அமராவதி அத்தை

எங்கள் அப்பாவினுடைய தாய்மாமாவின் மருமகள் அமராவதி அத்தை. அவர் குறிச்சித்தெருவில் எங்கள் வீட்டில் குடியிருந்தார்கள். நாங்கள் சிறுபிள்ளைகளாக இருந்தபொமுது எங்களுக்குத் தலை பின்னிவிடுவது, ஆற்றில் எங்களைக் குளிப்பாட்டும் பொழுது இறுக்கமாகப் பிடிக்கச் சொல்லி தலையை தண்ணீரில் முக்கி அலசிவிடுவது, சினிமாவுக்கு போகும்போது எங்களைத் தூக்கிக்கொள்வது, தலைமுடியை சிலுப்பாமல் மறுநாள் வரை அப்படியே இருக்குமாறு அழுத்திப்பின்னுவது என்று அவர்கள் எங்கள்மீது செலுத்திய அன்பானது இன்றும் நினைவில் நிற்கிறது. கடைக்கு மாமா சென்றபின் வீட்டிலேயே அத்தை சவ்வு மிட்டாய் போடுவார்கள். அது ருசியாக இருக்கும். பள்ளிக்குச் செல்லும்போது மிட்டாய் வாங்க அம்மாவிடம் ஐந்து பைசா வாங்கிக்கொண்டுபோவோம். மாமா இருந்தால் எங்களுக்கு ஐந்து பைசாவுக்கு ஆறு மிட்டாய் தருவார். ஆனால் அத்தையோ ஐந்து பைசாவுக்கு ஐந்து மிட்டாய்தான் தருவார்கள். கரெக்டாக இருப்பார்கள். நாங்கள் அவர்கள் கொடுப்பதை வாங்கிவருவோம். என்னதான் வீட்டிலே தீனி தின்றாலும் அத்தை மிட்டாயை விடமாட்டீர்களே என்று அம்மா கூறுவார்கள். அவர்களுக்க...