மக்கள் ஊழியச் சங்க நடுநிலைப்பள்ளி : அன்றும் இன்றும்

தஞ்சாவூர் மக்கள் ஊழியச் சங்க நடுநிலைப்பள்ளியில் நாங்கள் படித்த காலத்தில் (1970-78) இரு புறமும் செடிகள் இருக்கும். மைதானத்தின் நடுவில் வாதாங்காய் மரம் இருக்கும். விளையாட்டு வகுப்பின்போது மைதானத்தில்  கீழே விழுந்துகிடக்கும் வாதாங்காயை எடுத்து, உடைத்து அதில் உள்ள பருப்புகளைத் தின்போம். அது முந்திரி சுவையோடு இருக்கும். ஒரு வகை பூ மரம் இருக்கும்அந்தப் பூவை பறித்துத் தின்போம். அது புளிப்புச்சுவையுடன் இருக்கும். அதைத் தவிர சாணிக்காய் மரம் என்ற மரம் இருக்கும்.  அதன் காயைத் தண்ணீரில் போட்டால் ஊறிவிடும். வேப்பமரத்தில் இருந்து உதிரும்  வேப்பம்பழங்களை மற்றவர்கள் தின்பதை பார்த்திருக்கிறேன். நான் தின்றது கிடையாது.

பள்ளியின் வாசல் கதவுகளாக மூங்கிலால் ஆன தட்டிகள் இருக்கும்பள்ளியின் வளாகத்தில் நுழைந்ததும் இடதுபுறம் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை இருக்கும்.  வகுப்பில் உட்காருவதற்கு நீளமான ஒரு பலகை இருக்கும்மூன்றாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை பெஞ்சில் அமர்ந்திருப்போம்எட்டாம் வகுப்பில்தான் நீளமான டெஸ்கும்பெஞ்சும் இருக்கும்நாங்கள் படித்தபோது ஒவ்வொரு வகுப்புகளுக்கும் இடையில் திரை போட்டிருப்பார்கள்ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலும், எட்டாம் வகுப்பும் கூரை வேயப்பட்டிருக்கும்ஐந்து முதல் ஏழாம் வகுப்பு வரை ஓடு போடப்பட்டிருக்கும்மாடியில் கைத்தொழில் வகுப்பு இருக்கும்.

அப்போது ஆசிரியர்கள் சைக்கிளில் தான் வருவார்கள்சில மாணவர்கள் தான் சைக்கிள்களில் வருவார்கள். மாணவிகள் சைக்கிள்களில் வந்தது கிடையாது. மைதானத்தில் சைக்கிள்கள் அதிகம் இருக்காது. 

நான் படித்தபோது தலைமையாசிரியராக மீனாட்சி சுந்தரம் பிள்ளை இருந்தார். ராஜம்மாள், சிவசக்தி, ராதா, ராஜேஷ்வரி, வசந்தா, அனுசுயா, புவிலா, ஆரோக்கியமேரி, சந்திரா, கிரகலட்சுமி ஆகிய ஆசிரியைகளும், கணேசன், ரமணி, நடராஜன், பூபதி, உஷ்மான் வாசு, கலியபெருமாள், சீதாராமன், அண்ணா, (நபிகள் நாயகம்) ராவ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஆசிரியர்களும் இருந்தனர்

பள்ளியில் படித்தபோது திங்கள்கிழமையும் வெள்ளிக்கிழமையும் யூனிபார்ம் அணிந்து வரிசையாக நின்று கொடியேற்றி விட்டு தேசிய கீதம் பாடுவோம். பின்னர்இந்தியா என் தாய்நாடு, இந்தியர்கள் யாவரும் என்னுடன் பிறந்தவர்கள். என் தாய்த்திருநாட்டை நான் உளமார நேசிக்கிறேன்........” என்று தொடங்கி உறுதிமொழியை எடுப்போம்.  மற்ற நாட்களில் அவரவர் வகுப்பறையில் இறை வணக்கம் பாடுவோம். சுதந்திரதினவிழாவின்போது பள்ளிக்கு வரச்சொல்லி மைதானத்தில்  ஒவ்வொரு வகுப்பாக வரிசையாக நிற்கவைப்பார்கள். கொடியேற்றப்பட்டபின்  அனைவரும் சல்யூட்  அடிப்போம். தேசிய கீதம் பாடியதும் மாணவ மாணவிகளுக்கு  ஆரஞ்சுச்சுளை மிட்டாய், தோடு மிட்டாய் கொடுப்பார்கள். வீட்டிற்கு வந்ததும்  எத்தனை மிட்டாய்கள் என எண்ணிக் கொண்டு தின்போம்பள்ளியில் தரும் மிட்டாய்களுக்கு தனி ருசிதான்.

பள்ளியில் நான், ஜெயலெட்சுமி, முத்துலெட்சுமி, புவனேஸ்வரி, விஜயலெட்சுமி,  பிரபா, சாந்தி, நெட்டை சாந்தி, சித்ரா, ஜோதி, பரமேஸ்வரி, ஜாக்குலின், அனுசியா, கோமதி, கமலா, சிவசக்தி, கமலவேணி, செல்வம், முத்துச்செல்வி ஆகியோரோடு படித்தேன்.

குறிச்சித்தெருவில் எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும் வழியில் தோழிகளின் வீடுகள் இருக்கும். என்றாவது சேர்ந்து  செல்வோம்.

எப்போதாவது அம்மாவிடம் மூன்று பைசா ஐந்து பைசா என வாங்கி வந்து பள்ளியில் விற்கும்  தீனிகள்  மாங்காய், சவ்வுமிட்டாய் என்றாவது வாங்கித் தின்பேன். உப்பில் ஊற போட்ட நெல்லிக்காய், எலந்தப்பழம், நாவற்பழம், பொட்டுக்கடலை மிட்டாய் போன்றவற்றை விற்பார்கள்.

இப்போது கூரை வேயப்பட்ட வகுப்பறைகள் இல்லை. புதிய கான்கிரீட் கட்டுமானங்களைக் காணமுடிந்தது. கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டதால் முன்பு பெரிதாகத் தெரிந்த மைதானம் இப்போது சிறியதாகத் தெரிகிறது. கிணறு இருக்கும். அதை மூடியிருக்கிறார்கள். மாடியும் இல்லை.

கட்டடங்கள் மாறியிருந்தாலும் அண்மையில் நான் சென்றபோது பள்ளியில் படித்த நாள்கள் நினைவிற்கு வந்தன.  

Comments

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்