதற்காக அனைவரையும் நல்ல டிரஸ் போட்டு வரவேண்டும் என்றார்கள். என் அண்ணி மணியெல்லாம் போட வேண்டாம் என்று கூறி. நெக்லஸும், டாலர் செயினும் போட்டுவிட்டார்கள். நாங்கள் அன்று அவரவர் துணிகளைப் பார்த்து பேசிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தோம். வகுப்புத்தோழிகள் நான் அணிந்திருந்த நகைகளை அழகாக இருப்பதாகக் கூறி அணிவித்துப்பார்த்தார்கள். ஆனால் அன்று வகுப்புகளும் நடக்கவில்லை, போட்டோ எடுப்பதற்கான ஆட்களும் வரவில்லை. பிறகு  வேறு ஒரு நாள் வந்து எடுத்தார்கள். 


முழுஆண்டுத்தேர்வில் கணக்கில் நான்  தேர்ச்சிபெறவில்லை. ஆகையால் நான் பள்ளிக்கு போகமாட்டேன் என்று அம்மாவிடம் கூறிவிட்டேன். இருந்தாலும் மறுபடியும் 9ஆம் வகுப்பு செல்லும் நிலை (1979-80) ஏற்பட்டது. அப்போதும் கணக்கில் தேர்ச்சி பெறவில்லை. ஆதலால் நான் டி.சி.யை வாங்கவில்லை. 1985இல் எனக்குத் திருமணமானது.  என் கணவர், பின்னர் படிக்க டி.சி. உதவும் என்று கூறி அதை வாங்க முயற்சி எடுத்தார். நான் படித்தபோது கணக்கு ஆசிரியையாக இருந்தவர், 1994இல் நான் டி.சி. வாங்கச் சென்றபோது தலைமையாசிரியையாக இருந்தார். அப்போது வாங்கிய டி.சி. இன்றும் பாதுகாப்பாக இருக்கிறது.


13 ஏப்ரல் 2022இல் தஞ்சாவூர் பெரிய கோயில் தேர் பார்க்கச் சென்றபோது அரண்மனை வாளகத்தில் நின்றோம். நான் பள்ளியின் அருகில் நிற்பதால் உள்ளே சென்று பள்ளியைப் பார்க்கலாம், போட்டோ எடுக்கலாம் என கணவரிடம் கூறினேன். நான் படித்த ஓன்பதாம் வகுப்பைப் பார்ப்பதற்கு ஆர்வமாக சென்றேன். ஆனால் கதவு பூட்டியிருந்தது. அதன் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டேன். பிறகு பள்ளியின் மைதானம் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பிற வகுப்புகளைப் பார்த்தேன். பள்ளி அதிகமாக மாறியிருந்தது. அப்போது மைதானத்தில் இருந்த பெரிய மரம் இப்போது வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. தலைமையாசிரியை அலுவலகம், நான் படித்த வகுப்பறை போன்ற கட்டடங்கள் அப்படியே இன்னும் இருக்கின்றன பல புதிய கட்டிடங்களைக் காணமுடிநந்தது. பள்ளியில் இருந்த குடிதண்ணீர்க் குழாய், வராண்டாவில் தேர்வு எழுதியது, மைதானத்தில் விளையாடியது, அப்போது இருந்த ஆசிரியர், மாணவிகளைப் பற்றிய நினைவுகள் போன்றவை மனதில் தோன்றின. அந்த நினைவுகளுடன் பள்ளியிடமிருந்து விடை பெற்றேன்.



2022 பெரிய கோயில் தேரோட்டம்

நன்றி : 
9ஆம் வகுப்பு குரூப் போட்டோ தந்துதவிய வகுப்புத்தோழி திருமதி ஜெயலட்சுமி
பிற ஒளிப்படங்கள் எடுக்க உதவிய கணவர் திரு பா.ஜம்புலிங்கம்

Comments

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்