பாஸ்கர் அண்ணன்

எனது பெரியப்பாவின் (திரு. தில்லையப்ப நாடார்-திருமதி. தி. மீனம்மாள் அவர்களின்) இளைய மகன் திரு பாஸ்கர் அவர்கள் 31.8.2025 அன்று காலை சென்னையில் இயற்கை எய்தினார். அந்தச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். குடும்பத்தாருடன் சென்னை சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன். புகைப்படம் நன்றி: பா.சங்கர் முகநூல் பக்கம் பாஸ்கர் அண்ணன், எங்கள் வீட்டில் ஒருவராக வளர்ந்தவர். பழகுவதற்கு இனிமையாகவும், எளிமையாகவும், பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பார். உழைப்பில் நேர்மை, விட்டுக்கொடுத்தல், பொய் கூறாமை ஆகிய நல்ல குணங்களை அவரிடம் நான் கண்டுள்ளேன். பணம் தொடர்பான விஷயத்தில் மிகவும் கவனமாகவும் இருப்பார். மிகச்சிறந்த உழைப்பாளி. உற்றார் உறவினர்கள் மீதும், நண்பர்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருப்பார். அவர், தஞ்சாவூரிலுள்ள தன்னுடைய சித்தாப்பாவின் (என்னுடைய அப்பா) அலுமினியக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து புதுக்கோட்டையில் உள்ள அலுமினிய ரோலிங் மில்லில் சேர்ந்து அங்குப் பணியாற்றினார். சில வருடங்களுக்குப் பிறகு அவருடைய குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது...