மனதில் நிற்கும் மைசூர் சுற்றுலா

கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான மைசூருக்கும் அருகிலுள்ள இடங்களுக்கும் அண்மையில் சுற்றுலா சென்றோம். வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களைக்கொண்ட இடங்களையும் பயணத்தின்போது கண்டோம். மைசூரிலும் சுற்றுப்பகுதிகளிலும் பேருந்து நிலையம், தொடர் வண்டி நிலையம் என அனைத்து இடங்களும் நன்கு பராமரிக்கப்படுவதைக் காணமுடிந்தது. ஆட்டோ கட்டணம் மிகவும் குறைவாகவே இருந்தது.

மெழுகு அருங்காட்சியகம்
மைசூருக்கு அருகிலுள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் உள்ள மெழுகுச்சிலைகள் உண்மையான மனிதர்களைப் போலவே காணப்பட்டன. அமர்ந்த நிலையிலிருந்த மகாத்மா காந்தி எங்களை மிகவும் கவர்ந்துவிட்டார்.  200க்கு மேற்பட்ட கர்நாடக மற்றும் மேல்நாட்டு இசைக்கருவிகளைப் பார்த்துப் பரவசமடைந்தோம்.  

சாமுண்டீஸ்வரி கோயில்
கோயிலுக்கு முன்பாக நம்மை வரவேற்கும் வகையில் மகிஷாசுரன் வலது கையில் வாளுடனும், இடது கையில் பாம்புடனும் நிற்கிறான்.  3486 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில் 18 மகா சக்தி பீடங்களில் ஒன்றாகும். அம்மனை தரிசிக்க மலை மீது செல்வதற்கு கார், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ன. 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சல மன்னர்களால் கட்டப்பட்டாலும், கோபுரம் விஜயநகர மன்னர்களால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கி.பி.1659இல் 1000 படிக்கட்டுகள் நிறுவப்பட்டன.  அருகிலுள்ள சிவன் கோயிலின் எதிரில் 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்ட, ஒரே கல்லால் ஆன, கருங்கல் நந்தி சிலை உள்ளது.


மிருகக்காட்சி சாலை
ஸ்ரீசாமராஜேந்திர விலங்கியல் தோட்டம் என்றழைக்கப்படுகின்ற மைசூர் மிருகக்காட்சி சாலை 1892இல் 10 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டதாகும். 1902 முதல் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகின்ற இந்த மிருகக்காட்சி சாலை மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது. இலை சருகுகள் அவ்வப்போது அங்குள்ள பணியாளர்களால் கூட்டி அப்புறப்படுத்தப்படுகின்றன. விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைப் பார்ப்பதைவிட தூய்மைதான் நம் கண்களுக்குப் புலப்படுகிறது. 25 நாடுகளைச் சேர்ந்த 168 இனங்களைக் கொண்ட 1500 மிருகங்களைக் கொண்ட இந்த மிருகக்காட்சி சாலை தன்னுடைய 125ஆவது ஆண்டு விழா கொண்டாடும் நேரத்தில் நாங்கள் அங்கு இருந்தோம்.

அரண்மனை
மைசூர் அரண்மனை 1897இல் தொடங்கி 1912இல் முடிக்கப்பட்டதாகும். அரண்மனை தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரம் கொண்டதாகும். அரண்மனையின் தூண்கள் அழகிய பூ வேலைப்பாடுகளைக் கொண்டமைந்துள்ளன. ஒவ்வொரு அறையிலும் இருந்த உயரமான கதவுகள் அலங்காரமாக இருந்தன.  தூண்கள்,  மன்னர்கள் அமர்ந்திருந்த இருக்கைகள், பயன்படுத்திய ஆயுதங்கள், அணிந்திருந்த உடைகள், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தஞ்சாவூர் ஓவிய பாணியில் மன்னர்களின் ஓவியங்கள், காளி, அம்மன், லட்சுமியின் பெரிய படங்கள் இருந்தன.  உள்ளே புகைப்படம் எடுத்த அனுமதி இல்லாத நிலையிலும், பணியாளர்கள் தடுத்தபோதும் பலர் புகைப்படம் எடுப்பதைக் காணமுடிந்தது. அன்று இரவு மறுபடியும் அரண்மனைக்குச் சென்றபோது கண்ணைக்கவரும் வகையில் மின்சார விளக்குகளின் ஒளியில் அரண்மனை ஜொலித்துக் கொண்டிருந்ததைக் கண்டோம்.   கிருஷ்ண ஜெயந்திக்கு முதல் நாள் சென்றிருந்தபடியால் அரண்மனையினை மின்னொளியில் காணமுடிந்தது.  மற்ற தினங்களில் சென்றிருந்தால் மின்னொளியின் அரண்மனையின் பரவசத்தைக் காண இயலாமல் போயிருக்கும். இதனைப் பார்த்தபோது தசரா விழாவின்போது மைசூரைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.

