தலைமுறைகள் ரசிக்கும் நடிகர் திலகம்

நான்  சிறு வயதில் அண்ணன்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த  திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் ராஜபார்ட் ரங்கதுரை, வசந்த மாளிகை, பாலும் பழமும் இப்படியாக  பலப் படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.  அவருடைய படமும்,  பாடல்களும்   என்றுமே மறக்கமுடியாதவை,  என்னுடைய திருமணத்திற்குப் பின்பு கும்பகோணத்தில், மாமியார் வீட்டில் அனைவரும் சிவாஜி ரசிகர்கள். அதிகமாக சிவாஜி திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். 

புகைப்படம் நன்றி : மாலை மலர்

எங்கள் மாமியார் வீட்டிற்குப் பெரிய அண்ணன் மகன் ராஜு வந்தபொழுது அவனை அழைத்துக்கொண்டு வீட்டில் குடியிருப்பவர்களுடன் பாசமலர் படத்திற்குச் சென்றோம். அவன் அந்தப்படத்தில் வரும் காட்சிகளையைப் பார்த்து தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். நான், அவனிடம் இது உண்மையில்லையப்பா என்று சமாதானம் செய்தேன். அவனுடைய சிறு வயது  பாசத்தை அப்போது பார்த்தேன். இப்பொமுதும்கூட பாசமலர் படம் பார்க்கும்போது அண்ணன் மகன் ஞாபகம் வந்துவிடும். 

நான் மாமியார், கொழுந்தனார், எங்கள் மாமா மகன் கர்ணன் மச்சான், விஜயா அக்கா ஆகியோருடன் பிராப்தம் படத்தின் 10.00 மணி  ஆட்டத்திற்குச்  சென்றோம். அன்று அந்தப்படத்தின் கடைசி நாள். அதில் பாடல்கள் அருமையாக இருக்கும்.  

சமீபத்தில் கரூர் தங்கை வீட்டிற்குச் சென்ற பொழுது பாச மலர்  படத்தைப் பார்த்தோம்.  

சிவாஜி கணேசனின் இன்னொரு தீவிர ரசிகர் தஞ்சாவூரில் இருந்த எங்கள் மச்சான் (பெரிய அக்கா திருமதி வாசுமதி அவர்களின் கணவர் திரு.பொ. கனகராஜ்). அவர் நடை, உடை, தலை சீவுதல், கண்ணாடி க்ளாஸ் அணிதல் போன்றவற்றில்  சிவாஜியின் ஸ்டைலை பின்பற்றுவார். 

நடிகர் திலகத்தைப்பற்றி  விவரிக்க வார்த்தைகள் கிடையாது. அவர் ஒரு பெரிய மலை, சிகரம், அவரின் குரல் வளம், வசன உச்சரிப்பு, நடிப்பு, நடை, உடை, பாவனை, வசனங்களை ஒரு முறைப்பார்த்தாலும் அதை அப்படியே பேசி நடிப்பதில் வல்லவர். எந்த  வேஷம்  போட்டாலும் அவரை தவிர யாருக்கும் பொருந்தாது. அவரை ரசிப்பதற்கு இன்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி.

தஞ்சாவூரில் வாடகை வீட்டில் நாங்கள் குடியிருந்த காலகட்டத்தில், 2001இல் அவர் இறந்த செய்தியைக் கேட்டவுடன் நானும், எங்களின் இரு மகன்களும் (பாரத், சிவகுரு) வீட்டின் நிலைப்படி அருகில் சிவாஜி கணேசனுடைய  போட்டோவை வைத்து அதற்கு விளக்கேற்றி, பூ போட்டு   மூன்று நாட்கள் அஞ்சலி செலுத்தினோம். 

எங்கள் பேரன்களுக்கு (அவனுடைய மகன்களான தமிழழகன், தமிழமுதன்) அண்மையில் ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப் போட்டுக்காண்பித்தாகவும் அவர்கள் படத்தை ரசித்ததாகவும் கூறினான். நடிகர் திலகத்திற்கு இளம் ரசிகர்கள் உருவாவதை அறிந்து மகிழ்ந்தோம். தலைமுறை பேசும் அந்தக் கலைஞனை என்றும் நாம் நினைவில் வைத்துப் போற்றுவோம்.   

அவர் மறைந்தாலும் அவரின் புகழும் நடிப்பும் இன்றும் பேசப்படுகின்றன. எத்தனை நடிகர்கள் வந்தாலும் அவரைப் பின் பற்றாமல் செல்லமுடியாது. 24ஆவது நினைவு நாளான இன்று, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.        

பெரிய மகன் பாரத் இந்நாளைப் பற்றி இன்று காலையில் என்னிடம் சிவாஜியைப்பற்றி  எமுதுங்கள் எனக் கூறினான். எனக்கு தெரிந்த நினைவுகளை பகிர்ந்துள்ளேன்.   

Comments

அதிக வாசிப்பு

தஞ்சாவூர் வெள்ளை விநாயகர் வெட்டுக்குதிரை வாகன விழா

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்