மாங்கனித்திருவிழா

மாங்கனித் திருவிழாவைப் பார்க்க வெகு நாட்களாகவே ஆசை. எங்கள் அண்ணி, அக்கா மருமகள் இருவரும் பிறந்த ஊர்  காரைக்கால். வருடாவருடம் போகலாம் என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால் எங்களால் போக முடியாமல் ஆகிவிடும்.  இரண்டாண்டுகளுக்கு முன் எனது அந்த ஆவல் நிறைவேறியது. இதற்கு முன்பு நான் காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் மாங்கனித் திருவிழாவிற்காக 2014இல் சென்றேன். இன்று (19 சூன் 2016) காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் நாங்கள் சென்ற அந்நாள் நினைவிற்கு வந்தது. 



அம்மையார் தரிசனம்

தஞ்சையிலிருந்து காலை புறப்படும் ரயிலில் புறப்பட்டு நானும் குடும்பத்தினரும் காரைக்கால் சென்றோம். ரயிலைவிட்டு இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் காரைக்கால் அம்மன் கோயிலுக்குச் சென்றோம். அனைவருக்கும் தந்தையான சிவபெருமானால் அம்மா என்று அழைக்கப்பட்ட புகழ் பெற்றவர் புனிதவதியார்  காரைக்கால் அம்மையார் போகும் வழியெல்லாம் ஒரே கூட்டம். காணும் இடமெல்லாம் விழாக்கோலம். கோயிலின் முகப்பில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. முதலில் கோயிலுக்குச் சென்றோம். கோயிலின் வாயிலில் யானை அனைவரையும் வரவேற்கும் வகையில் நின்றுகொண்டிருந்தது. கோயிலில் அம்மனை தரிசித்துவிட்டு, சிவன் சன்னதிக்குச் சென்றோம். அம்மன் சன்னதியின் சுற்றில் காரைக்கால் அம்மையாரின் வரலாறு அற்புதமான வண்ணப்படங்களுடன் விளக்கத்துடன் வரையப்பட்டிருந்தது.  அதைப் பார்த்தால் கதை தெரியாதவர்களுக்கும் எளிமையாகப் புரிந்துவிடும்.


பிச்சாண்டவர் வீதியுலா
மாங்கனித்திருவிழா நாளன்று சிவபெருமான், பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையார் வீட்டுக்கு உணவு சாப்பிட செல்வதை விளக்கும் வகையில் மாங்கனியுடன் பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்வது மிகவும் முக்கியமான நிகழ்வாகும். கோயிலுக்கு வெளியே வந்த நாங்கள் எதிர்த்திசையில் பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் கிளம்ப ஆயத்தமாக இருந்ததைப் பார்த்தோம்.  சப்பரம் கன்னடியர் வீதியில் முக்கத்தில் நின்று மெல்ல நகர ஆரம்பித்தது. சற்று நேரத்திற்கெல்லாம் மக்கள் திரண்டனர். சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் போது காவல் துறையினர்  மிகவும் அமைதியாக இருக்க கூட்டத்தைக் கேட்டுக்கொண்டனர். சாமிக்கு அர்ச்சனை செய்வதற்கு தாம்பூலத்தில் இரண்டு மாங்கனிகள்,  இரண்டு வாழைப்பழங்கள், வஸ்திரம் உள்ளிட்ட பல மங்கலப்பொருட்களை அர்ச்சனை செய்யத் தருகிறார்கள். அதைப்பார்க்கும் போது நமக்கு புனிதவதியாரின் கதை நினைவுக்கு வந்தது.  

