அக்காவும் மச்சானும்

எங்கள் வீட்டில் பெரிய அக்காவை (திருமதி க.வாசுமதி-திரு கனகராஜ்) சேர்த்து உடன் பிறந்தோர் நாங்கள் 10 பேர்.  இப்போது 70 வயதுக்கு மேல் ஆனபோதிலும் இன்று வரை அவரால் வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை, நம்மால் முடிந்த அளவு செய்வோம் என்பார்கள். 

அக்கா, மச்சான்  

பள்ளிப்படிப்பை அவராகவே நிறுத்திவிட்டு, வீட்டில் தம்பி, தங்கைகளை கவனித்துக்கொண்டதோடு, அம்மாவுக்கு உதவியாக இருந்தார். வீட்டு வேலைகளைக் கற்றுக்கொண்டார். அம்மாவையோ, தங்கைகளையோ எந்த வேலையும் செய்யவிடமாட்டார். வீட்டு வேலை, சமையல் வேலை, தம்பி தங்கைகளை கவனிப்பது, வீட்டில் உள்ள மாடு கன்றுகளைப் பார்த்துக்கொள்வது என்ற அனைத்தையும் செய்வார். அக்காலத்தில் வாஷிங் மெஷின், மிக்சி கிடையாது. எல்லா வேலைகளையும் கைகளால் தான் செய்யவேண்டும்.  

அக்கா அன்பு, பாசம், அக்கறை, கண்டிப்பு, நிதானம் ஆகியவற்றுடன் கோபம் வந்தால் தலையில் கொட்டுவார். எண்ணெய் தேய்த்து குளிக்கவைப்பது, தலையைச் சீவிவிடுவது, சாப்பாடு ஊட்டிவிடுவது, எங்களுக்கு முடியை பாப் கட்டிங் செய்வது, வீட்டிற்குச் யார் சென்றாலும் சாப்பிடவோ, காப்பி, பால் குடிக்கவோ கூறுதல், டயத்துக்கு சாப்பிடவேண்டும் என்ற அறிவுரை, கூடப்பிறந்தவர்களுக்கு என்ன பிடிக்கும் என அறிந்து செய்தல் ஆகிய குணங்களோடு இருப்பார். இன்றும்கூட அப்படியே அந்தக் குணங்களைக் கடைப்பிடிக்கிறார்.  அம்மாவுக்கு, அடுத்தபடியாக எங்களை வளர்த்தவர். அதை மறக்கவும் முடியாது. 

தம்பி 

செல்லமாய் வளர்ந்த கடைசித்தம்பியைத் (சேகர்) தூக்கிவைத்துக்கொண்டே வேலை செய்வார். அக்காவுக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும் அவன்தான் செல்லப்பிள்ளை. அக்காவும் மச்சானும் தங்கள் பிள்ளையைப் போல் அவனைப் பார்த்துக் கொள்வார்கள். மச்சான், அவனுக்கு முதன் முதலாக ப்ரௌன் கலரில், டிசைன் போட்ட பனியன் செட் எடுத்துத்தந்தார். அந்த டிரஸ் நல்ல ஞாபகம் இருக்கு. 

எங்களுடைய அண்ணன் (திரு செல்வராஜ்) ஒருவர் இயற்கையெய்தியதால் அந்த வருத்தத்தில் அம்மா (திருமதி தில்லையம்மாள்) அழுதுகொண்டே இருந்தார்களாம். அதனால் அப்பா  (திரு திருவண்ணாமலை நாடார்) பெரிய அக்காவுக்குத் திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டார்களாம். மாப்பிள்ளை (திரு பொ. கனகராஜ்), பின்னாளில் எங்களுக்கு மச்சான், மதுரையில் இருந்தார். நண்பர்களுக்காக திருமணப் பத்திரிக்கையை ஆங்கிலத்தில் அச்சடித்ததை அக்கா மூலமாக அறிந்து வியந்தேன்.  


