அக்னிச்சிறகுகள் : எ.பி.ஜெ.அப்துல் கலாம், அருண் திவாரி

  அப்துல் கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் (தமிழில் மு.சிவலிங்கம்) படித்தேன் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தது. ஏவுகணைகளை எப்படி செய்கிறார்கள் எனவும், அதில் அனைவருக்கும் புரியும்படியாகவும், சுலபமாகவும் இருக்கிறது. இப்புத்தகத்தை தமிழாக்கம் செய்தவர் மு. சிவலிங்கம்.  அப்துல் கலாம் பாசமிக்கவர், ஒரு மேதை, ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத்லைவர், ஏவுகணையின் தலைவன், வேலையில் கவனமாக இருப்பவர், அவர் மறைந்தாலும் அவரது புகழ் என்றும் நிலைந்திருக்கும். மாணவர் சமுதாயத்தை கனவுகாணுங்கள் என்றவர். அவரது பிறந்த நாளான இன்று (15 அக்டோபர் 2023) அவருடைய புத்தகத்திலிருந்து  சிலவற்றை நினைவு கூறுகிறேன்.


   "விமானப்படை விமானியாக வேண்டும் என்ற என்னுடைய கனவு, நான் கலெக்டராக வேண்டும் என்ற என் அப்பாவின் கனவெல்லாம் நனவாகாமல் போய் நான் ராக்கெட் என்ஜினியரான கதையைச் சொல்லலாமே என்று தோன்றியது. எனக்கு அறிவாற்றலையும், உத்வேகத்தையும் தந்த புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகளுக்கு நான்மிகவும் கடமைப்பட்டிருக்கறேன். இவர்களில் விக்ரம் சாராபாய், சதீஷ் தவன், பிரம்பிரகாஷ் ஆகியோரும் அடக்கம். எனது வாழ்க்கையிலும் இந்திய வரலாற்றிலும் இந்த விஞ்ஞானிகள் முக்கிய பங்கேற்றவர்கள்."(பக்.16-17)     

       "என் பெற்றோர் உதாரணத் தம்பதியினர் என்று எல்லோரிடமும் மதிப்பு பெற்றிருந்தார்கள். என் அம்மாவின் வம்சம் கீர்த்தி வாய்ந்தது. அவரது பரம்பரையைச் சேர்ந்த முன்னோர் ஒருவர் பிரிட்டிஷாரிடம் பகதூர் பட்டம் பெற்றவர். 19ஆம் நூற்றாண்டு மத்தியில் கட்டப்பட்ட எங்களுடைய மூதாதையர் வீட்டில் வசித்துவந்தோம். நெறிமுறைகளைப் பின்பற்றிய அப்பாவுக்கு தேவையற்ற வசதிகளும், ஆடம்பரமும் பிடிக்காது. ஆனாலும் உணவு, உடை மருந்து என எங்களுக்குத் தேவையான எல்லாம் கிடைத்தன. எனது குழந்தைப் பருவம் பாசமும், பாதுகாப்பும் நிறைந்தது."(பக்.22-23)

        "நேரத் தொழுகைக்கு அப்பா என்னைக் கூட்டிச்செல்வார். அங்கு அரேபிய மொழியில் சொல்லப்படும் பிரார்த்தனை மந்திரத்தின் பொருள் எனக்கு விளங்காது. ஆனால், அதையெல்லாம் கடவுள் கேட்கிறார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. என் அப்பா தொழுகை முடித்து வரும் வரை வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மசூதிக்கு வெளியே அவருக்காகக் காத்திருப்பார்கள்." (ப.24)

    "என் வாழ்க்கை முழுவதும், என்னுடைய விஞ்ஞான தொழில்நுட்ப உலகத்தில் என் அப்பாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வருகிறேன். அவர் என்னிடம் தெளிவுபடுத்திய அடிப்படை உண்மைகளைப் பெரும் முயற்சி செய்து அறிந்து கொண்டிருக்கிறேன். குழப்பத்திலும், துயரத்திலும், துக்கத்திலும், தோல்வியிலும் இருந்து ஒருவரை  விடுவித்துக் காப்பாற்றும் ஒரு தெய்விக சக்தி உள்ளது என்பதை நான் நம்புகிறேன்."(ப.26)

     "ஒரு நாள்...மணிக்கு 100 மைல் வேகத்தில் அடித்த புயல்காற்றில் எங்கள் படகும் சேதுக்கரையின் நிலப்பரப்பும் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. பாம்பன் பாலம் தகர்ந்தது. பயணிகளோடு வந்துகொண்டிருந்த ரயில் கடலில் கவிழ்ந்தது. அதுவரை கடலின் அழகை மட்டுமே ரசித்து வந்த எனக்கு அன்றுதான் அதன் கட்டுக்கடங்காத சக்தியின் ரகசியம் புலப்பட்டது. அந்தப்படகின் கதை முடிந்த சமயத்தில் அஹமது ஜலாலுதீன் எனது இணைபிரியாத நண்பராகிவிட்டார். அந்த நட்பில் வயது வித்தியாசம் மறைந்தது. என்னைவிட 15 வயது மூத்தவரான அவர் என்னை எப்போதுமே ஆஜாத் என்று கூப்பிடுவார்."(பக்.27-28)