மாம்பழப் பிரார்த்தனை


கம்பீரமான யானை முன்வர தொடர்ந்து தேவாரம் ஓதிக்கொண்டு ஓதுவார்கள் வந்தனர்.  யானை, சங்கு, மேளம், குழல், சென்டை மேளம், தாளம் என பலவகைப்பட்ட மேள வாத்தியங்களுடன் இனிமையான இசையில் பிச்சாண்டவர் உலா வந்தது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பெண்கள் குழல் போன்ற வாத்தியத்தை வாயில் வைத்து மூச்சை அடக்கி ஊதுவதை ஆச்சர்யத்துடன் பார்த்தோம்.  அழகான பதாகைகள் வரிசையாக பிடித்துவரப்பட்டன. சப்பரம் நகர நகர, கூட்டமும் சப்பரத்துடன் நகர்ந்து சென்றது. பவழக்கால் சப்பரம் நகர நகர சப்பரத்திற்குப் பின் பக்தர்கள் மாம்பழங்களை வீசி தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டனர். உயரமான கட்டிடங்களில் இருந்து மாம்பழங்களை வீசுவதையும், கீழே உள்ளவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிடிப்பதையும் காணமுடிந்தது. அவ்வாறே கீழிருந்தும் மாம்பழங்களை வீசிக் கொண்டிருந்தனர். மாங்கனிகளை வீசுவதற்கு முன்பு காவல் துறையினர் அமைதியாகவும், யார் மேலேயும் வீசாமலும் பார்த்து வீசவும் என்று ஒலிபெருக்கியில் சொல்லிக்கொண்ட இருந்தனர்.  காவல் துறையினர் பொதுமக்களை மிகவும் அன்போடு வழிகாட்டி போகச் சொல்கிறார்கள். காரைக்கால் அரசு நன்றாக வழிநடத்தி மக்களை எந்தவிதமான சங்கடங்களும் ஆகாமல் பார்த்துக்கொண்டார்கள். 




சிவ தாண்டவம்
55 வயது மதிக்கத்தக்க ஒரு பக்தர் சிவன் தாண்டவம் ஆடுவது போல் தன்னை மறந்து ஆடிப்பாடி மகிழ்ந்தார். அவரைக் கூட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்தார்கள். ஒரு வெளிநாட்டவர் சுவாமியின் பின்னால் வெகுநேரமாக வந்துகொண்டேயிருந்தார். அந்த பக்தனை அவர் புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்களும்தான். வீதிகளில் நீர்மோர், தண்ணீர், பிரசாதம் போன்றவைகள் போகும் மக்களுக்குத் தந்தார்கள். களைப்பு தீர அவ்வப்போது அவற்றை நாங்கள் வாங்கிக்கொண்டோம். மாங்கனிகளை வீசும்போது எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அதனைப் பிடித்தார்கள்.  அன்பின் மிகுதியால் பலர் சாக்கு மூட்டைகளிலும், கூடைகளிலும், பைகளிலும் அதிக எண்ணிக்கையிலான மாம்பழங்களை வைத்துக்கொண்டு வீசிக்கொண்டே வந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது சற்றே சிரமமாகக் காணப்பட்டது. காவல் துறையினர் எந்த இடையூறும் இல்லாமல் கவனித்துக் கொண்டார்கள்.  காரைக்கால் அரசு நல்ல முறையில் செய்திருந்தது. 

பிற விழாக்கள்
காரைக்காலுக்கு இது ஒரு சிறப்பு அம்சமாகும். இதுபோல் தமிழ்நாட்டில் கோயில்களின் சிறப்புகள் விதம்விதமாக உள்ளன. தஞ்சாவூரில் முத்துப்பல்லக்கு, திருவையாற்றில் சப்தஸ்தானப்பல்லக்கு, குடந்தையில் மாசிமகம், வலங்கைமானில் பாடைத்திருவிழா, மன்னார்குடியில் வெண்ணைத்தாழி, திருவாரூரில் தேர், கரூரில் தலையில் தேங்காய் உடைக்கும் விழா, திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம், புதுக்கோட்டை மாரியம்மன் திருவிழா, மதுரையில் சித்திரைத் திருவிழா இன்னும் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் பெரும்பாலான திருவிழாக்களில் நான் குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளேன். சிலவற்றை இன்னும் தொடர்ந்து பார்க்க இறைவன்  அருள்வான் என்ற பரிபூர்ண நம்பிக்கையுடன் காரைக்காலில் இருந்து கிளம்பினோம் நிறைவான மனத்துடன்.   

புகைப்படங்கள் எடுக்க உதவி : 
கணவர் முனைவர் பா.ஜம்புலிங்கம், அண்ணி திருமதி கண்மணி இராமமூர்த்தி

Comments

  1. அழகிய படங்களுடன் மாங்கனித்திருவிழாவின் விரிவான விளக்கங்கள் தந்தமைக்கு நன்றி - கில்லர்ஜி

    ReplyDelete
  2. தங்களின்பதிவை இன்றுதான் கண்டேன்
    மகிழ்ந்தேன்
    இனி தொடர்வேன்

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

திருநாலூர் மயானம்

அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்