தமிழர் திருநாள், கார்த்திகைத் திருநாள் : மாம்ஸ்பிரஸ்ஸோ

 மாம்ஸ்பிரஸ்ஸோ நடத்திய போட்டியில் வெற்றிபெற்ற, என்னுடைய பதிவுகளை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மாம்ஸ்பிரஸ்ஸோவுக்கு நன்றி.தமிழர் திருநாள்

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அம்மா வீட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்வது, வெள்ளையடிப்பது போன்ற வேலைகள் நடக்கும். பொங்கல் வந்தாலே வீடுகளில் சுத்தம் செய்வதைப் பார்க்கமுடியும். தைத்திருநாளை தமிழர்கள் விழாவாகக் கொண்டாடும்போது ஒருவிதமான மகிழ்ச்சி கிடைக்கும்.

அம்மா வீட்டில் சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், மற்றும் ஒற்றை அடிப்படையில் ஐந்து, ஏழு வகையான காய்கறிகளுடன் சாம்பார் ஆகியவற்றை சமைத்து அவற்றுடன் கரும்பு, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, தேங்காய் என வைத்து சாமி கும்பிடுவோம். மறு நாளான மாட்டுப்பொங்கலை வெகு சிறப்பாகக் கொண்டாடுவோம். கூட்டுக்குடும்பமாக இருந்ததால் ஆளுக்கொரு வேலைகளை நாங்களாகவே எடுத்துக்கொண்டு சீக்கிரம் அவற்றை முடித்துவிடுவோம். அண்ணன்கள், அண்ணிகள், அக்காக்கள், தங்கைகள், தம்பி, பிறகு  அண்ணன் பிள்ளைகள், அக்கா பிள்ளைகள், என்று வீடே களைக்கட்டிவிடும்.

மார்கழி மாதத்தில் ஒவ்வொரு நாளும் பலவிதமான வண்ணங்களிலும், வடிவங்களிலும் கோலம் போட்டு வீட்டு வாசலை அலங்கரிப்பது தை முதல் நாளான தமிழர் திருநாளிலும், அடுத்தடுத்த சில நாள்களிலும் தொடரும். பொங்கலின் முதல் நாளான, மார்கழியின் கடைசி நாளில், பொங்கலன்று எந்த மாதிரியான கோலம் போடுவது என்று எங்களுக்குள் பேசி முடிவெடுத்துக் கொள்வோம். பெரிய அண்ணி பூக்கோலம் போட்டுத் தருவார்கள். நான், என் சகோதரிகள், சின்ன அண்ணி அனைவரும் ஒவ்வொரு வண்ணத்தைக் கொடுப்போம். மாட்டுப்பொங்கல்  அன்று பெரிய அண்ணி மயில், மாடு, கன்று, மான் என்று ஏதாவது ஒன்றை வரைந்து கொடுப்பார்கள். அதற்கு, தகுந்தாற்போல நாங்கள் கலர் தருவோம். கோலம் போட்டதற்குப் பின்னர் வாசலில் மாட்டுச் சாணியால் ஒரு தொட்டியை கட்டமாகக் கட்டி அதை நான்கு பாகமாகப் பிரித்து அதில் மஞ்சள், குங்குமம் வைப்போம்ஒவ்வொரு குழியிலும் மஞ்சத் தண்ணீர், பால், தயிர், கோமியம் என ஊற்றுவோம். அதை ஒரு  மூங்கில் கூடையால் மூடி வைத்திருப்பார்கள்.       

மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, பொட்டு வைத்து மாலை அணிவித்து இருப்பார்கள். மாலை வேளையில் மாட்டுக் கொட்டகையின் அருகில் அம்மா பொங்கலிட்டு அதை மாடுகளுக்கு படைப் பார்கள். படையல் முடிந்தவுடன் மாடுகளை அவிழ்த்து அதைத் தெருவில்  ஒரு சுற்று சுற்றி அழைத்து வருவார்கள். மாடுகள் அவ்வாறு சென்று வந்ததும் மாடுகளுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைப்பார்கள். படைத்த பொங்கல், சிறிதாக வெட்டிய கரும்பு, வாழைப்பழம் போன்றவற்றை அவற்றுக்குத் தருவோம். பின்னர் அவற்றைத் தொழுவத்தில் கட்டிவிடுவோம். அன்று வீட்டில் அனைவரும் கூடியிருப்போம். அம்மா வீட்டில் எப்பொழுதும் இரண்டு அல்லது மூன்றுக்குக் குறையாமல் மாடுகள் இருந்துக்கொண்டே இருக்கும். அவற்றைக் குளிப்பாட்டி, பொட்டுவைத்து, சாம்பிராணி போட்டுப் பாராமரிப்பது ஒரு கலைதான். அவற்றைச் செய்யும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

