பாவை விளக்கு : அகிலன்
அகிலன் எழுதிய பாவை விளக்கு நூலினைப் படித்தேன். அவர் நான்கு பெண்களை மையமாக வைத்து இந்நாவலை எமுதியிருக்கிறார்.
கதையின் நாயகன் தணிகாசலம். நாயகன்மீது ஆசைப்படும் வயதில் மூத்தவளான தேவகி, நாயகன் ஆசைப்படும் நாட்டியக்கலைஞர் செங்கமலம், நாயகனுக்கு மனைவியாகும் அத்தை மகள் கௌரி, அவனுடைய எழுத்துக்குத் துணை நிற்கும் உமா ஆகிய நான்கு பெண் பாத்திரங்கள். இந்நால்வரையும் நூலசிரியர் குறைவில்லாமல் வடிவமைத்திருப்பார். நிறைவாக இரண்டாவது மனைவியாக, உமாவை திருமணம் செய்துகொள்வார் கதாநாயகன்.
படிப்பதற்கு எளிமையாகவும், வாக்கிய அமைப்புகள் புரியும்படியாகவும் உள்ளன. இது, திரு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து அதே பெயரில் திரைப்படமாக வெளியானது. நூலைப் படித்து முடித்ததும் தொலைக்காட்சியில் திரைப்படத்தைப் பார்த்தது நினைவிற்கு வந்தது. நூலின் சில பகுதிகள் என் மனதில் பதிந்தன. அவற்றைக் காண்போம்.
"தூய வாழ்க்கை என்றால் பெண்களின் நினைவில்லாத வாழ்க்கை
"பணம் வாழ்க்கையில் மிகமிக முக்கியமான சாதனந்தான்......பணமில்லாத வாழ்க்கை எவ்வளவு கேவலமான வாழ்க்கை..." (பக்கம்.77)
"என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த நல்ல காரியங்கள் உனக்கு வழிகாட்டியாகவும், கெட்ட காரியங்கள் எச்சரிக்கையாகவும் இருக்கட்டும். எச்சரிக்கை.!" (ப.158)
"குற்றம் செய்திருந்து தண்டனை கிடைத்தால் பொறுத்துக்கொள்ளலாம், குற்றம் செய்யாததற்கு தண்டனை கொடுத்தால்?....." (ப.164)
"...இப்போது நடந்துகொண்டிருக்கிறதே இரண்டாவது உலக மகாயுத்தம். இதன் செல்லப்பிள்ளைகளே கள்ள வியாபாரமும் லஞ்சமும். உலகத்தில் போர் மூண்டால் மனிதன் மட்டுமா சாகிறான்? ஓழுக்கமும் கூடவே செத்துப் போய்விடுகிறது...." (ப.172)
"உலகம் மிகச்சிறியது, வட்ட வடிவமானது, சந்தித்த மனிதர்களையே திரும்பத் திரும்பச் சந்திக்க முடியும்....." (ப.190)
"எதிர்பார்த்த காரியங்கள் நடப்பதில்லை எதிர்பாராத காரியங்களெல்லாம் நடைபெறுகின்றன.,,," (ப.205)
"கதை எழுதுகிறவர்களைக் கடவுள் என்று நினைக்காதே, அவர்கள் சுத்த சோம்பேறிகள்.. வயல் வரப்பில் போய் உடம்பை வளைத்து வேலை செய்யப் பயந்துக்கொண்டு பேனா பிடித்துக் காகிதத்தில் உழுகிறார்கள்...." (ப.274)
"இங்கே இலக்கியமும் வளராது, பண்பாடும் பாழாகும். படிப்பவர்களுக்குப் பிடித்தமானதை எமுதுவது எமுத்தல்ல, மக்களுக்கு பிடிக்கவேண்டியதை எமுதுவதுதான் எழுத்து. அதனாலேயே எமுத்தாளனை உலகம் மதிக்கிறது..." (ப.327)
"மனிதர்கள் கணத்துக்கு கணம் இறந்துபோய் மறுபிறவி எடுக்கிறார்கள்..." (ப.369)
"மனிதனை மனிதன் ஏமாற்றி வாழ்வது எளிது. மனிதனை மனிதன் ஏற்றி வாழ்வது கடினம். தன்னுடைய பாதை கடினமான பாதை என்று தெரிந்தும்கூடத் தணிகாசலம் மனிதர்களை ஏற்றி வாழவே விரும்பினான்..." (ப.381)
"வெளி உலகத்தில் ஆண்கள் தங்கள் வலிமையால் நடிக்கிறார்கள், வீட்டில் பெண்கள் அவர்கள் வேஷத்தைக் கலைக்கிறார்கள், ஆண்களது பலவீனத்தின் சுமைதாங்கிகள் பெண்கள். ஆக்கும் சக்தியுள்ள பெண்கள் ஆண்களுக்குப் புத்துயிர் தருகிறார்கள்,...." (ப.390)
"விதி என்று ஒன்று இருந்து அது மனிதன் எங்கு போனாலும் அவனைத் தொடர்ந்துகொண்டே வருகிறது போலும்..." (ப.392)
"சிலருக்குப் பிறர் விவகாரங்களில் தலையிடுவது தொழில், இன்னும் சிலருக்குப் பொமுதுபோக்கு, இன்னும் சிலருக்கு விளையாட்டு...." (ப.408)
"பெண்களுக்கு குடும்ப வாழ்வில் பற்றுதல், குழந்தைக்குட்டிகளிடம் அன்பு, சமையற்கலையின் பக்குவம், வரும் விருந்து பேணுதல் முதலிய பண்புகள் இருக்க வேண்டுமென நினைக்கிறவன் நான்...." (ப.413)
"நிழலின் அருமை வெயிலில், அன்பின் அருமை பிரிவில், உல்லாசத்தின் அருமை உழைப்பில் தெரியும்...." (ப.424)
"கெடுதலை அறிந்து செய்தாலும் பலன் ஒன்றுதான். அறியாமல் செய்தாலும் பலன் ஒன்றுதான்...." (ப.526)
இந்நூலைப் படித்தபோது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தருகின்ற திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தரின் பல திரைப்படங்கள் நினைவிற்கு வந்தன.
Comments
Post a Comment