பட்டத்து யானை : வேல ராமமூர்த்தி

தமிழக வரலாற்றில் நடந்த பாஞ்சாலங்குறிச்சிப் போர் (செப்டம்பர் 1799), மதுரை திண்டுக்கல் கிளர்ச்சி (1800), சிவகங்கைப்போர் (1801), வேலூர்க்கோட்டைக் கிளர்ச்சி (1806), ராமன் நாயரது வயநாட்டுக் கிளர்ச்சி (1809), தளவாய் வேலுத்தம்பியின் திருவிதாங்கூர் கிளர்ச்சி (1809), சிப்பாய்ப் புரட்சி (1857), என விடுதலை வேண்டி வெகுண்டெழுந்த இயக்கங்களுக்கெல்லாம் வித்தூன்றிய கிளர்ச்சியான முதுகுளத்தூர் கிளர்ச்சி (1759)  (நூலின் முன்னுரை)  பற்றி இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.




நூறு வருடங்களுக்குப் பின்னர் மாவீரன் மயிலப்பன், பெருநாழி ரணசிங்கமாக மறு உருவெடுத்தான். வெள்ளையர்களின் ஆதிக்க வேரறுக்க ரணசிங்கம் ஆடிய ஆவேசத் தாண்டவமே பட்டத்து யானை என்கிறார் நூலாசிரியர்.

இந்நூலில் கமுதி, பெருநாழி, ஆப்பநாடு, ரெட்டியாப்பட்டி, முதுகுளத்தூர், எருமைக்குளம், பரளச்சி, சித்தரங்குடி போன்ற ஊர்களும், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களும் இடம் பெற்றிருப்பதைக் கண்டேன். கதை நடக்கும் இடமாக அதிக எண்ணிக்கையில் ஊர்களைப் படித்தேன்.
இந்நூலில் வித்தியாசமாக நான் படித்தது கட்டுத்தாலி என்ற சடங்கு முறையாகும். இந்தச் சடங்கின்படி மாப்பிள்ளை வருவதற்குத் தாமதம் ஏற்பட்டால் நல்ல நேரம் முடிவதற்குள் பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளையின் சகோதரிகள் தாலி கட்டுவார்கள். பின்னர் வசதிப்பட்ட தேதியில் உறவு முறையைக் கூட்டி பழைய குறையை முடிக்கும் மணச்சடங்கு செய்தாக வேண்டும். அந்தச் சடங்கில்தான் மாப்பிள்ளை பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவார். ஒரு மாசமோ, ஒரு வருஷமோ, நாலு வருஷமோ கழித்துக்கூட அந்தச் சடங்கு நடத்தப்படவில்லை என்றால் இந்தக் கட்டுத்தாலி செல்லாது என்றும், குறையை முடிக்கும் மணச்சடங்கு நடத்தவில்லையென்றால் பிறக்கிற பிள்ளைகள் சாதியிலே சேர்த்தி இல்லை என்றும் கூறுகின்றனர்.

இந்நூலில் துரைசிங்கம், அழகுமீனா, வெள்ளையம்மாள், அரியநாச்சி, திருக்கம்மா, பஞ்சவர்ணம், மாயழகி, உடையப்பா, கோட்டையம்மா, ரணசிங்கம், செல்லமுத்து, இருளாண்டி, சீமைச்சாமி, பொம்மி போன்ற பல பாத்திரங்களைக் காணமுடிகிறது. இவ்வகையான கதாபாத்திரங்களைப் பற்றிப் படிக்கும்போதும், போரின் நிகழ்வுகளைப் படிக்கும்போதும் உண்மைச் சம்பவம் போல, நேரில் பார்ப்பது போன்ற உணர்வைக் கொண்டு இருந்தது. அவர்களுடைய தைரியம், ஊரை விட்டுக்கொடுக்காமல் இருக்கவேண்டும் என்ற நாட்டுப்பற்று போன்றவற்றை அதிகமாகக் காணமுடிந்தது.

நூலாசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவ்வூர்ப் பகுதிகளை மையமாக வைத்து பட்டத்து யானையை உருவாக்கியுள்ளார்.   

நூல் குறிப்பு
பட்டத்து யானை, வேல ராமமூர்த்தி, டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, ஆகஸ்டு 2015, முதல் பதிப்பு, ரூ.300 

Comments

  1. அருமையானதொரு அலசல். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி! இதே போன்ற ஒரு தாலி சடங்கு சிவாஜி கணேசன், முத்துராமன், உஷா நந்தினி முதலானோர் நடித்த ‘பொன்னூஞ்சல்’ எனும் பழைய படத்தில் வரும். படத்தின் முக்கிய திருப்பத்துக்கு இந்த சடங்கைப் பயன்படுத்தியிருப்பார்கள். இன்று நீங்கள் சொல்லித்தான் இந்த சடங்கின் பெயர் கட்டுத்தாலி முறை என்பது தெரிகிறது. ஆனால் இதைப் பற்றி மட்டும் எழுதியதோடு நிறுத்தியிராமல் கதையைப் பற்றி இன்னும் விரிவாக எழுதியிருந்தீர்களானால் நூலைப் படிப்பது பற்றி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். எனினும் ஒரு புதிய நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  3. மிகவும் அருமை. !

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்