இன்றும் தொடரும் வானொலி கேட்கும் அனுபவம்
1939 மே 16இல் தொடங்கப்பட்ட திருச்சி வானொலி நிலையத்தின் 80ஆவது ஆண்டு விழா நிறைவு பெறுகின்ற இவ்வேளையில் வானொலியுடனான என் 40 வருட அனுபவத்தை நினைவுகூர்வது மகிழ்ச்சியாக உள்ளது.
நான் சுமார் 40 ஆண்டுகளாக வானொலியில் திரைப்படப் பாடல்கள்
கேட்டு வருகிறேன். நான் பிறந்த வருடத்தில் (1965) வீட்டில் ரேடியோ வாங்கியதாகப் பெருமையாகக்
கூறுவார்கள். அந்த ரேடியோப்பெட்டி பெரியதாகவும், ஸ்விட்ச்கள் வித்தியாசமாகவும், பார்க்க
அழகாகவும் இருக்கும்.
![]() |
தற்போது எங்கள் இல்லத்தில் |
50 வருடங்களுக்கு முன்னர் ஒரு சில வீட்டில்தான் வானொலி
இருக்கும். வானொலியில் அப்பா செய்திகள் கேட்பார். காலையில் விவித் பாரதியின் வர்த்தக
ஒலிபரப்பு என்று நிகழ்ச்சிகள் தொடங்கும். காலை 7.25க்கு சேவை செய்திகள் என்று ஆரம்பித்து
அன்றைக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் கூறுவார்கள். அதை நாங்கள் கேட்டுக்கொண்டு பிடித்த
நிகழ்ச்சிகள் என்றால் கேட்க உட்கார்ந்து விடுவோம். ஞாயிற்றுக்கிழமைகளில் சுசித்ராவின்
ஹார்லிக்ஸ் குடும்பம் என்று ஒரு நாடகம் ஒலிபரப்புவார்கள். அப்பாவை போடச்சொல்லி, காலை
12.00 மணியளவில் அந்த நிகழ்ச்சியை நாங்கள் தவறாமல் கேட்போம். வானொலியில் பாட்டு கேட்பது
என்றால் மனதில் மகிழ்ச்சிதான். சுசீலா அம்மா பாடல்கள் என்றால் தனி மோகம்தான். அன்று
திரைப்படப் பாடல்களுக்காக வானொலியில் தனியாக நேரம் ஒதுக்குவார்கள். இரு படப்பாடல்களையும் ஒலிபரப்புவர்.
13 வயதிலிருந்தே எனக்கு பாட்டு கேட்கும் ஆர்வம் வந்தது. எங்கள் அண்ணன் பாட்டுக்கு
ஏற்றாற்போல விசில் அடித்து அந்த மெட்டுடன் பாடுவார்கள். அண்ணன் எப்படி அடிக்கிறார்கள்
என்று ஆர்வத்துடன் பார்ப்போம். பாண்ட் மாற்றுதல், உரிய நம்பரில் முள்ளை வைத்தல் போன்றவற்றை
அண்ணன் சொல்லித் தந்தார்கள். டம்டம் என அதிகமாக ஸ்பீக்கர் ஒலி வருவதற்காக ரேடியோவுடன்
ஒரு அலுமினியச் சட்டி, இட்லி பானை, மண் பானை போன்ற ஏதாவது ஒன்றினை இணைத்து தொடர்பு
கொடுத்துக் கேட்பார்கள். இதைப் பார்த்து எனக்கும் சகோதரிகளுக்கும் பாட்டு கேட்கும்
ஆர்வம் வந்தது.
நிகழ்ச்சி முடிந்தபின், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்
அப்துல் ஹமீது என்று கணீரென ஒலிக்கும் அவருடைய குரல் அனைவரையும் ஈர்க்கும். பாடல் தொகுப்பின்போது
முடியும் ஒரு சொல்லைக் கொண்டு அடுத்த பாடலை ஆரம்பிக்கும் உத்தியினை ஆவலோடு கேட்போம்.
அன்றும்இன்றும் நிகழ்ச்சியில் பழைய மற்றும் புதிய பாடல்களை மாற்றி மாற்றி ஒலிபரப்புவார்கள்.
காலை 7.00 மணி முதல் 9.30 வரையிலும் பாடல்களையும், மதியம் நாடகம், மற்றும் ஒலிச்சித்திரங்களையும்
(வாரம் இரு நாளோ, ஒரு நாளோ) இரவில் உறங்கும் வேளை, தேன் மழை நிகழ்ச்சிகளில் பாடல்களையும்
கேட்போம். நாங்கள் பாட்டு கேட்கும் ஆர்வத்தைப் பார்த்து அண்ணன் எங்களுக்கு ஒரு டிரான்சிஸ்டர்
வாங்கித் தந்தார்கள். கொல்லைப்புறம், மாடி என்று நாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம்
எடுத்துச்சென்ற கேட்க இந்த டிரான்சிஸ்டர் உதவியாக இருந்தது.
என்னதான் டேப் ரிக்கார்டர், சிடி பிளேயர், டிவி என
வந்தாலும் ரேடியோவில் பாட்டு கேட்பது போல இருக்காது. இன்று விளம்பரங்கள் அதிகம் உள்ளன.
விவசாயம், சமையல், ஆரோக்கிய உணவு, விடுகதைகள், டாக்டர்கள் அறிவுரை, இயற்கை வைத்தியம் போன்ற நிகழ்ச்சிகள் வானொலியில்
தற்பொது இடம் பெறுகின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றை இன்னும் கேட்டு வருகிறேன். இன்றும்
வீட்டில் சிறிய டிரான்சிஸ்டர் உள்ளது. வானொலியைக் கேட்டுக்கொண்டே வீட்டு வேலைகளை கவனம்
சிதறாமல் முடிக்க முடிகிறது.
அப்பொழுது கேட்டது போல இப்பொழுது வானொலியில் பாடல்களைக் கேட்க முடிவதில்லை.
பழைய பாடல்கள் அதிகமாக ஒலிபரப்பப்படுவதில்லை. ஆனால் ரேடியோ கேட்பதில் இதயத்துக்கும்
மனதிற்கும் அலாதி பிரியம்தான்.
இப்போது சூரியன்எப்.எம், ரயின்போ போன்றவை மூலமாக நிகழ்ச்சிகளை
கேட்க முடிகிறது. தற்போது கையடக்கப்பெட்டியாகவும், எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும்
பலர் தற்போது பாட்டினைக் கேட்பதைப் பார்க்க முடிகிறது.
எனது அருகே எப்போதும் கோடை FM...
ReplyDeleteஇப்பொழுதும் வானொலியா
ReplyDeleteவியப்பாக இருக்கிறது