    "நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது இரண்டாம் உலகப்போர் மூண்டது. அது 1939ஆம் வருடம்....அப்போது மார்கெட்டில் புளியங்கொட்டைக்கு ஏகப்பட்ட கிராக்கி. எதனால் இப்படி என்பதையெல்லாம் என்னால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை. புளியங்கொட்டைகளை சேகரித்து மசூதி தெருவில் இருந்த ஒரு மளிகைக் கடையில் விற்பேன். இந்த வியாபாரத்தில் தினமும் ஒரு அணா கிடைக்கும்.......ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே, ராமேஸ்வரம் இருப்புப்பாதையில், ஓடும் ரயிலில் இருந்து பத்திரிக்கைகளை கட்டுக்கட்டாக வீசுவார்கள். இந்தக் கட்டுகளைப் பிடித்துக் கொண்டுவருவதற்கு சம்சுதீனுக்கு உதவி தேவைப்பட்டது. எனக்காகவே அந்த வேலை வந்தது போல் நான் அதைச் செய்தேன். இப்படி எனது முதல் சம்பாத்தியத்திற்கு சம்சுதீன் உதவினார்."(ப.31)

     "வருடாவருடம் நடக்கும் ஸ்ரீ சீதாராம கல்யாண வைபவத்தின் போது தெய்வ விக்ரகங்களைத் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்ல விசேஷமான மேடை அலங்கரிக்கப்பட்ட படகுகளை ஏற்பாடு செய்வது எங்கள் குடும்பம் தான். எங்கள் வீட்டின் அருகே உள்ள ராமதீர்த்தம் என்ற குளத்தின் மையப்பகுதியில் தான் இந்தத் திருமணம் நடைபெறும். ராமாயணத்தில் இருந்தும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கையிலிருந்தும் பல சம்பவங்களைக் கதைகளாக அம்மாவும் பாட்டியும் ராத்திரி படுக்கை நேரத்தில் எங்கள் வீட்டுக்குழந்தைகளுக்குச் சொல்வார்கள்."(ப.33)   

    "ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் என்னை ரயில் ஏற்றியபோது அப்பா என்னிடம் சொன்னது  இதுதான்: உன்னுடைய உடலுக்கு இந்தத் தீவு இடமளித்திருக்கலாம், உன் ஆன்மாவுக்கு அல்ல. எதிர்காலம் என்ற வீடுதான் உன் ஆன்மாவின் வசிப்பிடம், ராமேஸ்வரத்தில் இருக்கும் நாங்கள் யாரும் அங்கு வரமுடியாது. கனவில் கூட அது நடக்காது. கடவுள் உனக்கு அருள்புரியட்டும், என் செல்வமே...."(ப.37)

    "எனக்கோ புதிய சூழ்நிலை. சுமார் ஐம்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட  செழிப்பான நகரமாக விளங்கிய ராமநாதபுரத்தில் வேற்றுமை மனப்பான்மை நிலவியது. ராமேஸ்வரத்தின் நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் அங்கு காண முடியவில்லை, வீட்டு நினைப்பில் ஏங்கினேன். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்  ராமேஸ்வரம் புறப்பட்டுவிடுவேன். ராமநாதபுரத்தில் அருமையான கல்வி வாய்ப்புகள்  நிறைந்திருந்தாலும், அதையெல்லாம்  விட என் அம்மாவின் கைவண்ணத்தில் தயாராகும் போளி மீது அதிக நாட்டம் இருந்தது."(ப.37)    

  "என் ஆசிரியர் அய்யாதுரை சாலமன், ஒளிவு மறைவில்லாத அணுகுமுறையாலும் இதமான செயல்பாட்டாலும் தமது வகுப்பில் மாணவர்களுக்கு தனி ஈடுபாட்டை வடிவமைத்தவர், அவர். திறமைசாலியான ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு மோசமான மாணவன் கற்றுக்கொள்வதைவிட அதிகமாக ஒரு மோசமான ஆசிரியரிடமிருந்து ஒரு நல்ல மாணவனால் கற்றுக் கொள்ள முடியும் என்று அவர் அடித்துக்கூறுவார்."(ப.40) 

    "மூன்றாவது, நான்காவது வருடம், எம்.ஐ.டி.யில் எனக்குள் புதுவடிவம் உருவான முக்கியமான காலகட்டம், என் வாழ்க்கையின் பிற்பகுதியில் பெரும் தாக்கத்தை உருவாக்குவதற்கு அடித்தளம் இட்டதும் இதே காலகட்டம்தான்."(ப.55)

