எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் : விந்தன்

1971இல் தினமணி கதிரில் நடிகவேள் எம்.ஆர்.இராதாவைப் பேட்டிக் கண்டு  அமரர் விந்தனால்  எழுதப்பட்ட தொடரின் நூல் வடிவம். கேள்விக்குப் பதில் சொல்லும் வகையில் இந்நூல் உள்ளது. அவரிடம் கேட்கும்  கேள்விக்கு  பதில்கள்   மனதில் தோன்றியதை கூறியிருக்கிறார். படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கான பதில்களும் எனக்குப் பிடித்திருந்தது. அதில் சில....

".....கலை உலகத்துக்கு நீங்கள் வந்தது எப்படி?.......கலை உலகத்துக்கு நானாகவும் போகவில்லை; அதுவாகவும் என்னைத் தேடி வரவில்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமுமே என்னையும் கலையையும் ஒன்று சேர்த்தது.......வீட்டிலேயே சோறில்லை டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அப்போ அங்கேதான்  நல்ல சோறு கிடைக்கும்."  (பக்கம் 11) 

"உண்மையான கலைஞன் எப்படிப்பட்டவனாக  இருக்கவேண்டும்?......... ஆடியன்ஸக்கு லஞ்சம் கொடுப்பவனாய் இருக்கக் கூடாது: அறிவைக் கொடுப்பவனாயிருக்கவேண்டும்....விளம்பரம் கலைஞனைத் தேடி வந்தது அந்தக் காலம் கலைஞன் விளம்பரத்தை தேடி ஒடறது இந்தக் காலம்." (ப.12)   

"எலெக்ட்ரிஷினாகவா? அதில் என்ன வேலை தெரியும் உங்களுக்கு?.....எல்லா வேலைகளும் தெரியும். ஒரு சமயம் சேஷசாயி பிரதர்ஸாரே என் வேலையைக் கண்டு அசைந்து போயிருக்கிறார்கள்." (ப.21)

"இத்தனை துடுக்குத்தனம் இருந்தும் அய்யர் எப்படி உங்களை வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தார், சும்மாவா?..... ஆக்டர், எலெக்ட்ரிஷன், மெக்கானிக், டிரைவர் இத்தனை வேலைகளுக்கும் சாப்பாடு போட்டு மாசம் அஞ்சி ரூபாதானே சம்பளம்? இந்த சம்பளத்துக்கு என்னை விட்டா சாந்த சொரூபியான மகாத்மாவா வேலைக்கு வருவாருன்னு அவர் நெனச்சிருக்கலாம்." (ப.32)

"நீங்களும் தருமம் கிருமம் செய்வதுண்டா, என்ன?.......ஏதோ என்னாலே முடிஞ்ச வரையிலே செஞ்சிக்கிட்டுத் தான் இருக்கேன். ஆனா, உங்களைப் போலிருக்கும் பேப்பர்காரர்களையெல்லாம் கூட்டி வைச்சிக்கிட்டு நான் எதையும் செய்யறதில்லே. நான் செய்யற தருமம் எனக்கும் என்னாலே உதவப்படுறவங்களுக்கும் மட்டும் தெரிஞ்சாப்போதும்னு நினைக்கிறேன்."  (ப.142)

"பிற மொழி படிப்பது பிறரைத் திட்டுவதற்குத்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, என்ன?...........அப்படி நான் நினைக்கலே: திட்டுறதிலேகூட தமிழை மிஞ்ச இன்னொரு மொழி இல்லாதப்போ, அதைப் படிப்பானேன்னு நினைச்சித்தான் விட்டேன் ." (ப.143) 

படத்தில் வரும் வசனம், அதில் அவர் சொல்லும் விதம், நடிப்பது,  மறக்கமுடியாத படம் என்றால் ரத்தக்கண்ணீரே. நல்ல இடத்து சம்பந்தம், இருவர் உள்ளம், பார் மகளேபார், பாலும் பழமும், படித்தால் மட்டும் போதுமா போன்ற அவருடைய படங்களை நான் பார்த்துள்ளேன். இப்படியாக பல படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். 

நூலைப் பற்றிய குறிப்பு : 
எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள், விந்தன், பாரதி புத்தகாலயம், சென்னை, முதல் பதிப்பு, செப்டம்பர் 2011, ரூ.70

Comments

அதிக வாசிப்பு

பாஸ்கர் அண்ணன்

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

பாவை விளக்கு : அகிலன்