அறிவோம் தட்டச்சும் சுருக்கெழுத்தும்

அந்நாளில் தட்டச்சும் சுருக்கெழுத்தும்
தற்போது எட்டாம் வகுப்புக்குமேல் படித்துவிட்டு உயர் நிலைப்பள்ளி போனதும் படிக்க நேரம் இல்லை என்று சொல்கிறார்கள். 1970க்கு முன்பு எட்டாம் வகுப்பு முடித்திருந்தால் ஆசிரியர் வேலை, வங்கிகளில் வேலை வாய்ப்புக்கும் இந்த தட்டச்சு உதவியாக இருந்தது. இன்று மாணவ மாணவிகள் ஒரு பட்டம் வாங்கியவுடன் வேறு எதுவும் வேண்டாம் என்று இருக்கிறார்கள். படிப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. அன்று தட்டச்சு, சுருக்கெழுத்து தெரிந்தால் தான் வேலை வாய்ப்புகள் அமையும். இப்போதும் அதன் முக்கியத்துவத்தை நாம் சற்றுச் சிந்திப்போம். 

தட்டச்சுப்பொறியின் பயன்பாடு
கணினியின் வரவால் தட்டச்சுப் பொறிகள் விலைக்கு விற்கப்பட்டு, பயன்பாடு இல்லாமல் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஆங்காங்கு இருக்கும் ஒரு சில தட்டச்சுப்பொறிகள் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்ற தட்டச்சு சுருக்கெழுத்து நிலையங்களில் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசுத்தேர்வு எழுத மட்டும் இவை பயன்படுத்தப்படுகின்றன. நாளடைவில் இதுவும் குறைந்துவிடும் நிலை எழ வாய்ப்புள்ளது. 

கணினி மூலம் தட்டச்சு
கணினியின் மூலமாக கணினி விசைப்பலகையில் தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளலாம். அவ்வாறு கற்கும்போது ஆங்கில மற்றும் தமிழ் தட்டச்சுப்பொறிகளில் காணப்படுகின்ற பயிற்சிப்பாடங்களை முறையாக தினமும் தட்டச்சு செய்யலாம். ஒரு விரல் தட்டச்சு நிலை மாறி முறையான வேகத் தட்டச்சு செய்ய இது உதவும்.

பெற்றோர் பங்களிப்பு
இப்போது ஆறாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தட்டச்சு தேர்வுக்குச் (Pre-Junior) செல்லலாம். வரும் காலங்களில் தட்டச்சு என்னவென்று கேட்பார்கள். நம் வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஊக்கப்படுத்தலாம். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்ப்பதை உடனே வாங்கித்தருகிறார்கள். வண்டி, லேப்டாப், இணையதளம், வீடியோ கேமரா போன்ற சாதனங்களுடன் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.  ஆனால் அவர்களுடைய கல்வித்தேவைகளையோ, தொழில்நுட்பத் தகுதிகளை மேம்படுத்தவோ உரிய காலகட்டத்தில் முயற்சி எடுக்கவேண்டும். பொருள் வாங்கித்தந்து குழந்தைகளின் போக்கிற்கு விட்டுவிட்டு பின்னர் பலர் வருத்தப்படுகிறார்கள். ஒரு வரையறை வைத்துக்கொண்டு குழந்தைகளை வளர்க்கவேண்டும்.  தட்டச்சில் ஒரு தேர்வாவது தேர்ச்சி பெற்றால் கணிப்பொறியை எளிதாகப் பயன்படுத்த முடியும். வேகமாகவும் நாம் நினைப்பதை தட்டச்சிட உதவியாக இருக்கும். அவ்வாறே குழந்தைகளுக்கு சுருக்கெழுத்து என்றால் என்ன என்பதைச் சொல்லி அவர்களுக்கு சுருக்கெழுத்துப் பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தலாம். தொடர்ந்து சுருக்கெழுத்து எழுதும்போது அதிக எண்ணிக்கையிலான புதிய வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள முடியும். தட்டச்சைப் போலவே சுருக்கெழுத்திலும் குறைந்தபட்ச அளவிலான தேர்வு எழுதலாம். கணினிப் பயன்பாடு தெரிந்த மாணவர்கள் கணினி மூலமாகத் தட்டச்சு அறிவினை மேம்படுத்திக்கொள்ளலாம்.

ஆசிரியர்கள் அறிவுரை
பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர் மாணவிகளுக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தின் ஆர்வத்தை ஊக்குவிக்கவேண்டும். இவ்வாறான வகையில் வகுப்பில் கூறப்படும்போது 10 மாணவர்களில் ஒருவருக்காவது ஆர்வம் வரும்.  கல்வி நிறுவனங்களில் தட்டச்சு, சுருக்கெழுத்தினை விருப்பப்பாடமாகக் கொண்டுவந்து மாணவர்களுக்கு அதனைக் கற்றுக்கொள்ளும் சூழலை உண்டாக்கித்தரலாம்.