    "தில்லி திரும்பிய நான் DTD&P (Air) அலுவலகத்தில் என் நேர்முகத் தேர்வு பற்றி விசாரித்தேன். பணியில் சேரும் உத்தரவுக்கடிதம் கொடுத்தார்கள். அடுத்த நாள் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக (Senior Scientific Assistant) வேலையில் சேர்ந்தேன். மாத அடிப்படைச் சம்பளம் ரூ.250. இதுதான் என் தலையெழுத்து என்றால் அப்படி நடக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு வழியாக மன அமைதி அடைந்தேன். அதற்குப் பிறகு விமானப்படையில் சேர முடியாமல் போய்விட்டதே என்று வருத்தமோ அல்லது வேதனையோ எனக்கு வரவில்லை. இதெல்லாம் 1958ஆம் வருட அனுபவங்கள்."(ப.66-67)

    "நான் அடிக்கடி கலீல் கிப்ரானின் படைப்பை வாசிப்பதுண்டு. அவரின் வார்த்தைகளில் ஞானம் ததும்பும்."(ப.104) 

   "தும்பா ராக்கெட் ஏவுதள நிலையத்தை 1969 பிப்ரவரியில் சர்வதேச விண்வெளி விஞ்ஞான சமுதாயத்திற்கு பிரதமர் இந்திரா காந்தி அர்ப்பணித்தார். அதற்காக தும்பாவுக்கு வருகை தந்திருந்த அவர் எங்களுடைய ஆய்வுக்கூடத்தில் தேசத்தின் முதல் ஃபிலமெண்ட்  வைண்டிங் மிஷினை இயக்கி வைத்தார். இதில் எங்கள் குழுவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்."(ப.109)

  "நான் என்றுமே தெய்வ நம்பிக்கை கொண்டவன். எனது பணியில் இறைவனையும் பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டிருக்கிறேன். அபாரமான வேலைக்கு எனக்கிருக்கும் திறமையைவிட மேலும் அதிகம் தேவை என்பதை அறிந்திருந்தேன். எனவே கடவுளால் மட்டுமே அனுகிரகிக்கக் கூடிய  உதவியை நாடினேன். எனது சுயதிறமையின் சக்தி 50 சதவீதம்தான் என்பதை  மதிப்பிட்டிருந்தேன். என்னை கடவுளிடமே ஒப்படைத்துக் கொண்டேன்."(ப.111)

    "ஐந்து வருடங்களாக .... 1966இல்  இருந்து 1971 வரை சுமார்  22 விஞ்ஞானிகளும், என்ஜினியர்களும் பேராசிரியர் சாராபாயுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே பின்னாளில் முக்கியமான அறிவியல் திட்டங்களுக்குப் பொறுப்பு ஏற்றார்கள். போராசிரியர் சாராபாய், ஒரு தலைசிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, ஓர் உயர்ந்த தலைவராகவும் திகழ்ந்தார்...........தமது குழுவினரிடம் தலைமைத் தகுதிகளை உருவாக்குவதிலும், சிந்தனையாலும், முன்னுதாரமான செயலாலும் உத்வேகம் ஊட்டுவதிலும் பேராசிரியர் சாராபாய் இந்திய அறிவியலின்  மகாத்மா காந்தியாக எனக்குத் தோன்றினார்." (பக்.140-141)

   "இஸ்ரோ 1975ல் அரசு அமைப்பாக மாறியது. பல்வேறு பணி மையங்களின் இயக்குநர்களும், விண்வெளித் துறையின் (D.S.) மூத்த அதிகாரிகளும் அடங்கிய இஸ்ரோ கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டது."(ப.172)

   "பேராசிரியர் சாராபாயிடமிருந்து நான் கிரகித்துக் கொண்ட நற்குணங்களை எனக்குள் மேலும் தழைத்தோங்க வைத்தது மட்டுமல்லாமல், அவற்றுக்கு நான் புதுப் பரிமாணங்களை அளிக்கவும் டாக்டர் பிரம்பிரகாஷ் உதவினார்."(ப.209)

    "எஸ்.எல்.வி.3ன் வெற்றிச்சாதனை நிகழ்ந்து ஒரு மாதம் கூட முடியவில்லை. அது தொடர்பான எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக, மும்பையில் உள்ள நேரு விஞ்ஞான மையத்திற்கு வருகை தருமாறு அழைத்திருந்தார்கள்....எனக்கோ ஒரு  சின்னப் பிரச்சினை....வழக்கமான பாணியில் சாதராணமாக உடையணிந்து காலில் செருப்புப் போட்டுக் கொண்டிருந்தேன். இப்படிப்போய் பிரதமரைச் சந்திப்பது எந்தவிதத்திலும் கவுரமாக இருக்காது. இந்தப் பிரச்சனைப்பற்றி பேராசிரியர் தவனிடம் சொன்னேன். உடை பற்றி ஒன்றும் கவலைப்படாதீர்கள் என்ற அவர் வெற்றி என்ற அழகான ஆடை தரித்திரிக்கிறீர்கள் நீங்கள், என்றும் சொன்னார்." (ப.217)

நூல் குறிப்பு
அக்னிச் சிறகுகள் சுய சரிதம், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், அருண் திவாரி, (தமிழில் மு.சிவலிங்கம்), கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பிப்ரவரி 2003, இருபதாம் பதிப்பு, ரூ.100  

Comments

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

பழுவூர் உலா : மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

அன்பளிப்பு : சீர்வரிசை சாமான்கள்