சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை : பா.தீனதயாளன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,  அவருடைய  திரைப்படங்கள், இயக்குனர்களைப் பற்றி 1952 முதல் 1999 வரை உள்ளவற்றை ஆசிரியர் பா. தீனதயாளன் இந்நூலில்  அழகாகக் கூறியிருக்கிறார். அதிலிருந்து எனக்குப் பிடித்த சிலவற்றைப் பகிர்கிறேன்.  

"முதன் முதலாக இசைத்தட்டாக தமிழில் வெளிவந்த முதல் திரைப்பட வசனங்கள் 'பராசக்தி' பட வசனங்களே. 1952ல் திரைக்கு வந்து அறிமுகமாகி முப்பது ஆண்டுகள் முடிந்த பின்னரும், 1982லும் சிவாஜி கணேசன்தான் மிக அதிக படத்தில் நடித்த ஒரே கதாநாயகன். 82ல் பதிமூன்று படங்களில் நடித்ததில் இரண்டு வெள்ளி விழாப்படங்கள்.  அவரது மகன் பிரபு அறிமுகமான ஆண்டும் அது தான்." (பக்கங்கள் 9, 10) 

"என்னை விட சிறந்த  நடிகர் சிவாஜி கணேசன் என்று சேலத்தில் நடைபெற்ற 'நம் நாடு' என்ற தனது படத்தின் நூறாவது நாள் விழாவில் எம்,ஜி. ஆர். பாராட்டினார்." (பக்கம் 11) 

"பிற கலைஞர்களுக்கு சிவாஜி கணேசன் பலமாக இருந்திருக்கிறார். (பக்கம் 12)  

"வீட்டின் வறுமையைப் போக்க சம்பாதிக்கும் ஆசையும் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்கும் ஆசையும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பது போல் கணேசனுக்கு அரும்பின." (பக்கம் 14)  

"சேலம் ஒரிஜினல் தியேட்டரில் எம்.ஆர்.ராதா, கணேசன் நடித்த 'இழந்த காதல்' ஓர் ஆண்டைக் கடந்தும் வெற்றிக்கரமாக நடைபெற்றது." (பக்கம் 17)  

"என்னைப் பொறுத்தவரை வில்லனா, ஹரோவா என்பது முக்கியமே அல்ல, நான் நடிகனா என்பதுதான்  முக்கியம்". (பக்கம் 36) 

"சூப்பர் வசனங்களுக்காவே புகழ்ப்பெற்ற கணேசன், மிக அதிகமான ஹிட் பாடல்களுக்கு வாயசைத்துப் பாடிய முதல் படம் என்கிற பெருமையைத்  'தூக்குத்தூக்கி' பெற்றது." (பக்கம் 37)  

"எந்த ரோலாக இருந்தாலும் அதற்கேற்ப முகத்தை, உணர்ச்சிகளை உடனே  மாற்றிக் கொள்ளக்கூடிய அபூர்வக் கலைஞர் சிவாஜி கணேசன்." (பக்கம் 38)  

"தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகமான படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சிவாஜி கணேசன், மிக அதிகமான கவுரவ வேடங்களில் நடித்தவரும் அவர் தான். தன்னுடைய நடிப்புத்தொழிலில் இமேஜ் வைத்துக் கொள்ளாத ஒரே நடிகர் அவர் தான்." (பக்கம் 41)  

"சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பரான மோகன் ஆர்ட்ஸ் மோகனும் நடிகர் எம்.ஆர்.சந்தானமும் இணைந்து ராஜாமணி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த படம் தான் 'பாசமலர்'. கே.பி. கொட்டாரக்கரா என்கிற மலையாள எழுத்தாளரின் கதைதான் இப்படம்." (பக்கம் 46)

"எவ்வளவோ தெய்வங்கள் இருக்கலாம். ஆனால், குலதெய்வத்துக்கான முக்கியத்துவமே தனி. அந்த வகையில் நடிகர்களுக்கெல்லாம் சிவாஜிகணேசன் தான் குலதெய்வம் என்கிறார் வாலி." (பக்கம் 79)