எனக்கு திருமணத்திற்குப் பின், முதன்முதலாக பொங்கலுக்கு மாமியார் வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு, பின்னர் அம்மா வீட்டிற்கு போகும்படி என் மாமியார் சொன்னார்கள். அதன்படி கும்பகோணத்தில்  சாமி கும்பிட்டு விட்டு தஞ்சாவூருக்கு வந்தோம். மாமியார் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் மட்டுமே வைத்தார்கள். வெண்பொங்கல் வைக்கும் வழக்கம் இல்லை என்று அத்தை கூறினார். பொங்கல் தினத்தன்று அனைத்துக் காய்கறிகளையும்  போட்டு சாம்பார், புளிக்குழம்பு, கூட்டு, எனத் தனித்தனியாக செய்தார்கள். அம்மா வீட்டில் இவ்வாறாக நான் கூட்டு வைப்பதோ, சாப்பிட்டதோ கிடையாது. இங்கு வந்து தான் முதன் முதலாக சாப்பிட்டேன். எனக்கு அது வித்தியாசமாக இருந்தது. அந்தக் கூட்டு எனக்கு மிகவும் பிடித்தது. மாமியார் வீட்டில் மாடுகள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்தேன்.    

அடுத்த வருடம் மாட்டுப்பொங்கலுக்கு அம்மா வீட்டிற்கு சென்ற போது மூத்த மகன் ஆறு மாதக்குழந்தையாக இருந்தான். பொங்கல் வைப்பதற்கு அம்மா அண்ணிகளிடம் அனைத்துப் பொருள்களையும்  எடுத்து வைக்கச் சொன்னார்கள். அடுப்பை பற்ற வைத்து பொங்கலிட ஆரம்பித்துவிட்டார்கள். மகன் ஒரே அழுகை என்ன செய்வதென்று புரியவில்லை. அம்மா சாமி கும்பிட்டுவிட்டு போகலாம் என்றார்கள். ஆனால் அவன் அதிகம் அழுததால் என் கணவர்  வீட்டில் உள்ளோரைத் தொந்தரவு செய்ய வேண்டாம், பொங்கல் வைப்பதற்குள் திரும்பி வந்துவிடுவோம் எனக் கூறினார். அதன்படி டாக்டரிடம் அவனை அழைத்துச் சென்றோம். சாமி கும்பிடுவதற்குள் திரும்பினோம். அவனுடைய அழுகையும் நின்றது. ஒவ்வொரு மாட்டுப்பொங்கலுக்கும் இந்த நினைவு வந்துவிடும்.

கடந்த 25 வருடங்களாக அம்மா வீட்டில் மாடுகள் இல்லை. இருந்தாலும் பொங்கல் நினைவுகள் மனதில் இருந்துகொண்டே இருக்கும்.  

மகன்கள், மருமகள்கள், பேரன்களோடு தஞ்சாவூரில் தமிழர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

 

கார்த்திகைத் திருநாள்

அம்மா வீட்டில் கார்த்திகைத் திருநாளன்று காலையில் வீட்டை அலசுவதற்கு அண்ணிகளுக்கு உதவிகள் செய்வோம். பிறகு நாங்கள் கொல்லைப்புறத்தை சுத்தம் செய்வோம். விளக்கேற்றுவதற்காக பெரிய பித்தளை குத்துவிளக்குகளையும்,  கிளியான்சட்டிகளையும் கழுவி சுத்தம் செய்து, காய வைத்து  அவற்றுக்கு திரி போட்டு எண்ணெய் ஊற்றி வைப்போம். அகல் விளக்குகளை நாங்கள் கிளியான்சட்டிகள் என்று கூறுவோம்.

கார்த்திகைத் திருநாளன்று அனைவரும் தமிழ்க் கடவுளான முருகனை வணங்குவோம். பெரிய கார்த்திகை அன்று அம்மா விரதம் இருப்பார்கள். பொரி, வடை, பாயசத்துடன், தடபுடலாக சமையல் இருக்கும். வெல்லம், தேங்காய், எள், ஏலக்காய் ஆகியவற்றைக் கலந்த இந்தப் பொரியை கார்த்திகைப் பொரி என்போம். சமயம் சார்ந்த வேறு எந்த விழாவிலும் இவ்வாறு பொரி கலந்து வைக்கப் படுவதில்லை. விநாயகர் சதுர்த்தியின்போது சாதாரண பொரி கடலை மட்டுமே படைப்போம். முருகனுக்கு அவற்றைப் படைத்து, விரதத்தை நிறைவு செய்து பின்னர் மாலையில் கார்த்திகை தீப விழாவினைக் கொண்டாடும் வகையில் விளக்கு ஏற்ற ஆரம்பிப்போம்.     

