பழுவூர் உலா : மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்
அண்மையில் பழுவூரிலுள்ள கோயில்களுக்குச் சென்றிருந்தோம். அவற்றில் மேலப்பழுவூர் கோயிலைப் பற்றி இந்திரன் விமோசனம் பெற்ற திருத்தலம் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இன்றைய தினமணி இதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையின் மேம்பட்ட வடிவினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தினமணி இதழுக்கு நன்றி. -------------------------------- மேலப்பழுவூர் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் ஆன இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. பழுவேட்டரையர்களின் தலைநகராக விளங்கிய இவ்வூர் மன்னு பெரும்பழுவூர் என்று அழைக்கப்படும் பெருமையை உடையது. சாபம் நீங்குவதற்காக இந்திரன் மதுரையில் தவம் செய்தபோது அசரீரி இந்த ஊருக்கு வரும்படி கூறியதால் இந்திரன் வந்து இத்தல இறைவனை வணங்கி சாப விமோட்சனம் பெற்றதாகக் கூறுகின்றனர். இத்தலம் ஜமதக்னி ரிஷி வழிபட்ட பெருமையுடையதென்றும், தாயைப் கொன்ற பரசுராமரின் பாவம் நீங்கிய வகையில் பரசுராமர் தீர்த்தம் பெற்ற தலமென்றும் கூறுகின்றனர். இக்கோயில் சாலையிலிருந்து கீழே பள்ளத்தில் இறங்கி செல...