வேலைக்கு விண்ணப்பம்

தட்டச்சு தெரிந்தால் வேலை வேண்டி விண்ணப்பம் அனுப்பும்போது மனுவில் அதையும் ஒரு தகுதியாகக் காண்பிக்கலாம். தன்விவரக்குறிப்பில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தகுதிகள் இடம் பெறும் அளவு மாணவர்கள் தம்மை மேம்படுததிக்கொள்ள வேண்டும். 

பணியிடத்தில் பயன்பாடு
தட்டச்சு கற்றுக்கொண்டால் வேலைப் பார்க்கும் போது பிழையில்லாமலும் கவனமாகவும் வேலை செய்யலாம். வங்கிகளில், அலுவலகங்களில், மென்பொருள் அலுவலகங்களில், கடைகளில், அங்காடிகளில், வங்கிகளில், மருத்துவமனைகளில் வேலை பார்க்கும்போது நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களை உடனுக்குடன் காக்க வைக்காமலிருக்கவும்  தட்டச்சுப் பயன்பாடு உதவியாக இருக்கும்.  ஒரு விரலால் தட்டச்சு செய்து வேலை செய்வது போன்றவை குறையலாம். கணினிப் பயன்பாட்டில் தட்டச்சு அறிவைப் பயன்படுத்தும்போது வேகம் இன்னும் அதிகமாக இருக்கும். தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எளிதாகக் கையாளும் வாய்ப்பினைப் பயன்படுத்தலாம். 

பிற மொழிகள், கலைகள் கற்றல்
இன்றைய மாணவ மாணவிகளுக்கு, பள்ளிப் பாடம், கல்லூரி பாடம் படிப்பது போல் தட்டச்சும் சுருக்கெழுத்தும் தேவையானவை. பிற மொழிகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்றவற்றையும், ஓவியம், நாட்டியம், பாடல் போன்ற கலைகளைக் கற்றுக்கொள்ளவும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதைக் காணமுடிகிறது. அவர்கள் தட்டச்சுச் சுருக்கெழுத்தைக் கற்றுக்கொள்ளவும் ஊக்கப்படுத்தலாம்.
என் மகன்கள் சொல்லிக்கொடுத்து தமிழ்த்தட்டச்சினை கணினிப்பலகையில் அடிப்படை நிலையில் கற்றேன். தற்போது என்னால் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். தட்டச்சு, சுருக்கெழுத்து முறைப்படி கற்பதால் பல புதிய சொற்களை அறிந்துகொள்ளலாம். வேகத்தை அதிகப்படுத்தலாம். அந்த உத்தியை கணினி வழியாக கடைபிடிக்கும்போது நேரத்தை சேமிக்கலாம். இந்நிலையில் இதன் முக்கியத்துவத்தை உணரமுடியும். 

Comments

  1. நல்ல கட்டுரை ஐயா!இயந்திரம் மாறி இருக்கிறதே தவிர தட்டச்சின் தேவை உள்ளது தாங்கள் கூறுவது போல பள்ளிகளிலேயே முறையான தட்டச்சை பயிற்ருவிப்பது நல்ல ஆலோசனைதான்

    ReplyDelete
  2. அரிய செய்தி.பாராட்டுகள்.

    ReplyDelete
  3. கணினி விசைப்பலகையில் ஒரே விரல் கொண்டுதான் தமிழ் ஆங்கிலம் என தட்டச்சு செய்கிறேன் எதையும் சிறு வயதில்முறைப்படி கற்றால் நல்லது கட்டுரைக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. பயனுள்ள அருமையான பகிர்வு
    விரிவான பகிர்வுக்கும்
    தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தட்டச்சின் பயன் தற்போதைய இளைஞர்களுக்குத் தெரிவதில்லை..கட்டுரை அருமை..

    ReplyDelete
  6. பலருக்கும் பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி
    - கில்லர்ஜி

    ReplyDelete
  7. நாம் சிறு வயதில் பிரம்படிப் பட்டுப் பயந்துப் படித்தோம். கண்டிப்புத் தேவை. தட்டச்சில் கை விரல்களை முறையாக வைத்து வேகம் குறைவானாலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகே கணினி படிப்பு என்று முறைமைப் படுத்த வேண்டும்.

    ReplyDelete
  8. கஸ்தூரி (மின்னஞ்சல் வழியாக)
    குறுக்கு வழியில் படிக்க வேண்டும், விரைவில் யாரையாவது பார்த்து காப்பியடிக்க வேண்டும் என்ற மாய உலகில் தட்டச்சு என்பது கணினியின் முன்னோடி, அடிப்படைதான் - அஸ்திவாரம் என்பதனை அனைவருக்கும் புரிய வைக்க எழுதிய கட்டுரைத் தொகுப்பு நேரத்தை நோக்கி பயணித்திருக்கிறது. திருமதி பாக்கியவதி அம்மா அவர்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும்.

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

உதிரமாடன்குடியிருப்பு செம்புக்குத்தி அய்யனார் கோயில்

திருநாலூர் மயானம்