நடிகையர் திலகம் சாவித்திரி

இன்று (11 மே 2018) வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் பார்த்தேன். கதாபாத்திரத்தில் கதாநாயகி கீர்த்திசுரேஷ், சாவித்திரியின் குணாதிசயங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் பார்க்கும் அனைவருக்கும் சாவித்திரியை நினைவுபடுத்தின. 

நன்றி சமயம் சினிமா செய்திகள்
அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட இன்ப துன்பங்களை திரைப்படத்தில் சிறப்பாக அமைத்துள்ளனர். பேரும் புகழுடன் வந்த நிலையில் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் வாரி வழங்கும் வள்ளலாக இருந்ததை அறியமுடிந்தது. எளிய குடும்பத்தில் பிறந்த அவர் தன் பெரியப்பா குடும்பத்தின் ஆதரவில் வளர்ந்து தொடங்கி, இளம் வயதில் நாட்டியம் கற்றல் தொடர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தல் போன்றவை திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. பெரியப்பாவுடன் சென்னை வந்து பல ஸ்டுடியோக்களில் ஏறி இறங்கி பின்னர் இறுதியாக நடிக்கும் வாய்ப்பினைப் பெறும் காட்சிகள் சினிமாவின்மீதான அவருடைய ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன. 

நன்றி தி இந்து
குடும்பத்தின்மீதான பாசம், தந்தையில்லா நிலையில் தந்தை எப்படி இருப்பார் என நினைத்துப்பார்த்தல், திரையில் தன் திறமைகளை வெளிப்படுத்துதல், நடிக்கும் காலத்தில் ஜெமினி கணேசனுடன் பழக்கம் ஏற்படுத்தல், திருமணம் செய்தல், உச்ச நிலையினை அடைதல், கணவன் விலகிச் செல்லும் நிலையில் மதுவுக்கு அடிமையாதல், அன்புக்காக ஏங்குதல், சொந்தமாக திரைப்படம் இயக்குதல், தயாரிப்பில் நொடித்துப்போதல், சொத்துக்களை இழத்தல் போன்றவற்றில் கதாநாயகியாக நடித்தவர் சிறப்பாக நடித்துள்ளார். 

நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் IE தமிழ்
நடிகையர் திலகம் தான் ஏற்ற பாத்திரங்களில் எவ்வாறு சிறப்பாக நடித்தாரோ, அவ்வாறே நடிகையர் திலகமாக நடித்த நடிகை பாராட்டுக்குரியவர்.  



நன்றி பாலிமர்நியூஸ்
மாயா பஜார், மிஸ்ஸியம்மா, பாச மலர் போன்ற பழைய திரைப்படங்களிலிருந்து காட்சிகளை அமைத்துத் தந்துள்ளவிதம் சிறப்பாக இருந்தது. பிற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். நல்ல திரைப்படத்தைப் பார்த்த நிறைவு ஏற்பட்டது.

திரைப்படத்தைப் பார்த்தபோது நான் படித்த, அவரைப் பற்றி நாஞ்சில் மு.ஞாசெ.இன்பா எழுதிய சாவித்திரி : கலைகளில் ஓவியம் (தோழமை வெளியீடு, 19/665, 48ஆவது தெரு, 9வது செக்டார், கே.கே.நகர், சென்னை 600 078, 044-23662968/9940165767) என்ற நூல் நினைவிற்கு வந்தது. அந்நூலிலிருந்து சிலவற்றைப் பார்போம்.

அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் நாட்டின் நிவாரண நிதிக்காக தன் நகையையும், மகளின் நகையையும் கழற்றிக் கொடுத்தவர்.
ஜெமினி, சாவித்திரி இணை பிரியா தம்பதியினர் மற்றும் காதலர்கள்.
சாவித்திரிக்கு குழந்தைகள் என்றால் பிரியும். அதிலும் ஆண் பிள்ளைகள் என்றால் கொள்ளை பிரியம்.
சர்வதேச திரைப்பட விழாவில் தன் படம் வெளியிடப்படுவது சாவித்திரிக்குப் பெருமையாக இருந்தது. ஜெமினியின் தோளில் சாய்ந்தபடி அதை நினைத்துக் கொண்டே தூங்கிப்போனார்.
நவராத்திரியில் இரண்டாம் நடிகைகள் பல பேர் சாவித்திரியின் வேண்டுகோளை ஏற்று நடிக்க வந்திருந்தார்கள்.  தன்னுடன் நடித்த அந்த நடிகைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டுப்புடவை, ஒரு வைர மோதிரம் அன்பளிப்பாக வழங்கினார்.
மிஸ்ஸியம்மா படத்தில் வரும் வாராயோ வெண்ணிலாவே என்ற பாடலுக்கு அப்போதே ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டது. படம் முடிந்ததும் அரங்கமே எழுந்து கரவொலி செய்தது.
நவரசத்தையும் ஒரே காட்சியில் காட்ட முடியும் என்பதை மெய்ப்பித்த நடிகைகளில் சாவித்திரிக்கு முதல் இடம் உண்டு.
சாவித்திரியின் சொந்த ஊரான விஜயவாடாவில் சாவித்திரியின் முழு உருவச் சிலை இன்றும் கம்பீரமாக உள்ளது.  

Comments

  1. தகவல்கள் சிறப்பு

    ReplyDelete
  2. படத்தின் விமர்சனத்துடன் சாவித்திரி பற்றிய தகவல்களும் தந்தமை சிறப்பு.

    ReplyDelete
  3. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

பழுவூர் உலா : மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

திருநாலூர் மயானம்