கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் கோயில்களில் அன்னாபிஷேகம்
நேற்று (25.10.2026) மாலை அன்று மூர்த்தி அண்ணன், அண்ணி, பொம்மி அக்காவுடன் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குச் சென்றேன். இதற்கு முன்பு பல முறை சென்றிருக்கிறேன். இப்போது அன்னாபிஷேகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் மிக முக்கியமான விழா அன்னாபிஷேகம் ஆகும். சுத்தமான பச்சரிசியைக் கொண்டு குலைவாக வடித்து, அதை நன்கு ஆற வைத்து பிறகு அந்த அன்னத்தை கொண்டு சிவபெருமானின் லிங்கத்திருமேனி முழுவதையும் போர்த்தி விடுவார்கள். அதோடு காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஐப்பசி மாத பௌர்ணமியில் நடைபெறும் இந்த அபிஷேகத்திற்கு மகா அன்னாபிஷேகம் என்று பெயர். அன்னாபிஷேகத்தின்போது சிவபெருமானுக்கு சாத்தப்படும் ஒவ்வொரு அன்னத்திலும் ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால் ஒரு அன்னாபிஷகம் தரிசனம் கண்டால் கோடி சிவலிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த மகா புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்.
லிங்கத் திருமேனி முழுவதும் அன்னத்தைச் சாத்தியிருந்தார்கள் பார்ப்பதற்கு கம்பீரமாகவும், அழகாவும் இருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தார்கள். காவல் துறையினர் வரிசையில் செல்வதற்கு ஆங்காங்கே நின்று கொண்டு வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். பௌர்ணமி என்பதால் அன்று கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் பூஜை செய்து செல்ல ஆயத்தமானர்கள். அதையும், அன்னாபிஷேகத்தையும் பார்த்த மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பினோம்.
கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள கீழச்செங்கல்மேடு என்னுமிடத்தில் வெற்றிச்சின்னங்களாக ராஜேந்திரசோழனால் கொண்டுவரப்பட்ட பல சிலைகள் ஒரு காளியம்மன் கோயிலில் இருப்பதாகவும், முடிந்தால் அதைப் பார்க்கவும் என் கணவர் கூறியிருந்தார். அக்கோயிலுக்குச் சென்றோம்.
பாதை மிகக் குறுகியதாக இருந்ததால் காரில் மெதுவாகத்தான் போகமுடிந்தது. கோயிலில் திருப்பணி வேலை நடைபெற்று வருவதால் முழுமையாகப் பார்க்கமுடியவில்லை, பின்னர் அங்கிருந்து தஞ்சாவூருக்குப் புறப்பட்டோம்.
நேராக தஞ்சாவூர் பெரியகோயிலுக்குச் சென்றோம். அங்கும் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பெருவுடையார் எனும் பிரகதீஸ்வரருக்கான அன்னாபிஷேகத்தைக் கண்டோம். சிவன் முகம் தனியாகத் தெரியும்படி அன்னத்திலேயே அலங்காரம் செய்திருந்தார்கள்.
ஒரே நாளில் இரு கோயில்களிலும் அன்னாபிஷேகம் மனதுக்கு நிறைவாகவும் காணக்கிடைக்காத காட்சியாகவும் இருந்தது. அழைத்துச் சென்ற அண்ணன், அண்ணிக்கும், உடன் வந்த அக்காவுக்கும் நன்றி




Comments
Post a Comment