மனதில் நிற்கும் மைசூர் சுற்றுலா

கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான மைசூருக்கும் அருகிலுள்ள இடங்களுக்கும் அண்மையில் சுற்றுலா சென்றோம். வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களைக்கொண்ட இடங்களையும் பயணத்தின்போது கண்டோம். மைசூரிலும் சுற்றுப்பகுதிகளிலும் பேருந்து நிலையம், தொடர் வண்டி நிலையம் என அனைத்து இடங்களும் நன்கு பராமரிக்கப்படுவதைக் காணமுடிந்தது. ஆட்டோ கட்டணம் மிகவும் குறைவாகவே இருந்தது. மெழுகு அருங்காட்சியகம் மைசூருக்கு அருகிலுள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் உள்ள மெழுகுச்சிலைகள் உண்மையான மனிதர்களைப் போலவே காணப்பட்டன. அமர்ந்த நிலையிலிருந்த மகாத்மா காந்தி எங்களை மிகவும் கவர்ந்துவிட்டார். 200க்கு மேற்பட்ட கர்நாடக மற்றும் மேல்நாட்டு இசைக்கருவிகளைப் பார்த்துப் பரவசமடைந்தோம். சாமுண்டீஸ்வரி கோயில் கோயிலுக்கு முன்பாக நம்மை வரவேற்கும் வகையில் மகிஷாசுரன் வலது கையில் வாளுடனும், இடது கையில் பாம்புடனும் நிற்கிறான். 3486 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில் 18 மகா சக்தி பீடங்களில் ஒன்றாகும். அம்மனை தரிசிக்க மலை மீது செல்வதற்கு கார், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ன. ...