இங்க் பாட்டில் நினைவுகள்
'தினமணி' நாளிதழில் சில நாள்களுக்கு முன்பு வெளியான (முனைவர் பா.சக்திவேல், "மனநிலை மாற வேண்டும்", 12.5.2026) கட்டுரையைப் படித்தபோது எனக்கு 1975-76இன் பள்ளிக்கால நினைவுகள் மனதிற்கு வந்தன.
நான் பள்ளியில் படித்தபோது பேனாவில் எழுதியதும், இங்க் வாங்கியதும் மறக்க முடியாத அனுபவங்கள் ஆகும். வீட்டின் அருகிலேயே இங்க் கடை வைத்திருப்பவரின் வீடு இருந்ததால் நானும், சகோதரிகளும் அங்கு தான் இங்க் வாங்க சொல்வோம். அவருடைய வீட்டை இங்க்காரர் வீடு எனக் கூறுவோம். எங்கள் மூர்த்தி அண்ணனின் நண்பரான ராமநாதன் அண்ணனும், அவரின் இரு தங்கைகளான பரமேஸ்வரி அக்காவும், பத்மா அக்காவும் அங்கு இருப்பார்கள். அவர்கள் யாரிடமாவது இங்க் பாட்டிலைக் கொடுத்து 25 பைசாவுக்குக் கேட்போம். பாட்டிலில் முழுவதுமாக இங்க் நிரப்பித் தருவார்கள்.
சிகப்பு இங்க் ஐந்து பைசா, பத்து பைசா விலை கூடுதலாக இருக்கும். நாங்கள் கருப்பு, ஊதா, சிகப்பு என மூன்று கலரில் வாங்குவோம். நோட்டில் எழுதும்போது கோடு போடுவதற்கும், தலைப்புகளைத் தெளிவாக எடுத்துகாட்டுவதற்கும் வெவ்வேறு கலரைப் பயன்படுத்துவோம். சில்லரையில் நாங்கள் பாட்டில் கொடுத்து வாங்கியபோதிலும், இங்க் என்றால் எங்களுக்கு பிரில் இங்க் பாட்டில்தான் தான் நினைவிற்கு வரும்.
கடையில் மூன்று பைசாவுக்கு வாங்கினால் பாதி பேனா அளவிற்குத் தான் நிரப்பித் தருவார்கள். ஐந்து பைசாவுக்கு வாங்கினால் முமுமையாக இருக்கும். வீட்டில் இங்க் இருப்பதால் நான் எப்போதாவது மூன்று பைசாவுக்குத்தான் போட்டுக்கொள்வேன். வகுப்பறையில் நண்பர்களும், தோழிகளும் கேட்கும்போது சொட்டுக் கணக்கில் அவர்களுக்குக் கொடுப்பேன்.
இங்க் மாத்திரை ஒரு முறை வாங்கி அதை நீரில் கலக்கி பாட்டிலில் ஊற்றிப் பயன்படுத்தினோம். அந்த மாத்திரையைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இங்க்கின் காரணமாக பேனா அடைப்பு ஏற்பட ஆரம்பித்தது. பின்னர் அதை வாங்குவதில்லை.
அப்போது வருடத்திற்கு ஒரு முறைதான் பேனா, பிளாஸ்டிக் கூடை அல்லது ஒயர் கூடை, துணிப்பை, ஜாமிண்ட்ரி பாக்ஸ், ஸ்கேல் வாங்கித்தருவார்கள். நைலான் ரப்பர் வெவ்வேறு கலரில் கிடைக்கும். அது வாசமாகவும் அழகாகவும் இருக்கும். அதை வாங்குவதற்கு 50 பைசாவுக்கோ, ஒரு ரூபாய்க்கோ வாங்குவோம். சரியாக நினைவில்லை.
தீனி வாங்கித் தின்பதற்காக அம்மா தரும் காசில் மூன்று பைசாவோ ஐந்து பைசாவோ மிச்சப்படுத்தி அந்த ரப்பரை வாங்குவேன். நிப் உடைந்தால் மாற்றுவோம். சில்வர் கலர் நிப் 25 பைசாவுக்கும், கோல்டு கலர் நிப் 30 அல்லது 35 பைசாவுக்கும் கிடைக்கும்.
இப்போதோ யூஸ் அன் த்ரோ என்று பேனாக்கள் வந்துவிட்டன. மாணவர்கள் தொடங்கி அனைவரும் இப்போது ஜெல் பேனாவும், ரீபில் பேனாவும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். மிகச் சிலரே இங்க் பேனாவை இப்போது பயன்படுத்துகிறார்கள். பள்ளிக்காலத்தில் இங்க் பேனாவைப் பயன்படுத்திய நான்கூட இப்போது ரீபிலையே பயன்படுத்துகிறேன். இருந்தாலும் இங்க் பேனாவினால் எழுதும்போது வரும் அழகு இதில் வரவில்லை என்பதே என் எண்ணம்.
தற்போது எட்டாவது வகுப்பிற்குச் செல்லவுள்ள எங்கள் மூத்த பேரன் பா.தமிழழகன், இங்க் பேனாவால் எழுதுவதுதான் தனக்குப் பிடித்திருக்கிறது என்றும், தேர்வுகளுக்கும் அதையே பயன்படுத்துவதாகவும் கூறுகிறான்.
புகைப்படம் நன்றி: மருமகள் திருமதி ஞா. அமுதா

Comments
Post a Comment