எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவுகள்

 திரைப்படங்களில் அதிகமாகப் பாடிய எஸ்.பி.பி, அவர்களுடைய குரலால் அதிகமாக ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவர். அவருடைய பாடல் வெளியான  முதல் திரைப்படம் 1969இல் வந்த ‘சாந்தி நிலையம்’. அதில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் “இயற்கை என்னும் இளையக் கன்னி”. அப்பாடலை டிவியில், ரேடியோவில் எப்போது போட்டாலும் கேட்பேன். மனதுக்கு ரம்மியமாக இருக்கின்ற பல பாடல்களை பாடியுள்ளார்.



தமிழ்ப் பாடல்களுக்கு முன்பே தெலுங்கு, கன்னடம்,  போன்ற மொழிகளில் பாடல்களை பாடியிருக்கிறார். 40,000 பாடல்களுக்கு மேலாக பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். அவர் பத்மஸ்ரீ (2001),   பத்மபூஷண் (2011), 47ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது (2016) உள்ளிட்ட தேசிய விருதுகளையும், 25 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். பல்துறை வித்தகரான அவர்  உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரே நாளில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

     அவர் பாடகர் மட்டுமல்ல. திரைப்பட இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர் திரைப்பட பின்னணிக்குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

பெரும்பாலான நடிகர்களுக்கு அவர் பாடியுள்ளார். அவர் பாடல்கள் தனித்து காணப்படும். அவர் தங்கை எஸ்.பி.சைலஜா ‘சலங்கை ஒலி’ படத்தில் நடித்தும்,  நடனமும் ஆடியிருப்பார். பல சினிமாக்களில் பாடியும் இருக்கிறார். அவரது மகன் எஸ்.பி.சரண் பாடியும், நடித்தும் இருக்கிறார்.

 எஸ்.பி.பி. பாடும் பாடல்கள் தனித்துவமாக இருக்கும். எம்.ஜி.ஆருக்காக “ஆயிரம் நிலவே வா” பாடியவர் சிவாஜி கணேசனுக்காக  “பொட்டு வைத்த முகமோ” என வர்ணித்த நேரத்தில் திரை இசைப்பயணத்தின் உச்சத்துக்கு சென்றார். அவரது குரல் மென்மையாகவும் பிசிறு இல்லாமாலும் தெளிவான உச்சரிப்போடும் இருக்கும்.

‘சிப்பிக்குள் முத்து’ திரைப்படத்தில்  குழந்தைகள் பேசுவது போல் கமலுக்கு குரல் கொடுத்திருப்பார். ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருப்பார். ‘கேளடி கண்மணி’ படத்தில் அஞ்சுவுக்கு தந்தையாக நடித்ததோடு “மண்ணில் இந்தக் காதல்” என்ற பாடலை மூச்சு விடாமல் பாடியிருப்பார். ‘பிரியமானவளே’ திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்திருப்பார். ‘பாட்டு பாடவா’ படத்தில் மன நலம் குன்றியவர் போல் ரகுமானுடன் நடித்திருப்பார். ‘சிகரம்’ படத்தில் ஆனந்த்பாபுவுக்கு தந்தையாக நடித்திருப்பார். ‘ஸ்ரீசாய்’ படத்தில் பொம்மை விற்பவராக நடித்திருப்பார். அவரைப் போல வேறு யாரும் இனிமையாகவும், பொறுமையாகவும் பேசமுடியாது.

அவர் நம்மைவிட்டு சென்றாலும் அவர் பாடல்கள் என்றும் நம்மை விட்டு மறையாது நம்முடனே இருக்கும். அவர் பாடல்களை நாம் தினமும் கேட்டுக்கொண்டே இருப்போம். கலைஞர்கள் என்றும் தம் கலை மூலமாக வாழ்ந்து கொண்டேயிருப்பர். இந்த இசைச் சிகரமும் அப்படியே.   


Comments

  1. தன் இனிய பாடல்களால் என்றென்றும் வாழ்ந்திருப்பார்

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்