நான் பார்த்த கருடசேவை

"கருட சேவை தரிசனம் மங்களகரமானது. மன தைரியம், ஆயுள் வழங்கிடச்செய்வது, சர்ப்ப தோஷங்களை போக்கிட வல்லது. மனப்பயம், நடுக்கம் போன்றவற்றை நீக்கிடும் சக்தி படைத்தது. இவ்வருடம் 92 ஆவது ஆண்டாகும். முதல்முறையாக இவ்வருடத்திலிருந்து 27 கருடசேவை புறப்பாடு நடைபெறவிருப்பதும் கூடுதல் சிறப்பு. மிக கோலாகலமாக நடத்தபெறும் இந்தக் கருடசேவை  வைபவத்தில் தஞ்சையைச் சுற்றியுள்ள 27 பெருமாள் கோயில்கள் பங்கேற்கின்றன. ஜூன் 6ஆம் தேதி  சனிக்கிழமை  அன்று ஹம்ச வாகனத்தில் எழுந்தருளும் திருமங்கையாழவார் முன்னே வர, அவரைத் தொடர்ந்து 27 கோயில் பெருமாள்களும் கருட சேவை காட்சி அளித்தபடி தஞ்சையின் நான்கு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா காண்பார்கள். இந்நிகழ்வை தரிசனம் செய்வது அஸ்வமேத யாக செய்வதற்குச் சமமான பலன் தரவல்லது என்பது பெரியோர் வாக்கு" என்று நாளிதழில் வெளியான கட்டுரை  (தினமணி, வெள்ளிமணி, சுஜாதாமாலி, 5.6.2026) மூலமாக அறிந்தேன்.

கட்டுரையைப் படித்ததும் கருட சேவையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. 6.6.2026இல் நடைபெற்ற கருட சேவையைக் காணச் சென்றேன். 

முதன் முதலில் 15 வருடங்களுக்கு முன்பு இளைய  மகன் சிவகுருவுடனும், தங்கை செல்வமணியுடனும் சென்றேன். இரண்டாம் முறையாக போன வருடம் பொன்மதி, நவமணி அக்காக்களுடனும், ராஜலெட்சுமி அண்ணியுடனும் சென்றேன். 


மூன்றாம் முறையாக இந்த வருடம் இளைய மகன், மருமகளுடன் சென்றேன். மூல ஆஞ்சநேயரைத் தரிசித்துவிட்டு அங்கே மூலையில் ஒரு இடத்தில் நின்றுகொண்டு 27 கருட சேவையில் 24ஐ பார்த்தோம். 






பூ அலங்காரத்துடன், ஒவ்வொரு கருடனும் வெவ்வேறு அலங்காரத்தில் பார்க்க மிகவும் அழகாக இருந்தது. பெரும்பாலும் மாட்டு வண்டியில் உலா வந்ததைக் காணமுடிந்தது. ஒன்றிரண்டை ஒருவர் கையில் வண்டியில் இழுத்துச்சென்றார். வழியில் நீர் மோர், பொங்கல், புளியோதரை, பானகரம் போன்றவற்றை வழங்கினார்கள்.  வெயிலின் தாக்கம் குறைவதற்காக சாலையிலும், வண்டியை ஓட்டி வந்த மாடுகள் மீதும் நீரைத் தெளித்துக்கொண்டே சென்றதைக் காணமுடிந்தது. 

இந்தக் கருட சேவை நான் கும்பகோணத்தில் பார்த்த கருட சேவையை நினைவுபடுத்தியது. அங்கு சிறிது வித்தியாசமாக ஒரே இடத்தில் பெருமாள்களைக் காணமுடியும். 

