ஞானியார் முனைவர் வீ.ஜெயபால் (1954-2026)
ஞானியார் முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் நேற்று (9.8.2026) இயற்கையெய்திய செய்தியை அறிந்ததும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். முப்பதைந்து வருடங்களுக்கு மேலாக அவர் எங்களுடைய குடும்ப நண்பர். அவர் எழுதியுள்ள "வேலவர் வெற்றி வெண்பா" என்ற நூலின் வெளியீட்டுவிழா தஞ்சாவூரில் நடைபெற இருந்தது. நானும் அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக என் கணவரிடம் கூறினேன். அவரிடம் எத்தனை மணிக்கு வரவேண்டும் என போன் போட்டுக் கேட்கச் சொன்னேன். அவருடைய நம்பரில் அழைத்ததும் அவருடைய மனைவி எடுத்து அவருக்கு முடியவில்லை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள் என அழுதுகொண்டு பேசினார்களாம். நாங்கள் பார்ப்பதற்குக் கிளம்பியபோது நண்பர் ஒருவர் சார் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கூறினார். பிறகு நாங்கள் இருவரும் வீட்டிற்குச் சென்றோம். தெருவாசிகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அங்கு இருந்தனர்.
அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து சைவ சித்தாந்த நண்பர்கள் அனைவரும் முறைப்படி தேவாரப்பாடல்களைப்பாடினார்கள். 10 நாள்களுக்கு முன்புதான் அவருடைய மேற்கண்ட நூல் வெளியீடு தொடர்பாக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். தன் உடலை கவனிப்பதை விட சொற்பொழிவு நடத்துவதில் அதிகம் கவனம் செலுத்துவார். தன் மூன்று மகன்களையும் நல்ல முறையில் படிக்கவைத்து, திருமணம் செய்து, மூவரும் நல்ல முறையில் உள்ளனர்.
எங்கள் இரண்டு மகன்களுக்கும் சார் தான் ஜாதகம் பார்த்து சொன்னார். இருவரும் வீடு வாங்கும் போதும் அவரிடம் ஜாதகம் பார்த்து விட்டுத்தான் வாங்கினார்கள்.
அவர் ஆசிரியராக இருந்த கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளியில்தான் எங்களுடைய இளையமகன் படித்தான். அவரிடமிருந்து போன் வந்தால் மற்றவரிடம் கூறுவதுபோல வணக்கம் அல்லது ஹலோ என்று கூறுவோம். அவர் போனை எப்போது எடுத்தாலும் சிவாயநம என்று கூறிவிட்டுத்தான் பேச ஆரம்பிப்பார். நாங்களும் அவர் கூறுவது போல் சிவாயநம எனக் கூறுவோம். நண்பர்களை கோயில் உலா அழைத்துச்செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். நான் ஒரு போதும் போனதில்லை. 200க்கும் மேற்பட்ட சைவ, வைணவக்கோயில்களுக்கு சாருடன் கணவர் சென்றிருக்கிறார். ஒரு வேனுக்கு ஆட்கள் செல்வார்களாம். வேன் செலவை அனைவரும் பகிர்ந்துகொள்வார்களாம். அதிகப்படியாக செலவினம் வந்தால் அதை சார் தான் ஏற்பாராம். அதை பெரிய சேவையாக நினைத்தார். அதே போல் பூ, மாலை, நெய், சில்லரையாக ரூ.10, ரூ.20 நோட்டுகள் கையில் வைத்திருப்பராம்.
போன வ்ருடம் அவர் பிறந்த நாள் அன்று தஞ்சாவூர், தெற்கு வீதியில் உள்ள கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் சிறப்பாக செய்திருந்தார். இதற்கு முன்பு நான் திருக்கல்யாணம் பார்த்தது இல்லை. அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தேன். ஒரு முறை சார் வீட்டிற்கு வரும் போது 80 கல்யாணம் செய்யு போது அனைவரையும் அழைத்துச் செல்கிறேன் என்றார். சரி சார் என்றோம். கடைசியாக எங்கள் வீட்டிற்கு வந்தபோதுகூட உடம்பை பார்த்துக்கச் சொன்னபோது, எனக்கு ஒன்றும் செய்யாது எனக்கு தொன்னூறு வயது வரை ஆயுசு இருக்கு என்றார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்கள் வீட்டிற்குக் காலையில் 10.00 மணிக்கு வந்தவர் மதியம் 2.00 மணி வரை இப்புத்தகத்தைத் திருத்துவதற்கு வந்தார். 10 நாட்களுக்கு முன்பு வந்தபோது புத்தகம் விரைவில் வந்துவிடும், வெளியீட்டு விழாவிற்கு சொல்கிறேன் வாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்.
அவருடைய புத்தகம், திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் திருக்கரங்களால் தஞ்சாவூர், மேல வீதி, பங்காரு காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் 9.8.2026 அன்று வெளியிடப்படுவதாக இருந்தது. அது வெளியாக வேண்டிய நாளில் அவரை இறைவன் அழைத்துக்கொண்டான்.
அவர் இயற்றிய 100 பாடல்களில் சில பாடல்களைப் பொழிப்புரையுடன் படித்தேன். பாடல்கள் புரியும்வண்ணம் உள்ளன. அவருடைய மூன்றாவது மைந்தரான திரு வீ.ஜெ.வேதராமனின் பொழிப்புரை மிகவும் அருமையாக இருந்தது.
அவர் நம்மைவிட்டுப் பிரிந்தாலும் இந்தப் புத்தகம் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர் மறைந்தாலும் அவரின் சொல்லித்தந்த சைவ சித்தாந்தமும், தேவாரப்பாடல்களும், திருவாசகமும் அவருடைய புகழை எடுத்துரைக்கும். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.


Comments
Post a Comment