அக்கா, மச்சான் திருமண அழைப்பிதழ் 

அக்காவுக்கு 9.9.1973இல் தஞ்சாவூரில் எங்கள் இல்லத்தில் வெகுச்சிறப்பாக திருமணம் நடந்தது. இல்லத்தின் பக்கத்தில் உள்ள ராமலிங்கசுவாமி மடத்தில் சாப்பாடு போட்டார்கள். முதல் பந்தியிலேயே சகோதரிகளுடனும், மாமா மகளுடனும் சாப்பிடச் சென்றுவிட்டோம். இலையில் காய்கறிகள் அதிகமாக இருந்தன. முழுவதும் சாப்பிட்ட நினைவில்லை. அத்தாச்சி, பெரியம்மா, அக்கா, மாமா மகள், மாமா பேத்தி, மாமா பையன்கள் என்று உறவினர் பட்டாளமே  தீர்க்க சுமங்கலி சினிமா பார்த்தோம். 

மச்சானின் சிரிப்பு

மச்சான் பி.யூ.சி படித்தவர். மதுரையில், தன் பெரியம்மா மகனுடைய சுந்தரம் சோப்பு கம்பெனியில் மேனேஜராக இருந்தார். பின்னர், அங்கு தனியாக சோப்பு கம்பெனி ஆரம்பித்து கவனித்து வந்தார். திருமணத்திற்குப் பின் அக்கா-மச்சானை அங்கு தனிக்குடித்தனம். வைத்தார்கள். பள்ளி விடுமுறையின்போது நாங்கள் அங்குச் சென்று வருவோம். எங்கள் மச்சான் உயரமாக இருப்பார். சிவாஜிகணேசன் ரசிகர். கண்ணதாசன் நூல்களையும், துக்ளக் இதழையும் விரும்பிப்படிப்பார். மச்சான் பிறந்த ஊர் ஆலங்குடி. அவருடன் பிறந்தவர்கள் இரு சகோதரர்கள், இரு சகோதரிகள். மச்சான்- அக்காவுடன் ஆலங்குடிக்குச் சென்றுள்ளேன். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பஸ் வசதி கம்மியாக தான் இருக்கும். அங்குச் செல்ல ஒரு மணிநேரம், இரண்டு மணி நேரம் என காத்திருக்கவேண்டும். மச்சானின் தங்கை செல்வி அத்தாச்சியின் திருமணத்திற்குப் பெற்றோருடன் அங்கு சென்றேன். 

அவர் அக்காவிடம் என்ன உங்கள் வீடு நர்சரிபள்ளி போல் இருக்கு என்பராம். அக்காலகட்டத்தில் அக்காவுக்கு மூத்த மகன் (ஜெகன்) பிறந்தான்.  மதுரையிலிருந்து அக்கா மகன் வருகைக்காக வீட்டில் எல்லோரும் ஆவலோடு காத்திருப்போம். அம்மா வீட்டில் முதல் பேரன் என்பதால், ஐந்து சித்திகள், நான்கு மாமா என்ற வகையில், அவன்மீது எல்லோருக்கும் அதிக பாசம். 

மதுரையில் 50 வருடங்களுக்கு முன்பே தெருக்களில் வடைக் கடை, காய்கறிக் கடைகளை அதிசயமாகப் பார்த்தோம்.  அங்கு பொட்டுக்கடலையை, வறுகடலை என்பார்கள். நான் கடையில் பொட்டுக்கடலை எனக் கூற அவர்களுக்கு புரியவில்லை. திரும்ப வீட்டில் சென்று கேட்டுவிட்டு பிறகு வாங்கி வந்தேன். கரும்பை துண்டுதுண்டாக வெட்டிச் சீவி கொடுப்பார்கள் பார்க்க அழகாய் இருக்கும். கரும்பு ஐந்து பைசா, தோல் சீவியது பத்து பைசா என விற்பார்கள்.  அக்காவுடன் மார்க்கெட் சென்று அதை வாங்கிவருவோம். அக்கா மார்கெட், கடைத்தெரு என செல்வதையெல்லாம் நாங்கள் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு தஞ்சாவூருக்கு வந்து அம்மாவிடம் அக்கா மார்க்கெட் போவதைப் பற்றி அதிசயமாகப் பேசுவோம். அக்கா வீட்டில் பீங்கான் தட்டு அழகாய் இருக்கும் அதில் சாப்பிட ஆசைப்படுவோம். நாங்கள் அங்கு செல்லும்போதெல்லாம் அக்கா மகன் ஜெகனை கீழே இறக்கி விடுவதில்லை. மாற்றி, மாற்றி தூக்கிக்கொள்வோம். ஜூஸ்பெர்ரி வாங்கலாம் என கூப்பிட்டாலே வந்துவிடுவான். அவனுக்காகவே விடுமுறைக்குச் செல்வோம்.

