மக்கள் ஊழியச் சங்க நடுநிலைப்பள்ளி : 1-5ஆம் வகுப்பு

அப்போதெல்லாம் ஐந்து வயது முடிந்ததும் ஆறாம் வயதில் பள்ளியில் சேர்ப்பார்கள். அதனை பேர் சேர்க்கப் போகிறோம்என்பார்கள். தற்போது இதனை அட்மிசன் என்கிறோம். என் ஆறாம் வயதில் அம்மா என்னை மக்கள் ஊழிய சங்க நடுநிலைப்பள்ளிக்கு பேர் சேர்க்க (1970-71) அழைத்துச் சென்றார்கள். தலைமை ஆசிரியர் கேட்க, அம்மா என் பெயரையும், வயதையும் கூறினார்கள்.


அம்மா என்னை பேர் சேர்த்துவிட்டு வகுப்பறையில் உட்கார வைத்துவிட்டு, “மதியம் அக்காவுடன் வாஎன்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். என் அக்கா அந்தப் பள்ளியில்தான் படித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து நான்    “அம்மா”’ என்று அழாமல்  பொம்மி, பொம்மிஎன்று அழ ஆரம்பித்துவிட்டேன், வகுப்பு ஆசிரியர் என்னிடம், “பொம்மி என்றால் யார்?’ எனக் கேட்க, “பொம்மி என்றால் என் அக்காஎன்று கூறாமல் திரும்பத்திரும்ப பொம்மிஎன்று கூறிக்கொண்டிருந்தேன். உடனே ஆசிரியர் பெரிய வகுப்பில் படிக்கும்  மாணவிகளுடன் என்னை அனுப்பி அக்காவிடம் விட்டுவிட்டு வரச்சொன்னார்கள், அவர்களுடன் சென்றேன். ஒவ்வொரு வகுப்பாகக் காண்பித்து கேட்டார்கள். கீழே உள்ள வகுப்பறைகளில் பொம்மி என்ற பெயரில் யாரும் இல்லைஎன்று கூறவே, மாடியில் உள்ள வகுப்பறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே பொம்மி யார்?”  எனக் கேட்க என் அக்கா எழுந்து வந்தார்கள்.

  “அழாதேஎனக் கூறி அவர் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார்கள். “மதியம் வீட்டிற்கு போகலாம்எனக் கூறினார். நாங்கள் வீட்டிற்குப் போனபின்னர் நான் பள்ளிக்குச் செல்லமாட்டேன்என்றேன். “நாளைக்குப் பள்ளிக்கு நான் போகவேண்டும்என்று அம்மா கூறினார்கள்.

முதல் நாள் இருந்த பயம் அடுத்த நாள் இல்லாததால் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தேன். எங்கள் முதல் வகுப்பு ஆசிரியர் ராஜம்மாள் டீச்சர். அவர் ’, ‘என எழுதக் கற்றுக் கொடுத்தார். கற்றுக்கொடுத்தது, மணலிலா தவிட்டிலா என்று நினைவில்லை. பிறகு சிலேட்டில் எழுத சொல்லிக்கொடுத்தார்கள். தினமும் அக்காவுடன் போக ஆரம்பித்தேன்.

 இரண்டாம் வகுப்பிற்குச் சென்றதும் பயம் விட்டது. வகுப்பு ஆசிரியர் பூபதி சார். அவர் கையில் எப்போதும் ஒரு கம்பினை வைத்திருப்பார். சரியாக எழுதாவிட்டாலோ, சொல்வதைக் கேட்காவிட்டாலோ அடிக்க ஆரம்பித்துவிடுவார். மாணவிகளை அடிக்கமாட்டார், ஆகையால் அவரை எங்களுக்குப் பிடிக்கும். பாடம் அதிகம் தரமாட்டார்.

மூன்றாம் வகுப்பு ஆசிரியர் கணேசன் சார். அவர் அனைவரையும் ஒழுங்காக படிக்கும்படி கூறுவார். ஆங்கிலப்பாடம் எடுக்க வரும் அனுசியா டீச்சர் மூலமாக ’ ‘பி’ ‘சி’ ‘டிஎழுத்துகளை முதலில் கற்றோம். அவர், விலங்குகள், பறவைகள் மற்றும் பூக்களின் பெயர்களை உரிய படங்கள் ஒட்டப்பட்ட அட்டையைக் காட்டி ஆங்கிலத்திலும், தமிழிலும் சொல்லுவார். அவர் சொல்லச்சொல்ல நாங்கள் அனைவரும் ஒன்றாகக் கூறுவோம். மூன்றாம் வகுப்பு வரை தேர்வுகூட சிலேட்டில்தான். காலாண்டு, அரையாண்டு, இறுதியாண்டுக்கான தேர்வுக்குரிய மதிப்பெண்களை சிலேட்டில் உள்ளபடியே அழியாமல் வீட்டில் காண்பித்து வரவேண்டும்.