பிருந்தாவனம்
கிருஷ்ணராஜசாகர் அணையை ஒட்டி அமைந்துள்ள பிருந்தாவனம் பூங்கா 1927இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1932இல் கட்டி முடிக்கப்பட்டது. அணையை அழகுபடுத்தும்வகையில் பூங்கா உள்ளது. காஷ்மீரில் முகலாயர் பாணியில் உள்ள சலிமர் பூங்காவின் மாதிரியாக இது உருவாக்கப்பட்டது. 60 ஏக்கருக்கும் மேல் 3 படிநிலைகளைக் கொண்டுள்ள இந்த பூங்காவினை ஆகாயத்திலிருந்து பார்க்கும்போது குதிரை லாட வடிவில் இருப்பதாகக் கூறுகின்றனர். இப்பூங்கா முதன்மை வாயில், தெற்கு பிருந்தாவன், வடக்கு பிருந்தாவன், குழந்தைகள் பூங்கா என்ற நான்கு பிரிவாக உள்ளது. இங்கு வண்ண விளக்குகள் எரிவதைப் பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வருகின்றார்கள். பலவித வண்ண விளக்குகளின் ஒளி நீரில் பிரதிபலிக்கும்போது நீர்  பல வண்ணங்களாக மாறுவதைக் காணமுடிந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக அணையின் மேல் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.  

பேளூர், ஹலேபேட், சோம்நாத்பூர் 
எங்கள் பயணத்தின்போது கிட்டத்தட்ட ஒரே அமைப்பினைக் கொண்ட மூன்று கோயில்களைக் கண்டோம். அவை பேளூர், ஹலேபேட், சோம்நாத்பூரிலுள்ளவையாகும். நுணுக்கமான வேலைப்பாடுகளுக்கு ஏற்ற மென்மையான சோப்புக்கற்களால் கட்டப்பட்டப்பட்ட பெருமையுடையவையாகும்.  இவை ஹோய்சலர்களின் கட்டடக்கலையின் சிறப்பினை வெளிப்படுத்துவனவாகும். பேளூர் கோயில் அழகான ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது. ஹோய்சல மன்னர் விஷ்ணுவர்த்தனால் கி.பி.1117இல் யாகாச்சி ஆற்றங்கரையில் கட்டப்பட்டதாகும். மூலவராக சென்னகேசவர் உள்ளார். வைணவர்களுக்கு முக்கிய கோயிலாக விளங்கும் இக்கோயில் அமைப்பு, நுழைவாயில், கொடுங்கை, தூண்கள், சிற்பங்கள் போன்றவை கலை நயத்தை வெளிப்படுத்துகின்றன. குதிரை, யானை அணிவகுப்பு சிறப்பாக சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளது.


