பனை உறை தெய்வம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

பனை உறை தெய்வம் எனும் இந்நூலை 25 கட்டுரைகளை மையமாக வைத்து  திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா எழுதியிருக்கிறார். 


பனைமரம் என்றால் எனக்குத் தெரிந்தது நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பனை ஓலைக்கொட்டான், பனை விசிறி, பனை வெல்லம், பனங்கற்கண்டு, பதநீர்,  ஓலைச்சுவடி,  ஆகியவையாகும். இந்நூலின் மூலமாக பல அரிய செய்திகளை அறிந்தேன்.

மூலவர் திருமேனி, தல மரம், நீர் நிலை ஆகிய மூன்றும் சிவன் கோயில்களின் இன்றியமையா அங்கங்களாகும். இவற்றை மூர்த்தி, விருட்சம், தீர்த்தம் என வட மொழியில் குறிப்பர். கோயில்களை வழிபாட்டுத் தலங்களாக மட்டும்  கொள்ளாமல் அவற்றை மனித வாழ்வோடு இயைந்த சமுதாயக் கேந்திரங்களாகவும் போற்றும் நெறி தமிழகத்தில் அண்மைக் காலந்தொட்டு தொடர்ந்து வருவதாகும். 

சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தின் கீழ் இருந்தவாறு பரமேஸ்வரன் ஞானமுரைத்தது, திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தின்கீழ் இருந்தவாறு ஞானத்தை நவின்றது, திருவெற்றியூரில் சுந்தரரை மகிழ மரத்தின்கீழ் இருந்தவாறு சத்தியம் உரைக்கப் பணித்தது என்ற வகையில் மரங்கள் என்பவை தெய்வத்தோடு  தொடர்புடையவையாகும். ஒவ்வொரு சிவன் கோயிலிலும் தல விருட்சம் என ஏதாவது ஒரு மரம் புனிதமாக கருதப்படுகிறது. 

சோழ நாட்டில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள, நெடுங்காலமாக சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பெற்ற செந்தலை என்னும் ஊரில் அங்காளபரமேஸ்வரி கோயிலிலுள்ள இரண்டு பனைமரங்களை ஒன்று ஆண் மரம் என்றும், மற்றொன்றைப் பெண் மரம் என்றும் அழைக்கப்படுவதையும், இவை சக்தியும் சிவமுமாகப் போற்றப்படுகிறது. 

தலவிருட்சங்களைப் போன்றே தலத் தீர்த்தங்களும் சிறப்பு வாய்ந்தவையாகும். அவற்றை புனிதம் வாய்ந்தவையாகப் பாவித்துத் தூய்மையுடன் பேணிப் போற்றுவது நம் மரபு வழி வந்த பண்பாகும். கும்பகோணம் நாகேசுவரன் கோயிலானது காஷ்மீர் நாட்டுத் தாவி நதி (ஜம்மு தாவி) என்னுமிடத்தில் தொடங்கி காவிரி, யமுனை, கங்கை, சரஸ்வதி, பொற்றமரைப் புட்கரணி, கோதாவரி, தென்குமரி வரை உள்ள அனைத்துப் புனித தீர்த்தங்களாலும் சூழ அமைந்துள்ளது.  குடந்தையில்  உள்ள மகாமகக்குளத்தில் இந்தியாவின் புனித நதிகள் அனைத்தும் உறைவதாக கொள்ளப்பெறும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகத் தீர்த்தப் பெருவிழா கொண்டாடப்பெறுகின்றது.  

சிவன் கோயில்களில் மாசிமகத்தின்போது அந்தந்தத் தலத்துக்குரிய தீர்த்த குளத்திற்கு இடபாரூடராக தேவியுடன் இறைவனை எழுந்தருளச் செய்து தீர்த்தப் பெருவிழா கொண்டாடுவதும் வெகு நாட்களாகத் தொடரும் மரபாகும். மகாமகப்பெருவிழா  போன்றே உத்தரபிரதேசத்தில் கும்பமேளாவும், மகாராட்டிரம், ஆந்திர மாநிலங்களில் புஷ்கரமும் தீர்த்த அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. 

இந்நூலின் மூலமாக பல மரங்களின் பெயர்களையும் இறைவனோடு அவை தொடர்புபடுத்தப்படுவதையும், தீர்த்தங்களின் சிறப்பையும் அறிய முடிந்தது. நூலின் மேலட்டையில் உள்ள பனை மரத்தைப் பார்த்ததும், என் மாமியார்  அவ்வப்போது வேண்டிக்கொள்ளும் தெய்வங்களில் ஒன்றான பனேயடியான் சாமி நினைவிற்கு வந்தது.  

இந்நூலின் மூலமாக பலமரங்களின் பெயர்களையும் இறைவனோடு அவை தொடர்புபடுத்தப்படுவதையும் அறிந்தேன்.  சிறப்பான நூலைத் தந்துள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

நூலைப் பற்றிய குறிப்பு : 
பனை உறை தெய்வம், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம், 
தஞ்சாவூர் 613 007,  டிசம்பர் 2023, ரூ.170.

Comments

அதிக வாசிப்பு

அன்பளிப்பு : சீர்வரிசை சாமான்கள்

பழுவூர் உலா : மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

திருநாலூர் மயானம்