படம் நன்றி: இந்து தமிழ் திசை

கும்பகோணம், பெரிய கடைத்தெருவில் பந்தல் போட்டு அதில் 12  வைணவ கோவில்களிலிருந்து 12 கருட வாகனங்களின்  உற்சவர் பெருமாள் புறப்பட்டு ஒரே இடத்தில் எழுந்தருளி பொது மக்களுக்கு  அருள் பாலிப்பது வழக்கம். கருடசேவை அலங்காரத்துடன் வரிசையாக நிற்பார்கள். ஒரு முறை மாமியாருடன் சென்று பார்த்திருக்கிறேன்.  

கிட்டத்தட்ட இவ்விழாக்களைப் போலவே நடைபெறுவது நாச்சியார் கோயிலில் நடைபெறுகின்ற கல்கருடன் சேவை. ஆனால் அது சற்றே வித்தியாசமாக இருக்கும்.  மூலவருக்கு அருகே தனி சன்னதியில் கல் கருடனைப் பார்க்கலாம். ஆண்டுக்கு இரண்டு முறை  இங்கு கல்கருட சேவை நடைபெறும். மார்கழிப் பெருந்திருவிழாவில் நான்காம் திருநாளும், பங்குனிப் பெருந்திருவிழாவில் நான்காம் திருநாளுகும் ஸ்ரீநிவாஸப்பெருமாளைச் சுமந்து கல் கருடன் வருவார். அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பெருமாளை வணங்கினால் கஷ்டங்கள் தீரும், கவலைகள் போகும் என்றும், கல் கருட பகவானைச் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும் கூறுவர்.  

படம் நன்றி: ஈடிவிபாரத்

கல் கருட சேவையை மிக அருகில் இருந்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது. விஜியம்மா என்று நாங்கள் கூறும் எதிர் வீட்டுக்காரம்மா திருமதி சரஸ்வதி அவர்களுடைய இளைய மருமகள் வசந்தாவின் ஊர் நாச்சியார்கோயில். விஜியம்மாவுடன் 2011 ஆம் வருடம்  பங்குனி மாதத்தில் நானும், இளைய மகன் சிவகுருவும் நாச்சியார்கோயிலுக்குச் சென்றோம். வசந்தா அப்பா எங்களுக்காக  பாஸ் வாங்கித் தந்தார். அதில் இருவர் தான் போகமுடியும். எங்கள் இளைய மகனுக்கு அன்று பிறந்த நாள். எனவே அந்த பாஸை வைத்துக்கொண்டு  இளைய மகனையும்,  விஜியம்மாவையும் உள்ளே போகச் சொல்லிவிட்டு நானும் வசந்தாவின் அம்மாவும் முன் மண்டபத்தில் படியருகில் அமர்ந்திருந்தோம். மூலவர் இருக்கும் சன்னதிக்கு அருகில் இருவரும் செள்றார்கள்.  கல் கருடனை முதலில் நால்வரும் தூக்கி வர அடுத்த நிலையில் எட்டு பேரும், தொடர்ந்து மேலும் பலரும் கருடனை தூக்கி வருவதைக் கண்டோம். அதைப்பார்க்க அதிசயமாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. கல்கருடன் அலங்காரமும் பார்ப்பதற்கே காணக் கண்கோடி வேண்டும்.  வீதி உலா சென்று வர இரவு  ஆகிவிடும் என்றார்கள். நாங்கள் கல் கருடனை வெளியில் போகும் வரை பார்த்துவிட்டு,  வசந்தா அம்மாவிடம் விடைபெற்றுக்கொண்டு தஞ்சாவூருக்குத் திரும்பினோம். கல் கருட சேவை என்றால் வசந்தாவின் பெற்றோர் நினைவு வந்துவிடும். விஜியம்மாவின் புண்ணியத்தில் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்வேன். 

இவ்வாறாக மூன்று வகையான கருட சேவையைப் பார்க்க பெருமாளின் அருள் கிடைத்ததற்குப் பெருமைப்படுகிறேன்.    

Comments

அதிக வாசிப்பு

பழுவூர் உலா : மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

இங்க் பாட்டில் நினைவுகள்

செட்டியாபத்து ஐந்துவீட்டுசுவாமி கோயில்