மச்சான் சினிமாவுக்கு அழைத்துச்செல்வார். மச்சான் பக்கோடா போட்டுத்தந்திருக்கிறார். ஹோட்டல்களில் ஊற்றுவது போல் தோசை ஊற்றுவார். மிளகாய் சட்னி விரும்பிச் சாப்பிடுவார். இவற்றை எங்கள் மூன்றாவது அக்கா (திருமதி நவமணி) கற்றுக் கொண்டு வீட்டில் வந்து செய்வார். இன்றும் மச்சான், மிளகாய் சட்னி என்று பெயர் சொல்லி சாப்பிடுவோம்.  காலை டிபனும், இரவு டிபனும் கேட்பார். வெளியில் ரிக்க்ஷாவில் போகும்போது, ரிக்க்ஷாக்காரர் பாரம் காரணமாக சிரமப்படக்கூடாது என்பதற்காக மேடாக இருக்கும் இடத்தில் இறங்கிவிடுவார்.

அக்கா மதுரைக்கு போனபின்னர்  இரண்டாவது அக்கா (திருமதி பொன்மதி) அம்மாவுக்கு உதவியாக இருப்பார்கள். பெரிய அக்கா பார்த்த வேலைகளை அவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார். மூன்றாவது அக்கா  (திருமதி நவமணி), நான் (பாக்கியவதி), மூத்த தங்கை (செல்வமணி) என நாங்கள் வீட்டு வேலைகளைப் பார்ப்போம். இளைய தங்கைக்கு (தமிழ்ச்செல்வி) கம்மியான வயதாகையால் எந்த வேலையும் சொல்லமாட்டோம். வாசல் தெளித்து கோலம் போடுதல், சின்ன ஆலடியையும், பெரிய ஆலடியையும் கூட்டுதல், அடுப்பில் சாம்பல் அள்ளுதல், அடுப்படியை கூட்டிவிட்டு, சாணிபோட்டு மெழுகிக் கோலம் போடல் என்று ஆளுக்கு ஒவ்வொரு வேலையாகப் பிரித்துக்கொண்டு செய்வோம்.  ஒருவர்  பாத்திரங்களை கழுவுவார். ஆட்டுக்கல்லில் ஒருவர் மாவு ஆட்ட, இன்னொருவர் மாவைத் தள்ளிவிடுவோம். எங்களுக்குள் சண்டைகள் வராது. அப்படியே வந்தாலும் நாங்களாகவே சமாளித்துக்கொள்வோம்.  மதுரையிலிருந்து அக்கா தஞ்சாவூருக்கு வரும்போது நாங்கள் வேலை செய்வதை ஆச்சர்யமாகப் பார்த்துவிட்டு, இந்தப்பிள்ளைகள் எல்லாம் இப்படி வேலைசெய்கிறார்கள் என்று கூறுவார்களாம். 

குடும்பச்சூழல் காரணமாக சில வருடங்களுக்குப் பிறகு மச்சான் குடும்பம் தஞ்சாவூருக்கு வந்தது. வெண்ணாற்றங்கரையில் குடியிருந்தார்கள். முன்னர் விடுமுறையின்போது மதுரைக்குச் சென்ற நாங்கள் பின்னர் வெண்ணாற்றங்கரை வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்தோம். பிறகு மச்சான் தஞ்சாவூரில் கீழவாசலில் கயத்துக்காரத்தெருவில்  சொந்தமாகத் தொழில் செய்துவந்தார். 

