அப்பாவுக்காக : ஜ. பாக்கியவதி

அண்மையில் நான் எங்கள் அப்பாவைப் பற்றிய நினைவுகளை என் சகோதர சகோதரிகளின் குடும்பத்தாரிடம் எழுதி வாங்கி நூலாகத் தொகுத்து வழங்கியுள்ளேன். அந்நூலில் உள்ள என்னுரையைப் பதிவதில் மகிழ்கின்றேன்.



நான் ஒன்பதாம்  வகுப்பு வரை படித்திருக்கிறேன்திருமணத்திற்குப் பிறகு என் கணவர் படிக்கச் சொன்னார். ஆனால் எனக்கு ஆர்வம் இல்லை. மகன்கள் படித்து கொண்டிருக்கும்போது எனக்கு கம்யூட்டரில் தமிழ் டைப் அடிக்க  கற்றுக்கொடுத்தார்கள். அவர்கள் வேலைக்குச் சென்றபிறகு தினமும் நாளிதழும், நூல்களும் படிக்க ஆரம்பித்தேன். படிப்பதினால் சிந்திக்கும் திறமை வளர்வதை அறிந்தேன்.

நாங்கள் சுற்றுலா சென்றதைப்பற்றிய அனுபவத்தை எழுதும்படி என் கணவர் கூறியதன் அடிப்படையில் எழுதியமந்த்ராலயமும் ஹம்பியும்கட்டுரை முதன்முதலில் 29.4.2013 நாளிட்ட தினமணி நாளிதழில் வெளியானது. தொடர்ந்து காசி, உறவினர்களின் குலதெய்வக் கோயில்களுக்கு சென்றதைப் பற்றி எழுதினேன். நான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, கணவரின் பணி நிறைவு பெற்ற நாளில் கோயில் உலா என்ற தலைப்பில்  சிறிய நூலாக வெளியிட்டோம்

எதையுமே  பதிவாக வைத்திருக்க வேண்டும். நம் குடும்பத்தில் உள்ளவர்கள்  தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டும்  என்றும்   என் கணவர் கூறுவார். அவரும், மகன்களும் நான் எழுதுவதற்கு ஊக்கம் கொடுக்கின்றனர். படிக்கவும், எழுதவும் ஆரம்பித்த நான் தொடர்ந்து அவர்கள் எழுதும் கட்டுரைகளையும், கதைகளையும் பிழைத்திருத்தம் செய்ய ஆரம்பித்தேன்.

என்னுடைய சின்ன அண்ணி  திருமதி கண்மணி அவர்களின் அப்பா திரு. சி.மு.சிவம் அவர்களின் நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் அவருடைய குடும்பத்தார் நெஞ்சமெல்லாம் சிவம் : சிவம் 100 என்ற ஒரு நூலை 2019இல் எழுதியிருந்ததை என்னிடம் காண்பித்தார்கள். அதைப் பார்த்தபோது என் தந்தையைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆர்வம் எனக்குத் தோன்றியது. என் பெரிய அக்காவிடம், “நாமும் அப்பாவைப்பற்றி புத்தகம் எழுதலாமா?” எனக் கேட்டபோது அக்கா, “நம் மனதுக்குள் இருந்தால் போதும்என்றார்கள். மனதுக்குள் அந்த நினைவு இருந்துகொண்டே இருந்தது.

கொரோனா நேரத்தை நல்லமுறையில் பயன்படுத்த எண்ணினேன். என் விருப்பத்தை குடும்பத்தாரிடம் போனில் கூறியபோது குடும்ப உறுப்பினர்கள் தங்களின் எண்ணங்களை வாட்ஸ்அப், ஃபோன், ஈமெயில், ஆடியோ வழியாக அனுப்பியிருந்தனர். சிலர் நேரிலும் தந்தனர். இவ்வாறாக சுமார் 70 நினைவுப்பதிவுகள் பெறப்பட்டன. அனைத்தையும் நான் நேரடியாக மடிக்கணினியில் தட்டச்சு செய்தேன். அப்போது எனக்கு ஆனந்தக்கண்ணீர் வந்துவிட்டதுஎங்கள் பெற்றோரைப் பற்றி எங்களைவிட பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள் எழுதியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. என்னை மதித்து பெரியவர்கள் முதல்  சிறியவர்கள் வரை பெற்றோரைப்பற்றி எழுதிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்  கொள்கிறேன். நான் தட்டச்சு செய்த சுமார் 100க்கும் மேலான பக்கங்களை என் மகன்களும், கணவரும் ப்ரூப் பார்த்துத் தந்தனர்.

எங்கள் அம்மா, அப்பாவுக்கு பிள்ளைச் செல்வங்கள்  பதின்மூன்று பேர். அவர்களில் மூன்று பேர் தவறிவிட்டார்கள். பத்து பேரின் மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள்பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேரன், பேத்திகள்  என அனைவரும் சார்பாகவும் இதனை வெளியிடுவதில் பெருமையடைகிறேன்.

நூலின் படிகளை என் சகோதர சகோதரிகளுக்கும், உறவினர்களுக்கும் வழங்கிய இனிய தருணங்கள்.



நூல் விவரம்: அப்பாவுக்காக..., ஜ. பாக்கியவதி, முதல் பதிப்பு, நவம்பர் 2020, தமிழ்க்குடில் பதிப்பகம், தஞ்சாவூர், ரூ.150, தொடர்புக்கு : +91 9488969722, tamilkudilpathipagam@gmail.com. 

Comments

  1. வாழ்த்துகள் தந்தைக்கு செய்யும் மரியாதை அழகு.

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

திருநாலூர் மயானம்

வாசிப்பை நேசிப்போம் : தினமணி

உதிரமாடன்குடியிருப்பு செம்புக்குத்தி அய்யனார் கோயில்