வீடு பெரியதாக இருப்பதால் அதிக எண்ணிக்கையில் விளக்குகளை நாங்கள் ஏற்றுவோம். நிலைப்படியின் ஓரங்கள், நிலையையொட்டி இரு புறமும் உள்ள மாடங்கள், மாடி, வாசல் கேட், திர்ணை, வாசற்படியின் ஓரங்கள், கொல்லைப்புறம், மாட்டுத்தொழுவம் உள்ளிட்ட பல இடங்களில் விளக்குகளை ஏற்றுவோம். திண்ணையை நாங்கள் திர்ணை என்றே கூறுவோம். பிறகு  அண்ணிகளுடன் வாசலில் நின்று அதன் அழகை ரசிப்போம். தெருக்களில் அனைவர் வீட்டு வாசலிலும் தீபம் எரிவதை பார்க்க ஜெகஜ்ஜோதியாக இருக்கும்.

முன்பு மண் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். அகல் விளக்கு இப்போது பீங்கான், பித்தளை, டெரகோட்டா போன்ற வடிவங்களில் வந்துவிட்டன. என்ன தான் புதுவிதமாக வந்தாலும் பழைய விளக்குகளுக்கு ஒரு தனி மவுசுதான்.

திருமணத்திற்கு பிறகு முதல் கார்த்திகை திருநாளில் கும்பகோணத்தில் விளக்கு வைத்தேன். அம்மா வீட்டில் கூட்டமாக இருந்துவிட்டு இங்கு நாங்கள் என்  மாமியார் கொழுந்தனார் என நான்கு பேருடன் கார்த்திகை கொண்டாடினேன். பிறகு கோயிலுக்குச் செல்வோம்.  எனக்கு மாமியார் பித்தளையில் ஒரு டஜன் விளக்குகளை வாங்கித் தந்தார்கள். அவற்றை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். என் மாமியார் என்னை பட்டுச்சேலை கட்டி, நகைகள் போட்டுக்கொண்டு பின்னர் விளக்கு ஏற்றச் சொல்வார்கள். கார்த்திகையின்போது இவ்வாறே செய்தேன்.

கோயிலுக்கு செல்லும்போது பட்டுச்சேலை கட்டும்படி மாமியார் சொல்வார்கள். அப்போது அவரிடம் இந்தப்பழக்கம் கும்பகோணத்துப் பழக்கமா, அவருடைய மாமியாரின் பழக்கமா என்று கேட்டபோது பட்டு கட்டிக் கொண்டு கோயிலுக்கு சென்றால் எந்த ஒரு தீட்டும் நம்மை நெருங்காது என்றார்கள். கார்த்திகைப் பழக்கத்தைத் தொடர்ந்து கோயில்கள் சென்றபோது பட்டுச்சேலை கட்டுவேன். அம்மாவும் மாமியாரும் சொன்ன வார்த்தைகளை இன்றும் பின்பற்றுகிறேன். இப்போது பெண்களை கோயிலில் சுடிதார், ஜீன்ஸ், மேக்ஸி ஆகியவற்றுடன் அதிகமாக நாம் பார்க்கிறோம். அப்போது கோயிலுக்குச் செல்லும்போது ஒரு தனி மரியாதையையும், பக்தியையும் கடைபிடித்தார்கள். பெரியவர்கள் எடுத்துச் சொல்வதை கடைபிடித்தார்கள். அது அந்தக் காலம்.

தஞ்சாவூரில் வாடகை வீட்டிற்கு குடி வந்தபோது  சிறிய இடமாக இருந்ததால் கார்த்திகை விழாவின்போது குறைந்த அளவில் விளக்குகளை ஏற்றினோம். சொந்த வீட்டிற்கு வந்த பின்னர், எங்கள் மாமியார் வீட்டில் வைத்ததைப் போல வைக்க ஆரம்பித்து தொடர்கிறேன். இப்போது மாடம், திண்ணை, மாட்டுத்தொழுவம் எதுவும் கிடையாது. ஆனாலும் மண் அகல் விளக்கினை ஏற்றும் வழக்கம் தொடர்கிறது. வருடத்திற்கு ஐந்து விளக்காவது வாங்கிக் கொள்வோம். பழைய விளக்குடன் புதிய விளக்குகளையும்  ஏற்றுவோம். இப்பழக்கத்தினை மருமகள்களிடமும் சொல்லித் தந்துள்ளேன், அவர்களும் தொடர்கிறார்கள்.  

Comments

Post a comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

திருநாலூர் மயானம்