நான்காம் வகுப்பு ஆசிரியர் கலியபெருமாள் சார். அவர் அதிகம் அதட்டவோ, திட்டவோ மாட்டார். வகுப்பு ஆரம்பித்த ஓரிரு நாட்களில் தேவையான நோட்டுப் புத்தகங்கள் பற்றிய விவரத்தைக் கூறி எங்களைக் குறித்துக்கொள்ளச் சொல்வார். வரும் போது அட்டைபோட்டுக் கொண்டு வரும்படி கூறுவார். நாங்கள் அதனை ஒரு துண்டுச்சீட்டில் குறித்துக்கொண்டு, அப்பா கடைக்குச் சென்று அந்தச் சீட்டைக் கொடுத்துவிட்டு வருவோம். அப்பா வாங்கி அனுப்பியவற்றுக்கு காமராஜ் அண்ணன் அட்டை போட்டுத்தருவார்கள். அட்டை போட்டு முடியும்வரை அருகிலேயே உட்கார்ந்து கவனிப்போம்.

வாங்கிய புதிய புத்தகங்கள், நோட்டுகள், பென்சில் பாக்ஸ் அனைத்தையும் பிளாஸ்டிக் கூடையில் வைத்துக்கொண்டு செல்வோம். என் நண்பர்கள் துணிப்பையில் கொண்டுவருவதைப் பார்த்துள்ளேன். நான்காம் வகுப்பிலிருந்து எழுதவும் படிக்கவும் வீட்டுப்பாடங்களைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். தேர்விற்கு மதிப்பெண் அட்டை தர ஆரம்பித்தார்கள். மதிப்பெண் குறைவாக எடுத்தால் எங்கள் அப்பா அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவும்என்று அறிவுரை கூறுவார்கள்.

நான்காம் வகுப்பு படித்தபோது கங்கைகொண்ட சோழபுரம், சீர்காழி, சிதம்பரம், பூம்புகார், வடலூர் போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்றோம்.  

ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் வசந்தா டீச்சர். அவர் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பார். மாணவர்களை விட்டு அவல் வாங்கிவரச்சொல்லி சாப்பிடுவார்ஐந்தாம் வகுப்பிலிருந்து  பேனாவில் எழுத ஆரம்பித்தோம். வரலாறுதமிழ், ஆங்கிலம், புவியியல், அறிவியில், கணிதம் என ஆறு புத்தகங்கள், அந்த பாடங்களுக்கான நோட்டுகள் மற்றும்   இரண்டு கட்டுரை நோட்டுகள்  இருக்கும். வகுப்பாசிரியர் தரும் அட்டவணையின்படி நோட்டுகளை எடுத்துச் செல்வோம்,  காலை நான்கும் மதியம் மூன்றுமாக ஒரு நாளைக்கு ஏழு வகுப்புகள் இருக்கும். மாலை நான்கு மணிக்கு பள்ளி முடிந்துவிடும். வீட்டுக்குத் திரும்பியதும் விளையாடிவிட்டு அப்புறம் படிப்பேன்.         

முழு ஆண்டுத்தேர்வினைப் பேப்பரில் எழுதவேண்டும். தேர்வு முடிந்ததும் விடுமுறையின்போது வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குப் பதில்  எழுதவேண்டும். இப்போது அதற்குப் பெயர் அசைன்மெண்ட். விடுமுறையைக் கழிப்பதற்காக ஒரு வாரத்திற்குள்  எழுதி முடித்துவிட்டு தாயம், சில்லு, பல்லாங்குழிகேரம்போர்டுபுளியாங்கொட்டையில் ஒத்தையா இரட்டையா, கண்ணாமூச்சு, ஒளிந்து விளையாடல் போன்றவற்றை விளையாடுவோம்.

விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்று வினாத்தாளில் பார்த்து எழுதியதைக் கட்டாயமாக வகுப்பு ஆசிரியரிடம் தந்துவிடுவோம். நாம் படித்த பாடங்கள் மறவாமல் இருப்பதற்காகத்தான் இவ்வாறு எழுதச்சொல்வார்கள். “நீங்கள் இன்றிலிருந்து ஆறாம் வகுப்புக்குப் போக வேண்டும்என்று தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்களைக் கூறி அடுத்த வகுப்புக்கு அனுப்பினர்.

Comments

அதிக வாசிப்பு

இராஜராஜேச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

திருநாலூர் மயானம்

அமர்நாத் யாத்திரை