மகாத்மா காந்தியின் சுயசரிதை சத்திய சோதனை

எங்கள் இல்ல நூலகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சுயசரிதை சத்திய சோதனை  நூலைப் படிக்க எடுத்துப்பார்த்தபோது எழுத்து சிறியதாக இருந்ததால் படிக்க சற்று யோசித்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படிக்க ஆரம்பித்தேன். 605 பக்கங்களைக் கொண்ட இந்நூலைப் படிக்க சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எதை சொல்வது, எதைவிடுவது எனத் தெரியவில்லை. அவர் பிறந்த நாளில் அந்நூலிலிருந்து  சிலவற்றை நினைவு கூறுகிறேன்.  

 

"எங்கள் வீட்டுப் பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று நான் பம்பாய்க்குப் புறப்பட்டேன். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடன் என் மனைவியை விட்டுவிட்டு என் தாயாரின் அனுமதியையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு நான் குதூகலமாகப் பம்பாய்க்குப் புறப்பட்டேன்....ஜாதி நாட்டாண்மைக்காரரான சேத் எனக்குத் தூர பந்து. என் தந்தையாருக்கு மிகவும் வேண்டியவராய் இருந்தார். என்னைப் பார்த்து அவர் பின்வருமாறு கூறினார். 'இங்கிலாந்துக்குப் போவதென்று நீ ஏற்பாடு செய்திருப்பது சரியல்ல என்பது நம் சாதியினரின் அபிப்பிராயம். வெளிநாடுகளுக்குக் கப்பல் பிராயணம் செய்வதை நம் மதம் அனுமதிக்கவில்லை. நம் மத தருமங்களை கைவிடாமல் அங்கே வசிப்பதே சாத்தியமில்லை என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஐரோப்பியாருடன் சேர்ந்து சாப்பிடவும், குடிக்கவும் வேண்டிவரும்'. இதற்கு நான் சொன்ன பதிலாவது, 'இங்கிலாந்துக்குச் செல்வது நம் மதத்திற்கு விரோதம் என்று நான் கருதவில்லை. மேற்கொண்டு படிப்பதற்காகவேதான் நான் அங்கே போக உத்தேசித்திருக்கிறேன். நீங்கள் எவற்றைக் குறித்து பயப்படுகிறீர்களோ அந்த மூன்றையும் தீண்டுவதில்லை என்று என் தாயார் முன்னிலையில் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். அந்தப் பிரதிக்ஞை என்னைப் பாதுகாக்கும் என்று நான் நிச்சமாயிருக்கிறேன்'." 

"இக்காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இங்கிலாந்தில் இந்திய மாணவர்கள் சொற்பமாகவே இருந்தனர். தங்களுக்கு மணமாகியிருந்தாலும், மணமாகாதவர்கள்போல் நடித்து வருவது அவர்களிடம் இருந்த பழக்கம். படிப்புக்கு மண வாழ்க்கை ஏற்றதல்ல என்று அங்கே கருதப்படுகிறது".  

"ஹிந்து தருமத்தைக் குறித்தும் மற்ற உலக சமயங்களைப்பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்துகொண்டிருந்தேன். என்றாலும், எனக்கு ஏற்படும் சோதனைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற  அவை போதா என்பதையும் நான் அறிந்திருக்கவேண்டும். சோதனைகளிலிந்து ஒருவன் சமாளித்து நிற்கும்படி செய்வது எது என்பதை மனிதன் அறிவதில்லை..... சமய ஞானத்தினால் மட்டும் பயனில்லை என்பதை இங்கிலாந்தில்தான் நான் முதன்முதலில் கண்டுகொண்டேன். இதற்கு முன்னால் நிகழ்ந்த சோதனைகளில் நான் எவ்வாறு காப்பற்றப்பட்டேன் என்பதை என்னால் அவ்வளவாகக் கூற முடியாது. ஏனெனில் அப்பொழுது நான் மிகச் சிறியவன். ஆனால் இப்பொழுதோ எனக்கு வயது இருபது. கணவன், தந்தை என்ற வகையில்  எனக்குச்சிறிது அனுபவமும் ஏற்பட்டிருந்தது.......பிரார்த்தனைக்குப் பேச்சுத் தேவையில்லை. புலன்களின் முயற்சி எதுவும் அதற்கு வேண்டியதில்லை, உள்ளத்திலிருந்து காமக் குரோதாதிகளையெல்லாம் போக்கிப் புனிதமாக்கிக் கொள்ளுவதற்குத் தகுந்த சாதனை பிரார்த்தனையே என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகமே இல்லை. ஆனால், அத்துடன் முழுமையான அடக்கமும் கலந்திருக்க வேண்டும்." 