"சிவாஜிகணேசன்,  இருபத்தியோரு  படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து சாதனை புரிந்திருக்கிறார்." (பக்கம் 93)

"1952 முதல் 1988 வரை 36 ஆண்டுகள் தொடர்ந்து கிட்டத்தட்ட 275 படங்களில் கதாநாயகனாக சிவாஜிகணேசன் நடித்தார். அதற்குப் பிறகு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு 1999 வரை மிகக் குறைந்த அளவில் மட்டுமே (பதிமூன்று படங்கள்) நடித்தார்." (பக்கம் 102)

"தமிழ்நாட்டு நடிகர்களில் ஒருவரை அமெரிக்கா கவுரவித்ததைத் தென்னகத்து நடிகர்கள் பெருமகிழ்ச்சியோடு கொண்டாடினர்." (பக்கம் 113)

"1995ல் கணேசன் மீண்டும் அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அமெரிக்க சென்றார். இம்முறை மூன்று நகரங்களுக்கு சிவாஜி கணேசன் ஒரு நாள் மேயராக கவிரவிக்கப்பட்டார்." (பக்கம் 114)

"கணேசன் வாழ்ந்து வந்த அன்னை இல்லம் இருக்கும் போக் ரோட்டை செவாலியே சிவாஜி கணேசன் சாலையாக மாற்ற உத்தரவிட்டார் ஜெயலலிதா. சிவாஜிகணேசன் மறைந்த போது, தமிழக அரசு மரியாதையுடன் அவருக்கு 42 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது." (பக்கம் 125)

"நான் கஷ்டபட்டு சம்பாதிக்கிறோம், மற்றவர்கள் செலவு செய்து அழிக்ககிறார்களே என்று நினைக்கத் தொடங்கிவிட்டால், அப்போதே அந்தக் குடும்பம் பிரிந்துவிடும்....நடிப்பு, நடிப்பு என நான் ஓயாது ஓடிக்கொண்டிருந்த காலத்தில் எனது மனைவி கமலாவும், எனது அண்ணன் தங்கவேலுவும், தம்பி சண்முகமும்தான் குழந்தைகளிடம் அன்புகாட்டி பல பொறுப்புகளை ஏற்று குடும்பத்தை நடத்தினார்கள் என்கிறார் சிவாஜி." (பக்கம் 140)

"தன் வாழ்நாள் எல்லாம் சாதனை புரிவதையே வாடிக்கையாகக் கொண்ட  சிவாஜிகணேசன் , தன் மரணத்திலும் சாதனையே புரிந்தார். அரசாங்கத்தில் எந்த பதவியிலும் பொறுப்பிலும் இல்லாத, தந்தைபெரியார் காலமானபோது தான் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அதற்குப் பிறகு, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழித்து சிவாஜிகணேசனின் இறுதிச் சடங்கு தான் அரசு மரியாதையுடன் நடைபெற்றது." (பக்கம் 153)

சிவாஜி படம் என்றால் நான் விரும்பிப் பார்ப்பேன். அவர் நடிப்பின் சிகரம். அவரின் நடை, உடை, பாவனை, தமிழின் உச்சரிப்பு, ஆங்கில வார்த்தைகளை  ஸ்டைலாகப் பேசும் விதம், எந்த வேடம் போட்டாலும் அதே பாத்திரமாக மாறிவிடும் பாணி போன்றவை எனக்குப் பிடிக்கும். இந்நூல் மூலமாக அவரைப்பற்றி பல தகவல்களை அறிந்தேன். 

நூலைப் பற்றிய குறிப்பு : 
சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை, பா.தீனதயாளன், எஸ்.சந்திரமௌலி, கிழக்கு, முதல் பதிப்பு, ஏப்ரல் 2006, ரூ.60


Comments

அதிக வாசிப்பு

உதிரமாடன்குடியிருப்பு செம்புக்குத்தி அய்யனார் கோயில்

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அன்பளிப்பு : சீர்வரிசை சாமான்கள்