ஹலேபேட்டிலுள்ள ஹோய்சலேஸ்வரர் கோயில் என்னும் சிவன் கோயில் விஷ்ணுவர்த்தன் ஆண்டு வந்த காலத்தில் இது கட்டப்பட்டது. துவாரசமுத்திரம் என அழைக்கப்படுகின்ற இரட்டை விமானக் கோயில். ஒரு விமானம் ஹோய்சலேஸ்வரருக்கும், மற்றொன்று சாந்தளேஸ்வரருக்கும் உரியதாகும். நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் செய்வதற்கு உகந்த சோப்புக்கல் எனப்படும் கல்லால் இக்கோயில், ஜகதி எனப்படும் மேடை மீது  கட்டப்பட்டது. இங்குள்ள இரு கோயில்களும் கிழக்கு நோக்கிய நிலையில் அருகருகே அமைந்துள்ளன. இக்கோயிலுக்கு கோபுரம் இல்லை. இது கிட்டத்தட்ட பேளூர் கோயிலைப் போன்றே இருந்தது. அருகே சிறிது தூரத்தில் கேதாரேஸ்வரர் சிவன் கோயிலும் பார்சுவநாதர், சாந்திநாதர் சமணக்கோயில்களும் உள்ளன.


 பேளூர், ஹலேபேட் கோயில்களைப் போன்ற அமைப்பில் உள்ள சோம்நாத்பூரிலுள்ள சென்னகேசவர் கோயில் ஹோய்சலர்களால் கட்டப்பட்ட கடைசி பெரிய கோயிலாகும். இங்குள்ள சிற்பங்களைப் பார்த்தபோது தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும், ஆவுடையார் கோயிலும், கும்பகோணம் ராமஸ்வாமி கோயில் தூண் சிற்பங்களும், கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் கருவறையின் வெளிப்புறத்தில் உள்ள சிற்பங்களும் நினைவிற்கு வந்தன.   இவற்றைக் காண கண் கோடி வேண்டும். 
சரவணபெலகோலா
சரவணபெலகோலாவில் மலைமீது 57 அடி உயர ஒரே கல்லால் ஆன கோமதீஸ்வரர் சிலை உள்ளது. மலை ஏறும்போது சிலையினைக் காண முடியாது. மலையேறிக் கொண்டிருந்தபோது பல சமணர்களைக் கண்டோம்.  உள்ளே கோயிலின் நுழைவாயிலைக் கடந்து திருச்சுற்றின் மூலமாகப் பார்க்கும்போது மார்பளவு வரை சிலையைக் காணமுடிந்தது. உள்ளே செல்லும்போதுதான் கோமதீஸ்வரரின் முழு சிலையையும் காணமுடிந்தது. சமணப்பெருமக்கள் கோமதீஸ்வரருக்கு பாத பூஜை செய்கின்றனர்.

மேல்கோட்டை
மேல்கோட்டையில் மலைமீதுஉள்ள யோக நரசிம்மர் கோயில், தரையில் சேளுவநாராயணசாமி கோயில் மற்றும் ராய கோபுரம், அக்கா தங்கை குளம்  உள்ளிட்ட இடங்களைக் கண்டோம்.

ஸ்ரீரங்கப்பட்டனம்
ஸ்ரீரங்கப்பட்டனத்தில் சென்று அங்கு  திப்பு சுல்தான் கோடைக்கால அரண்மனை, கும்பாஸ் என்னுமிடத்தில் திப்பு சுல்தானின் பெற்றோர் சமாதி, காவிரி, லோகபாவினி, ஹேமாவதி சங்கமிக்கும் இடம், நிமிஷாம்பா கோயில் ஜும்மா மசூதி, திப்பு சுல்தான் உடல் கிடந்த இடம், சிறைக்கூடம் சென்றுவிட்டு நிறைவாக ரங்கநாதர் கோயில் சென்றோம். மைசூர்ப் பயணத்தின்போது பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பார்த்தோம். 
மைசூரில் தசராவையும், மைசூர் சில்க்கையும் சிறப்பாகக் கூறுவதைக் கண்டோம். நான்கு நாள்களில் அநேக இடங்களைப் பார்க்க முடியும். எங்கள் மனதில் மறக்க முடியாத சுற்றுலாவாக மைசூர் பயணம் அமைந்தது. 

Comments

  1. அருமையான பகிர்வு
    மைசூர் சென்று வந்த நினைவுகள் மனதில் தோன்றுகின்றன
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

திருநாலூர் மயானம்

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்