பனை உறை தெய்வம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

பனை உறை தெய்வம் எனும் இந்நூலை 25 கட்டுரைகளை மையமாக வைத்து திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா எழுதியிருக்கிறார். பனைமரம் என்றால் எனக்குத் தெரிந்தது நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பனை ஓலைக்கொட்டான், பனை விசிறி, பனை வெல்லம், பனங்கற்கண்டு, பதநீர், ஓலைச்சுவடி, ஆகியவையாகும். இந்நூலின் மூலமாக பல அரிய செய்திகளை அறிந்தேன். மூலவர் திருமேனி, தல மரம், நீர் நிலை ஆகிய மூன்றும் சிவன் கோயில்களின் இன்றியமையா அங்கங்களாகும். இவற்றை மூர்த்தி, விருட்சம், தீர்த்தம் என வட மொழியில் குறிப்பர். கோயில்களை வழிபாட்டுத் தலங்களாக மட்டும் கொள்ளாமல் அவற்றை மனித வாழ்வோடு இயைந்த சமுதாயக் கேந்திரங்களாகவும் போற்றும் நெறி தமிழகத்தில் அண்மைக் காலந்தொட்டு தொடர்ந்து வருவதாகும். சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தின் கீழ் இருந்தவாறு பரமேஸ்வரன் ஞானமுரைத்தது, திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தின்கீழ் இருந்தவாறு ஞானத்தை நவின்றது, திருவெற்றியூரில் சுந்தரரை மகிழ மரத்தின்கீழ் இருந்தவாறு சத்தியம் உரைக்கப் பணித்தது என்ற வகையில் மரங்கள் என்பவை தெய்வத்தோடு தொடர்புடையவையாகும். ஒவ்...