"பம்பாயில் இருந்தபோது ஒரு புறம் இந்திய சட்டத்தைப் படிக்கலானேன்; மற்றொரு புறமோ, உணவைப்பற்றிய என் ஆராய்ச்சிகள். இதில் வீரசந்திர காந்தி என்ற ஒரு நண்பரும் சேர்ந்துகொண்டார். என் சகோதரரோ எனக்கு கட்சிக்காரர்களைப் பிடிப்பதற்காக அவரளவில் தம்மால் ஆனதையெல்லாம் செய்துகொண்டிருந்தார்.....அவர்  கூறுவார், 'ஒரு பாரிஸ்டர் ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு வருவாய் இல்லாமல் காத்திருக்க நேருவது அசாதாரணம்'......... மாதத்திற்கு மாதம் செலவு அதிகரித்துக்கொண்டே போயிற்று. உள்ளுக்குள் பாரிஸ்டர் தொழிலுக்கு தயாராகிக்கொண்டுவரும் போதே, பாரிஸ்டர் என்ற விளம்பரப் பலகையை வெளியில் தொங்கவிடுவது என் மனதுக்குச் சமாதானம் தராத ஒரு விஷயம். இதனால் என் படிப்பில் நான் முழுக் கவனத்தையும் செலுத்த இயலவில்லை. அந்தச் சமயத்தில் மாமிபாய் என்ற ஒருவரின் வழக்கை நடத்துவதற்கு எடுத்துக்கொண்டேன்.அது ஸ்மால்காஸ் வழக்கு. அந்த வழக்கை கொண்டுவந்து கொடுத்த தரகருக்கு ஏதாவது கொஞ்சம் தரகு பணம் தரவேண்டும்.என்று சொன்னார்கள். அப்படி கொடுப்பதற்கு நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். எனக்கு மாதம் ரூ.300 கிடைத்தாலே போதும். என் தந்தை அதற்கு மேல் சம்பாதிக்கவில்லை என்றும் கூறினேன்....நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். தரகு பணம் கொடுக்கவில்லை என்றாலும் மாமியின் வழக்கு என்னிடம் வந்தது. அது மிகவும் சுலபமான வழக்கு. எனக்கு ரூபாய் 30 கட்டணம் கொடுக்கவேண்டும் என்றேன். கோர்ட்டில் அந்த வழக்கு ஒரு நாளைக்கு மேல் நடக்கும் என்று தோன்றவில்லை."    

ஒளிவுமறைவு இல்லாமல் எதையும் வெளிப்படையாக கூறல், பக்தியின்மேல் நம்பிக்கை, சத்தியத்தை கடைப்பிடித்தல், நேர்மை, ஏழை எளியோருக்கு உதவிசெய்தல்,  நாட்டுக்காக உழைத்தல் என்றவாறு காந்தியைப்பற்றி இன்னும் கூறிக்கொண்டே போகலாம். சிலவற்றை இங்கே எழுதியுள்ளேன். மற்றவற்றை நூலில் வாசிக்கலாம்.

மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை, தமிழாக்கம்: ரா. வேங்கடராஜுலு, ஜிதேந்திரா டி.தேசாய், நவஜீவன் பிரசுராலயம், அகமதாபாத் 380 014, மூன்றாம் பதிப்பு 1996,   ரூ.20 

Comments

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

பழுவூர் உலா : மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

அன்பளிப்பு : சீர்வரிசை சாமான்கள்