தஞ்சாவூர் வந்தபின் அக்காவுக்கு இரண்டாவது மகன் பிறந்தான். இரண்டாவது அக்கா ஜெகதீஷ் என்ற பெயரைக் கூற அப்பெயரையே வைத்தார்கள். மூன்றாவதாகப் பிறந்த மகளுக்கு தீபராணி என்ற பெயரை மச்சான் வைத்தார்.  

மச்சானைப் பற்றி என்னைப்போலேவே உடன்பிறந்தோரும்   பெருமையாகப் பேசுவதைக் கேட்டுள்ளேன்.  

மச்சானைப் பற்றி அக்கா: "எதற்கும் கோபித்துக் கொள்ளமாட்டார். அன்பாகவும், பாசமாகவும் இருப்பார். அலட்டிக் கொள்ளமாட்டார். பொறுமையாக இருப்பார். சாப்பாட்டில் உப்பு, காரம் குறைந்தாலும், மிகுந்தாலும் குறை சொல்லமாட்டார். நான் செய்வதை குறைகூறாமல் சாப்பிடுவார்.  நெஸ்கபே காப்பி கால் டம்ளர் லைட்டாகக் குடிப்பார். ரசம்,  பக்கோடா, வத்தல், முட்டை போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார், எதிலுமே நான் எடுக்குற முடிவுதான். அவர் ஒன்றும் சொல்லமாட்டார். அவருக்குப் பிடித்த ஊர் மதுரை ". 

இரண்டாவது அக்கா: "ஒரு முறை வீட்டில் கேரம் போர்டு விளையாட ஆரம்பித்த போது மச்சானை தோற்கடித்துவிட்ட  நினைவு இருக்கிறது. அவர் யாரையும் எதுவும் சொன்னதில்லை. பிள்ளைகளையும் திட்டமாட்டார். ஆலங்குடிக்குச் சென்றபோது கும்பகோணத்திற்குச் சினிமா பார்க்க அழைத்துச் சென்றார். பெரிய அண்ணனுக்கு (திரு முருகேசபாண்டியன்) பெண் பார்க்க பெற்றோர், பெரிய அக்கா, மச்சானுடன் சிங்கபுணரிக்கு சென்று, மதுரை திரும்பும்போது கோயிலுக்குப் போகலாமா, சினிமாவுக்குப் போகலாமா என்று மச்சான் கேட்கவே சினிமாவுக்குப் போகலாம் என்றதும் அவ்வாறே அழைத்துச் சென்றார்".

மூன்றாவது அக்கா: "வயிற்றில் செருகல் இருந்ததை எடுக்க அம்மாவுடன் மதுரைக்குச் சென்றேன். அங்கு 10 நாட்கள் தங்கினேன். அப்போது அக்காவும், மச்சானும் சினிமா பார்த்துவிட்டு வரும்போது ஹோட்டலில் ரசகுல்லா வாங்கித் தந்தார். அதை அப்போதுதான் முதன்முதலில் சாப்பிட்டேன். ஒரு சமயம் தஞ்சாவூரிலிருந்து ஆலங்குடிக்கு புல்லட்டில் என்னை அழைத்துச் சென்றபோது சைலன்ஸரில் சுட்டுக்கொள்ளவே, என்னை இரண்டாவது  அண்ணன் (திரு ராமமூர்த்தி) கம்பெனியில் விட்டுவிட்டு அவர் மட்டும் சென்றார். பிறகு மற்றொரு நாள் ஆலங்குடிக்கு அழைத்துச்சென்றார். எப்போதும் கிண்டலாக பேசுவார்". 

மூத்த தங்கை: "மச்சான் மதுரையில் ஒரு முறை சினிமாவுக்கு கூட்டிச் சென்றார். அதன் பேர் ஞாபகம் இல்லை. திரும்பி வரும்போது ஹோட்டலில் குலோப்ஜாமூன் வாங்கிக்கொடுத்தார். முதன்முதலில் அப்போதுதான் குலோப்ஜாமூன் சாப்பிட்டேன். மச்சானுக்கு முடி நிறையாக இருக்கும் அவருக்கு ஒரு முறை தலை சீவி சிண்டு போட்டுவிட்டேன். அதற்கு ஒன்றும் சொல்லவில்லை, தஞ்சாவூரில் கிருஷ்ணா தியேட்டரில் புதிய பறவை பார்க்க கூட்டிச்சென்றார். அக்கா-மச்சானுடன் வசந்தி அத்தாட்சி திருமணத்திற்கு ஆலங்குடிக்கு அழைத்துச் சென்றார். மச்சானின் சிரிப்பு நன்றாக இருக்கும். அவர் சிரித்தால் அனைவரும் சிரித்துவிடுவோம்".

