திருநாலூர் மயானம்

நாலூர் மயானம் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரை 12 மே 2017 நாளிட்ட தினமணி இதழில் மோட்சமளிக்கும் மயானம் திருக்கோயில் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் விரிவாக்க வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். 

திருநாலூர் மயானம் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக் கோயிலாகும். காவிரியின் தென்கரையில்  96ஆவது தலமாகப் போற்றப்படுகின்ற இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் கும்பகோணம்-குடவாசல்  சாலையில்  திருச்சேறையை அடுத்து அமைந்துள்ளது. 

இக்கோயில் இருக்கும் ஊர் முன்பு சதுர்வேதி மங்கலம் என்றும், நால்வேதியூர் என்றும் அழைக்கப்பட்டு பின்னர் மருவி திருநாலூர் என்ற பெயரைப் பெற்றது. நாலூர் மயானத்தைப் போல தமிழ்நாட்டில் மயானம் என்ற பெயரில் உள்ள கோயில்கள்  கச்சி மயானம், கடவூர் மயானம், காழி மயானம் என்பனவாகும். நாலூர் மயானம் ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடைதாகும். (இக்கோயிலின் தென்மேற்கே நாலூர் என்ற வைப்புத்தலம் உள்ளது.) 

கோயிலின் நுழைவாயில்
வாயிலில் நுழைந்ததும் ஏதோ ஒரு வீட்டின் வாசல் வழியாகச் செல்வது போல இருந்தது. வாசலில் இருந்து பார்க்கும்போது கோயில் இருப்பதே தெரியவில்லை. வலது புறம் இக்கோயிலின் தலமரமான பலா மரம் உள்ளது. பின்னர் ஒன்பது படிகளில் ஏறிச்சென்ற பின்னர்தான் கோயிலின் அமைப்பினை முழுமையாகக் காண முடிந்தது. மாடக்கோயிலாக உயர்ந்த தளத்தில் இக்கோயில் இருந்தது. 
உயர்ந்த தளத்தில் உள்ள திருச்சுற்றின் வலப்புறம்
மாடக்கோயில்  என்று கூறுவது யானைகள் மேலே ஏறி வர முடியாத அளவில் கட்டட  அமைப்பைக் கொண்டதாகும். இத்தலத்திற்குச் சென்றதை ஒரு பெரிய வாய்ப்பாகக் காணமுடிந்தது. இதுபோன்ற அமைப்பில் ஒரு கோயிலை இதுவரை பார்த்ததேயில்லை. உயர்ந்த தளத்தில் உள்ள இக்கோயிலின் திருச்சுற்றில் சுற்றி வரும்போது விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோரைக் காணலாம்.
கருவறையின் பின்புறம், விமானத்துடன்
கோயிலின் கருவறை விமானம் கஜபிருஷ்ட அமைப்புடன் உள்ளது. இக்கோயிலின் குடமுழுக்கு 22.8.2005இல் நடைபெற்றதாக கோயிலின் மண்டபத்தில் இருந்த கும்பாபிஷேக அழைப்பிதழில் காணமுடிந்தது.  
உயர்ந்த தளத்தில் உள்ள திருச்சுற்றின் இடது புறத்தில்
(சுற்றி வரும் எங்கள் பேரன் தமிழழகன்)
தலம், மூர்த்தி, தீர்த்தம் என்ற மூன்று நிலைகளிலும் பெருமை பெற்றது திருநாலூர் மயானமாகும். இக்கோயிலின் தீர்த்தம் சந்திர தீர்த்தமாகும். இங்குள்ள மூலவர் சுயம்புவாக உள்ளார். அவர் பலாசவநேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வருகிறார்.  இவர் ஞானப்ரதர், சுயம்புநாதர் என்றும் சிறப்புப் பெயர்களைப் பெற்றுள்ளார். மோட்சமடைய விரும்பிய பிரமன் பூஜித்து முக்தியடைந்ததால் இங்குள்ள மூலவர் பிரம முக்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.  இத்தலம் மகாவிஷ்ணுவும், ஆபஸ்தம்பரிஷியும் பூஜித்த தலமாகும்.  
உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதிக்கு இடப்புறம் உள்ள அம்மன் சன்னதி(சுற்றி வரும் எங்கள் பேரன் தமிழழகன்)
மூலவர் சன்னதியின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள அம்மன் பிரஹன் நாயகி எனப்படும் பெரியநாயகி ஆவார். மூலவருக்கு எதிரில் நந்தியும் பலிபீடமும் உள்ளன.

இக்கோயிலில் சூரிய பகவான் சித்திரை மாதத்தில் மூன்று, நான்கு, ஐந்தாம் தேதிகளில் தன்னுடைய ஒளிக்கதிர்களால் இறைவனை பூஜிக்கும் அரிய காட்சியைக் காண முடியும்.

பல மாடக்கோயில்களைப் பார்த்தபோதிலும் இந்த மாடக்கோயிலானது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. வீட்டிற்குள் செல்வது போலச் சென்று உயர்ந்த தளத்தில் புகழ் பெற்ற கோயிலைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவமாகும். 

Comments

  1. தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நனறி

    பல கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் அழிந்து போவது வேதனையான விடயம்

    ReplyDelete
  2. படங்களை இன்னும் கொஞ்சம் பெருசா போடலாமே! கோவில் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. தற்போது பெரிதாக்கிவிட்டோம். நன்றி.

    ReplyDelete

Post a Comment

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

உதிரமாடன்குடியிருப்பு செம்புக்குத்தி அய்யனார் கோயில்