மரப்பாச்சி பொம்மைகள்

அண்மையில் தினமணி நாளிதழில் வெளியான (வி.என்.ராகவன், மீட்டெடுக்கப்படும் மரப்பாச்சி பொம்மைகள், தினமணி, கொண்டாட்டம், 23 பிப்ரவரி 2025)  கட்டுரையைப் படித்ததும் என் சிறு வயது நினைவுகள் மனதிற்கு வந்தன.


இந்தப் பொம்மைகள் அனைவரின் வீட்டிலேயும் அப்போது இருக்கும். அன்று பெரியவர்கள் இந்த பொம்மைகளைக் கொண்டு செய்த கைவைத்தியத்தை இன்றும் சில வீடுகளில் கடைபிடிக்கிறார்கள். குழந்தைகளுக்குச் சளியோ, காய்ச்சலோ வரும்போது இந்தப் பொம்மையை வைத்து பத்து போடுவதற்கு எங்கள் அப்பாயி, எங்கள் அம்மாவுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். 

பின்னர் எங்களுடைய பெரியக்கா, இந்த முறையைப் பயன்படுத்தியதோடு, இந்தப் பத்தினைத் தாய்ப்பாலிலும் கலந்து போடலாம் எனக் கூறியிருக்கிறார்கள். 

என் மாமியார் அந்தக்கலவையில் கொஞ்சம் மஞ்சள் தூள், சாம்பிராணி, ஊதுபத்தித்தூள் ஆகியவற்றை ஒரு கரண்டியில் போட்டு நல்ல விளக்கில் சூடேற்றி, அதைக் குழந்தைகளின் உச்சந்தலை, நெற்றி, மார்பில், உள்ளங்கால்களில் தேய்த்துவிடுவதைப் பார்த்துள்ளேன். எனக்கு என் மாமியார் இந்தக் கைவைத்தியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள். அவர்களைப் பின்பற்றி நான் என் மகன்களுக்கும், பேரன்களுக்கும் மரப்பாச்சிப் பொம்மையின் அடிப்பாகத்தைத் தேய்த்து அந்தப் பத்தினைப் போட்டுள்ளேன். இவ்வாறாகப் பத்து போட்டபின்னர் குழந்தைகள் நன்றாகத் தூங்கும். தூங்கி எழுந்தவுடன் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். என் மாமியார் கொடுத்த இரு மரப்பாச்சிப் பொம்மைகளை இன்னும் வைத்திருக்கிறேன். 

குழந்தைகள், மரப்பாட்சிப்பொம்மைகளுக்குச் சேலை கட்டி, பொட்டும், பூவும் வைத்து விளையாடுவதை நான் பார்த்துள்ளேன். இன்று அப்படி விளையாடுவதைப் பார்க்க முடிவதில்லை. பழமைப்பொருட்களுக்கு என்றுமே சிறப்பும், மதிப்பும் உண்டு. மரம் என்று சாதாரணமாக நினைக்காமல் மரப்பாச்சிப் பொம்மையில் உள்ள மருத்துவக் குணத்தை நம்மால் உணர முடிகிறது.  

ஆல மரம், வேப்ப மரம், அரச மரம், புங்கை மரம் என்று ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. கருங்காலி, தேக்கு, செம்மரம், ஊசியிலை மரம் போன்ற மருத்துவ குணங்களைக் கொண்ட மரங்களை வெட்டித் தயாரிக்கப்படுவதால் மரப்பாச்சிப்பொம்மை மருத்துவ குணம் கொண்டுள்ளது.  

கும்பகோணத்தில் மாமியார் வீட்டில் நவராத்திரியின்போது கொலுப்படியில் மற்ற கொலுப்பொம்மைகளுடன் மரப்பாச்சிப்பொம்மைகளும் இருக்கும்.  



Comments

அதிக வாசிப்பு

அன்பளிப்பு : சீர்வரிசை சாமான்கள்

திருநாலூர் மயானம்