இளைய தங்கை: "மச்சான் என்னை வாண்டு என கூப்பிடுவார். அவருடன் சென்று விஜயன் நடித்த சினிமா பார்த்தேன். பெயர் தெரியவில்லை. அவருடைய தங்கையின் திருமணத்திற்கு பஸ்ஸில் சென்றபோது எனக்கு  வாந்தி வந்து, பஸ்சிலேயே எடுத்துவிட்டேன். மதுரைக்கு விடுமுறைக்கு சென்று இருக்கிறேன். மச்சான் என்றாலே சிரிப்புதான் அனைவருக்கும் பிடிக்கும். அவர்களுடைய குடும்பம் தஞ்சாவூர் வந்தபிறகு நான் அக்கா வீட்டிற்கு அடிக்கடி சென்று விடுவேன் அங்கேயே இருப்பேன். உனக்கு இதே வேலையாக இருக்கிறது என்று கூறி, அம்மா கூப்பிட ஆள் அனுப்புவார்கள்.  அக்கா பக்கத்து வீட்டில் ரவி அண்ணனிடம் டியூஷன் படிக்கச் செல்வேன். அங்கு போனால் குடிக்க காபியும், தின்பதற்கு தீனியும் கொடுப்பார்கள். படிப்பைவிட அதில்தான் என் கவனம் இருந்தது. அக்கா மகன் ஜெகன் என்னைக் கூப்பிடவருவான்.

என் திருமணத்திற்குப் (1985) பின்  தஞ்சாவூரில் மச்சான் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றபோது, விருந்து முடிந்தபின் எங்களை தன் குடும்பத்தாருடன் சினிமாவுக்கு அழைத்துச் சென்றார். அப்போது மதுரையில் அக்கா-மச்சானுடன் சினிமாவுக்குச் சென்றது நினைவிற்கு வந்தது. திருமணத்தின்போது எனக்குப் பட்டுப்புடவை எடுத்துத்தந்தார். அவரும், அக்காவும் அன்பளிப்பாகத் தந்த சில பொருள்களை இன்னும் வைத்துள்ளேன்.  நாங்கள் அனைவரும் அன்பு வைத்திருந்த மச்சான் சில வருடங்களுக்குப் பின் (2003) எங்களை விட்டுச் சென்றுவிட்டார்.  அவர் மறைந்தாலும் அவருடைய நினைவுகள் இன்னும் எங்களுக்கு இருந்துகொண்டேயிருக்கின்றன.

மச்சான்-அக்காவின் மூத்த மகன் ஜெகனும், எங்கள் கடைசித் தம்பி சேகரும் மாமா-மருமகன் போல் இருக்கமாட்டார்கள். நண்பர்களைப் போலப் பழகுவார்கள்.  இப்போது அக்கா-மச்சான் பாசத்தில் வளர்ந்த தம்பியே, அவர்களுடைய பேத்தியை (பிரீத்தி) தன் மகனுக்கு (செல்வகுமரன்) திருமணம் செய்து வைக்கும் இனிய நிகழ்வு தஞ்சாவூரில் இன்று (1.7.2026) நடைபெறுகிறது. 

இரு குடும்பத்தினரும் சம்பந்தியாகப் போவது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியாகவுள்ளது. இதைப் பற்றிப் பேசும்போது அக்கா என்னிடம், மச்சான் இப்போது இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார் என்று கூறினார். அவருடைய ஆசீர்வாதம் மணமக்களுக்கு என்றும் உண்டு என்பதை அறிவோம். 

Comments

அதிக வாசிப்பு

நான் பார்த்த கருடசேவை

நடிகையர் திலகம் சாவித்திரி

தஞ்சாவூர் : உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயில்