ஆரோக்கியம் தரும் பாரம்பரிய முறை

அக்காலத்தில் முன்னோர்கள் குழந்தைகளை வளர்த்த விதம் அவர்களை ஆரோக்கியத்தோடு வைத்திருந்தது. எண்ணெய்க்குளியல் தொடங்கி ஒவ்வொன்றிலும் பெரியவர்கள் குழந்தைகளை பாரம்பரிய முறைகளை கடைபிடித்து கவனமாக வளர்த்து வந்தனர்.

எண்ணெய்க்குளியல்
ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவார்கள். உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு ஐந்து நிமிடம் ஊறவைத்துவிட்டு, சீயக்காய்த்தூளைத் தேய்த்து நீரை ஊற்றிய பின்னர், அரைத்த விரலி மஞ்சளை உடல் முழுவதும் பூசிவிட்டு குளிப்பாட்டுவர்.

ஆண் குழந்தைகளுக்கு பூனை முடி போன்ற குட்டி உரோமங்கள் உதிர்வதற்காக விரலி மஞ்சள் பூசப்படுகிறது.  வளருங்காலத்தில் மீசை முளைக்காது என்ற காரணத்தால் ஆண் குழந்தைகளுக்கு மஞ்சள் பூசுவதை முதல் ஒரு மாதத்தோடு (நான்கு வாரங்களுடன்) நிறுத்திக்கொள்வார்கள்.

உர மருந்து
எண்ணெய் தேய்த்த குளித்த நாளில் ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் உர மருந்து தருவர். வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், சுக்கு பெருங்காயம், பூண்டுப்பல் ஆகியவற்றை உர மருந்தாக, சிறிதளவு உரசி தாய்ப்பாலில் கலந்து, ஊற்றுவர். உர மருந்தை குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை தரலாம். இவ்வாறு உர மருந்து தரப்பட்டபின் குழந்தைகளுக்கு தலை முதல் கால் வரை சாம்பிராணி போடுவர்.  பின்னர் குழந்தைகளைத் தொட்டிலில் இட்டபின் அக்குழந்தைகள் குறைந்தது மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை தூங்கும்.

பால் மணி, கருப்பு வளையல்
குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது கழுத்தில் பால் மணியும், மிளகும் கலந்து கோர்க்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிவிப்பர். குழந்தைகளுக்கு குமட்டல், வாந்தி வராமல் இருப்பதற்காக இந்த பால் மணி மாலை அணிவிக்கப்படுகிறது.
கைகளில் கருப்பு வளையல்களை அணிவிப்பர். அத்துடன் வசம்பையும் பூலாங்கிழங்கையும் நூலில் கோர்த்து அதனை மஞ்சள் தண்ணீரில் நனைத்து வளையல்களைப் போல கையில் கட்டுவர். இதன் காரணமாக குழந்தைகளைத் தூக்கும்போது நல்ல மணம் இருப்பதை உணரமுடியும்.   

உரம் எடுத்தல்
குழந்தைகளுக்கு தலை நிற்கும் வரை கவனமாகத் தூக்க வேண்டும். இல்லையென்றால் கழுத்தில் உரம் விழுந்துவிடும். அப்போது குழந்தை தொடர்ந்து அழ ஆரம்பித்துவிடும். அப்போது குழந்தையின் இரு காதுகளின் கீழ்ப்பகுதியைப் பிடித்து இழுத்துப் பார்க்க வேண்டும். எந்தக் காதை இழுக்கும்போது குழந்தை கத்துகிறதோ அதைவைத்து வலி உள்ள காதை ஒட்டிய பகுதியில் விளக்கெண்ணெய் தடவி, அந்தப் பகுதியிலிருந்து தோள் பட்டை வழியாக நெஞ்சு வரை இழுத்துவிடுவார்கள். அவ்வாறு எடுத்தபின் குழந்தை நன்கு தூங்கும். தூங்கி எழுந்தபின் இயல்பாக விளையாட ஆரம்பித்துவிடும்.

குடல் தட்டுதல்
ஆறு மாதத்திலிருந்து குழந்தைகளின் குறும்புகள் ஆரம்பமாகும். குழந்தை மேலேயிருந்து குப்புற விழுந்தாலோ, கவனக்குறைவால் தலைகீழாக விழுந்தாலோ வயிற்றுப்போக்கு ஏற்படும். அதை சரிசெய்ய குழந்தைக்குக் குடல் தட்டுவார்கள். ஒருவர் குழந்தையின் இரு தோள்பட்டைகளையும் அணைத்துக்கொண்டு குழந்தையின் கால்கள் தரையில் பதிந்திருக்கும்படி செய்வர். நன்கு பழக்கமான மற்றொருவர் குழந்தையின் நெஞ்சுக்கீழே வயிற்றின் கீழ்ப்பகுதியில் திருநீறைத் தடவி, பின்பு மேலிருந்து கீழாக (வலது கையின் நான்கு விரல்களை ஒரு சேர வைத்து) தட்ட ஆரம்பிப்பர். அவ்வாறு தட்டிவிட்ட பின்னர் குழந்தையை ஒருவர் கவனமாகவும், இறுக்கமாகவும் பிடித்துக்கொள்ள மற்றொருவர் குழந்தையின் இரு கால்களையும் மேலிருந்து கீழ்நோக்கி ஒருசேர மிகவும் கவனமாக இழுப்பர். பின்னர் குழந்தைக்கு மருந்து தருவர். அதில் இரண்டு சிறிய வெங்காயம், கஞ்சிக்குப் போடும் கல் (உப்பு), சிறிது முருங்கைத்தளிர் இலை ஆகியவற்றை நசுக்கி வெள்ளைத் துணியில் வடிகட்டி குழந்தையின் காதில் இரு சொட்டு ஊற்றிவிட்டு, மீதியை சங்கில் வைத்து ஊற்றிவிடுவர்.

இவ்வாறெல்லாம் முன்னோர்கள் குழந்தைகளுக்குச் செய்ததால் எதிர்ப்பு சக்தி குழந்தைகளுக்கு கூடுதலாக இருந்தது. அவ்வாறே தாய்மார்களும் கவனிக்கப்பட்டதால், அவர்களும் நலமாக இருந்தனர்.  இவ்வாறாக முன்னோர்கள் செய்து வந்த கைமருந்து வழக்கத்தை இப்போது யாரும் செய்வதில்லை. உரம் எடுப்பது கூடாது, சாம்பிராணி போடக்கூடாது, குடல் தட்டக்கூடாது என்று மருத்துவர்கள் தற்போது கூறுகின்றனர். தற்போதைய தலைமுறையினரும் வேறுவழியின்றி மருத்துவர் சொல்வதையே கேட்கின்றனர். மருந்துகளையே நாடுகின்றனர். பாரம்பரிய முறையின் மகத்துவம் என்றும் போற்றத்தக்கது.   

Comments

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்